நாம் தமிழர் கட்சியின் 'வீரத்தமிழர் முன்னணி' நடத்திய திருமுருகப்பெருவிழா திருச்செந்தூரில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. எப்பொழுதும் நாம் தமிழர் கட்சியின் கூட்டமென்றாலே சீமானின் பேச்சு தான் அனல் பறக்கும். ஆனால் திருச்செந்தூர் திருமுருகப்பெருவிழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு களைகட்டியது. இவர் மேடையேறியதும் மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
மேடையேறி சிறிது நேரம் பேசியவர் திடீரென பாடத்துவங்கிவிட்டார். அவர் முருகன் பாடலை பாடியுதும் மக்கள் கூட்டம் கைதட்டல்களை அள்ளிவீசியது. "ஞானப்பழத்தைப் பிழிந்து என்று தொடங்கி அதுவரை முருகனின் புகழ் பாடும் வரிகள் முடிந்ததும், "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா" என்பதை மாற்றி "பலம் நீயப்பா தமிழர் பலம் நீயப்பா" தமிழரின் பலம் நீயப்பா" என்று சீமானை புகழ்ந்து படத்தொடங்கிவிட்டார். அவர் பாடிய புகழ் கீதம் இது.
பலம் நீயப்பா தமிழனின் பலம் நீயப்பா
என் தமிழன் சீமான் அப்பா
பலம் நீயப்பா பலம் நீயப்பா தமிழ்நாட்டின் தல நீயப்பா
பலம் நீயப்பா பழம் நீயப்பா
பைந்தமிழர் படை நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில்
உருவாகி புலவோருக்குப் பொருள் கூறும்
படை நீயப்பா செந்தமிழரின் படை நீயப்பா
தமிழ்நாட்டின் தலை நீயப்பா
உலகெங்கும் தமிழை உயர்த்த வந்த தமிழ் நீயப்பா
பழம் நீயப்பா தமிழ் பழம் நீயப்பா
இன்றும் நீ வணங்காமுடியப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய்
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்
தமிழை எதிர்ப்போர்க்கு நெருப்பாய் வந்தாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய்
ஔவை பாட்டியின் தமிழ்பால் உண்டாய்
தமிழ் வளத்தை நம் நிலத்தை நாசமாக்கும்
நீசர்களை விரட்ட வந்த வேல் முருகனப்பா
வெகுடெழுந்த சீமானின் முறுக்கேறும் நரம்புகளில்
துடித்தெழும் வீரம் உண்டு
தாயுண்டு கோடி தம்பிகள் உண்டு
போராடும் களப்பணிக்கு கோடான கோடி தமிழர் உண்டு
உன் தத்துவம் சரி என்று ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத அறிஞனா நீ
மாறுவது மனம் சேருவது இனம் அறியாத முருகனா நீ
அறுபடை வீடு அடங்காத நாடு
மீத்தேன் ஒழிக்க அணுஉலை சாகர் மாலாவை ஒழிக்க
ஏறு மலை ஏறு மக்களிடம் நாடு
ஏறு மலை ஏறு மயில் மீது ஏறு
மக்களிடம் நாடு அரியணை ஏற வா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச்செல்வீர்
அரியணை ஏற வா நீ
என்று பாடலை முடித்த அவர், "உரக்கச் சொல்லுங்கள் நாம் தமிழர் என்று,ஓங்கிச்சொல்லுங்கள் நாம் தமிழர்" என்று தன் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். கரகோஷம் கடலில் கலந்து மூழ்க சற்று நேரமானது. இந்தப் பாடலை பாடிய கே.பி.சுந்தராம்பாளும், பாடலுக்கு இசை அமைத்த கே.வி. மகாதேவனும் , பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் ஆகியோர் இதை கேட்பதற்கு இல்லையே என்ற வருத்தம் வருகிறது.