Skip to main content

கணவன் மரணத்தில் விலகாத மர்மம்! - அலைக்கழிக்கும் அரசு!

டலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல். சிங்கப்பூரில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவர், கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் ஜூன் 25ந் தேதி சென்னை வந்தார். இவரை தனிமைப்படுத்துதல் என்ற பெயரில், சென்னை தேனாம் பேட்டை ஹயாத் ஹோட்டலில் தங்க வைத்திருந்த நிலையில், ஜூன் 29ந் தேதி இறந்துவிட்டதாக மூட்டைக் கட்டி அனுப்பியது தேனாம்பேட்டை காவல்துறை.

hh

இதையடுத்து, ‘என் தாலிக்கு பதில் சொல்லியே ஆகணும்’ என்று சுந்தரவடிவேலின் மனைவி சந்திரா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பி வெளியிட்ட கண்ணீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபற்றி உடனடியாக விசாரித்து, இதில் அலட்சியமாக செயல்பட்ட ஓட்டல் நிர்வாகம், தேனாம்பேட்டை காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுந்தரவடிவேல் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்திருந்த நகை, பணம் உள்ளிட்ட உடமைகள் களவு போயிருந்ததையும் ஆதாரத்துடன் நக்கீரனில் செய்தியாக வெளியிட்டோம்.

இந்நிலையில், கணவர் இறந்து 75 நாட்கள் கடந்தும் இறப்புச் சான்றிதழையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கண்ணீரோடு கதறுகிறார் சந்திரா. கொரோனா நோய்த் தொற்று இல்லாதபோதும், அரசு ஏற்பாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த சுந்தரவடிவேல் உயிரிழந்தது குறித்து அரசு அதிகாரிகளும், காவல்துறையும் தெளிவு படுத்த வேண்டும் என்று ஒன்றரை வயது கைக் குழந்தை சிவரட்சனுடன் போராடிக் கொண்டிருக்கிறார் அவர்.
hh
நாம் அவரைச் சந்தித்தபோது, “""இதுநாள் வரை ஹயாத் ஓட்டல் அறையில் என் கணவருக்கு என்ன நடந்தது என்பதை, காவல் துறையும் அரசு அதிகாரிகளும் தெளிவுபடுத்தவில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு சென்னைக்குப் போய் என் கணவரின் இறப்புச் சான்றிதழை வாங்க முடியவில்லை. எனவே, மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த சகோதரி கீதா மேடம், திட்டக்குடி ரமேஷ் மற்றும் சென்னையில் உள்ள நிர்வாகிகள், இறப்புச் சான்றிதழ் கேட்டு சென்னை மாநகராட்சி மண்டலம் ஒன்பதில் உள்ள அதிகாரி யிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சரியான விவரங்கள் இல்லையெனக் கூறி, அதை திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும், மாநகராட்சி மூலம் மீண்டும் இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி ரூ.200 அபராதமாக வசூலித்துள்ளனர். அதன்பிறகாவது இறப்புச் சான்றிதழ் கொடுத்தார்களா என்றால் இல்லை.

இறப்புச் சான்றிதழ் பெறவேண்டி என் கணவரை ஆம்புலன்சில் ஊருக்குக் கொண்டு சென்றதற்கான ரசீதைக் கேட்டு, தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்றால் இல்லையென்று கூறி அலைக்கழித்து பின்னர் கொடுத்துள்ளனர். இதேபோல், பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னமும் வரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஒரு பக்கம் காவல்துறை, மறுபக்கம் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் என எனக்காக உதவி செய்யும் மக்கள் பாதை இயக்கத்தினரை வேண்டுமென்றே அலைக்கழித்து, காலம் தாழ்த்துகிறார்கள். என் கணவரின் இறப்புக்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

எந்த ஆதரவும் இல்லாமல் இனி எப்படி வாழ்வது, குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்று ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணியே, இரவும் பகலும் தூக்கமின்றி துடித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு நீதி கிடைக்கும்வரை ஓயப் போவதில்லை. எனக்குத் துணையாக நக்கீரன் கோபால் அண்ணன் குரல் கொடுக்கிறார். பிற பத்திரிகை மீடியாக்கள், மக்கள் பாதை இயக்கத்தினர், அரசியல் மற்றும் சமூக இயக்கத்தினர் துணையுடன் போராட உறுதியாக இருக்கிறேன்.

சென்னை சென்று அங்கேயே தங்கி ஆவணங்களைப் பெறுவதற்கும், கொடுக்காமல் போனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி செய்வேன். சென்னை செல்வதற்காக எனக்கும் என் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். மருத்துவச் சான்றிதழ் கிடைத்ததுமே, சென்னை செல்ல இருக்கிறேன். மனமிருந்தால் என் கணவரின் இறப்புக்கான காரணத்தைச் சொல்லட்டும். இல்லையென்றால், வாழ வழியின்றி திக்கற்று தவிக்கும் என்னையும், என் குழந்தையையும் அரசே கொன்று போடட்டும்.

சிங்கப்பூரில் இருந்து நல்ல உடல்நிலையில் இருப்பதாக, மருத்துவச் சான்றிதழோடு வந்த என் கணவரை தனிமைப் படுத்துவதாக சொல்லி, தனியறையில் தங்கவைத்து அவரைக் கண்காணிக்காத ஓட்டல் நிர்வாகம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நாங்கள் இப்போது தவிக்கிறோம். என் கணவரின் இறப்பு தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் கொடுக்காமல், காரணத்தையும் தெரிவிக்காமல் எங்களை, எங்களுக்காக துணை நிற்பவர்களை இப்படி அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம். இத்தனைக்குப் பிறகும் மவுனமாக கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு மற்றும் அதன் அதிகாரிகளின் மனம் ஈவு இரக்கமற்ற கல்லாகிப் போனதா?'' என்று விம்மியழுதார் சந்திரா.

பத்திரிகை வெளிச்சம், இயக்கங்களின் ஆதரவு இருந்துமே சுந்தரவடிவேலின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விளக்க அரசு நிர்வாகம் மறுப்பது, மேலும் சந்தேகத்தை வலுக்கத்தான் செய்கிறது.

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்