பா.ஜ.க.வினருக்கு அப்படியொன்றும் பெரிய கொள்கையெல்லாம் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கையும் மனிதர்களின் மேன்மை சார்ந்தது அல்ல.
ஆனால், மனிதர்கள் எல்லோரும் சமம் என்றும், மனிதர்களுக்குள் சாதிகள் கிடையாது என்றும் பேசுகிறவர்களை அவர்கள் எதிர்ப்பார்கள். சுருக்கமாக சொன்னால் மாட்டு மூத்திரத்தை மருந்து என்று நம்பச் சொல்வார்கள். அழுக்கு உருண்டையை கடவுள் என்று வணங்கச் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஆக இருப்பவரிடம் தத்துவார்த்தமான கருத்துக்களை எதிர்பார்க்கக்கூடாது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் எச்.ராஜா வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
பெரியார் சிலையை செருப்பால் அடிப்பேன் என்று பேசித்திரிந்தார். ஆனால், அவருடைய வன்முறை நோக்கத்தை புரிந்த பெரியாரிஸ்ட்டுகள், அவரை அப்படியே போக விட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கருத்தை வெளியிடுவதும், அதற்கு சமூக வலைத்தளங்களிலேயே அசிங்கப்படுவதும் எச்.ராஜாவின் வழக்கமாக மாறிவிட்டது.
இப்போது, திரிபுராவில் வெற்றிபெற்ற பாஜகவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த லெனினின் சிலையை உடைத்திருக்கிறார்கள். அந்தப் போட்டோவை எடுத்துப்போட்டு, நாளை பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று எச்.ராஜா பதிவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து அவருடைய அறிவின் விசாலத்தை தெரிந்துகொள்ள முடியும். லெனின் சிலையை உடைப்பதாலோ, பெரியார் சிலையை உடைப்பதாலோ அவர்களுடைய சித்தாந்தங்களையோ, மனிதர்களை பிரித்தாண்ட மனுநீதிக்கு எதிராக அவர்கள் நிலைநாட்டிய சமூகநீதியையோ சிதைத்துவிட முடியாது.
உடனே, பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கவில்லையா என்று கேட்கிறார்கள். பெரியார் பிள்ளையார் சிலையை மனுநீதியின் அடையாளமாகத்தான் வைத்திருந்தார். மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளைக் கற்பித்த மனுநீதியை உடைப்பதற்கே பிள்ளையார் சிலையை பயன்படுத்தினார்.
பிறருடைய வழிபாட்டு நம்பிக்கையை அவர் எப்போதும் கேலி செய்ததில்லை. மாறாக மனிதர்களை பிரித்தாளும் இந்து மதத்தின் போக்கையே அவர் எதிர்த்தார்.
தந்தை பெரியாரோ, மாமேதை லெனினோ மதத்தின் பெயரால் மனிதர்களை அடிமைப்படுத்தும் போக்கைத்தான் எதிர்த்தார்கள். சக மனிதனை சாக்கடைப் புழுவாக கருதும் மேலாதிக்கத்தையே எதிர்த்தார்கள்.
உலகின் முதல் பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவியவர் லெனின். இன்று அவர் நிறுவிய சோவியத் யூனியன் சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சோவியத் யூனியன் சிதைக்கப்பட்ட பிறகு மூன்றாம் உலகநாடுகளை அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கு எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறது உலகம். இப்போதும் மூன்றாம் உலக நாடுகளின் ஒரே நம்பிக்கையாக ரஷ்யாவும், சீனாவும்தான் இருக்கின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அதுபோலத்தான், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மனுநீதியை உடைத்தெறிந்து, மனிதநீதியை நிலைநாட்டிய திராவிடர் இயக்கத்தையும், தந்தை பெரியார் தலைமையில் உருவான திராவிட சித்தாந்த அரசியலையும் எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மாமேதை லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிற சித்தாந்தங்களை உள்வாங்கியிருக்கிற தலைமுறைகளை காவிகளால் ஒழிக்க முடியாது. அது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சமூகநீதியை பாதுகாக்கும் என்பதை எச்.ராஜாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த எளிமையான உண்மையை உணராதவர்களுக்கு, காலம் கட்டாயமாக பாடம் கற்பித்தே தீரும்.