இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலி கான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,
"பசியாலும், பட்டினியாலும் என்னுடைய தாய் தமிழ் உறவுகள் வாடி வதங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களைக்கூட காப்பற்ற வக்கற்ற அரசாக மத்திய மோடி சர்க்கார் இருந்து வருகின்றது. அவர்களை கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அரசியல் சாசனத்தை வகுத்து கொடுத்த அம்பேத்காரின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இந்தியாவில் கரோனா என்று ஒன்று உலவுகின்றது என்றால், அதற்கு முழு பொறுப்பும் பிரதமர் மோடியையே சாரும். ட்ரம்ப் போன்ற ஆட்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்தனால் இந்தியாவில் எதாவது பலன் கிடைத்ததா ஒன்றும் கிடைக்க போவதில்லை, கிடைத்தும் இல்லை. இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தி இருக்கக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என்று பல நோய்களை இந்த நாடு தாங்கி இருக்கின்றது. இதற்கு முன்னாள் ஆண்ட தலைவர்கள் யாரும் இப்படி ஊரடங்கை அறிவித்தது இல்லை. பத்துக்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி அவர்கள் சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார். அந்த பயணத்தின் மூலம் குஜராத் முதலாளிகளுக்கு புரோக்கர் வேலைகளைதான் செய்துகொண்டு இருக்கின்றார். நமது வீரர்களை கொடூரமாக கொன்ற சீன நாட்டின் பெயரைகூட ஏன் பிரதமர் உச்சரிக்க மறுக்கின்றார். ஏன் பொருளாதார தடைகளை விதிக்கவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ஏன் நடத்த தயங்குகிறார். மதவெறியர்களால் அடிப்பட்டு கீழே கிடப்பவர்களிடம் வீரத்தை காட்ட காவல்துறையை பயன்படுத்த மட்டும் அவர்களுக்கு தெரியும். காஷ்மீரில் 370ஐ பிடுங்கி மக்களை அடக்கி ஒடுக்க பார்த்தார்கள். மக்கள் தலைவர்களை சிறையில் தள்ள பார்த்தார்கள். தற்போது எல்லையில் 60 கிலோ மீட்டருக்கும் மேல் கோட்டை விட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் அவர்கள் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.