13 மார்ச் 2016... தமிழகத்தை அதிர வைத்த நாள். உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகே, பொது வெளியில், பட்டப்பகலில், மக்கள் முன்னிலையில் அரங்கேறியது ஒரு கொடூர செயல். தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் என்ற சக மாணவனை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த கௌசல்யாவும் அவரது காதல் கணவர் சங்கரும் கூலிப்படை கும்பலால் வெட்டப்பட்டனர். கௌசல்யா படுகாயமடைய, சங்கர் உயிரிழந்தார். தமிழகம் கண்ட சமூக நீதி, முற்போக்கு, மனிதாபிமானம் உள்ளிட்ட பல விஷயங்களை அசைத்துப்பார்த்தது இந்தக் கொடூர செயல். 2017ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையினர் ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கியது. கௌசல்யாவின் தாய் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்து, நேற்று (22 ஜூன் 2020) தீர்ப்பளிக்கப்பட்டது. கௌசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டார். பிறருக்குமான தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.மீண்டும் ஒரு முறை உடைந்து இருந்தார் கௌசல்யா. அவரிடம் பேசினோம்...
இந்தத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
எதிர்பார்க்கவே இல்லை தோழர். இவ்வளவு வெளிப்படையாக நடந்த, 164 பேர் சாட்சியாக இருக்கும் ஒரு குற்ற வழக்கில், அக்யூஸ்ட் நம்பர் 1 விடுவிக்கப்படுவார் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை. பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
என் பெற்றோருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லைன்னா, அந்த கூலிப்படைக்காரர்களுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? சின்ன வயசுல இருந்து நான் அவுங்கள ஒரு தடவ கூட பார்த்ததில்லை. சங்கரும் அப்படித்தான். எந்த வித சம்மந்தமும் இல்லாத ஒருத்தவங்க எங்களை எதுக்கு வெட்டணும்? சம்பவம் நடந்ததுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமைதான் இவுங்க எல்லோரும் வந்து மிரட்டிட்டுப் போனாங்க, ‘யாராவது ஏதாவது பண்ணிட்டா எங்கள சொல்லக்கூடாதுன்னு...’. அப்புறம் எப்படி இது அவர்கள் தொடர்பில்லாம நடந்திருக்கும்?
அந்த சம்பவம் நடந்தபோது வெளிவந்த வீடியோ மிக சக்தி வாய்ந்த ஒரு ஆதாரமா இருந்தது. இப்போ அது கேள்விக்குள்ளாகி இருக்கா?
எங்களுக்கு இந்தக் கொடுமை நடந்தபோது அந்த வீடியோதான் முக்கிய ஆதாரம். அந்த வீடியோ, யாராலும் காரணத்தோடு எடுக்கப்பட்டதல்ல. மிக இயல்பாக நடந்த சம்பவம் பதிவானது. அந்த சம்பவத்தில் வீடியோ ஆற்றிய பங்கை வைத்து பல சம்பவங்களில் வீடியோ ஆதாரங்கள் தேடப்பட்டன. பல முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆதாரமே இப்போ கேள்விக்குள்ளாக்கப்பட்டது வேதனையளிக்குது. மேலும் வழக்கு நடந்த விதத்திலும் மாற்றம் இருந்தது. திருப்பூரில் வழக்கு நடந்தபோது, அந்த வழக்கறிஞர் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், நிறைய விவரங்களை கேட்டாங்க. அந்த டி.எஸ்.பியும் ரொம்ப நேர்மையா, கண்ணியமா நடத்தினார். ஆனால், இங்க எல்லாமே மாறியது. என்னிடம் யாரும் பேசவில்லை. நானே கேட்டபோதும் "வழக்கு நடக்குதும்மா... தள்ளி போகுதும்மா"னு மட்டும்தான் சொன்னாங்களே தவிர என்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.
அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று சொல்லியிருக்கு. நீங்களும் சட்ட நடவடிக்கைகளை தொடர்வோம் என்று சொல்லியிருக்கீங்க. எந்த வகையில் இந்த வழக்கில் உங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?
உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கறிஞர் அமைத்து, அரசு செய்யும் மேல்முறையீட்டில் கூடுதலாகப் பணியாற்றலாம் என்று இருக்கிறோம்.
நேற்று தீர்ப்பு வெளியான போது சங்கரின் நினைவுகள் இருந்ததா? எப்படி இருந்தது?
அது சொல்ல முடியாத ஒரு வலி. என்னால எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியல. எல்லோரும் சொல்றாங்க, 'உனக்கென்ன நீ இன்னொருத்தர கட்டிக்கிட்ட... வேற வாழ்க்கை அமைச்சுக்கிட்ட'னு... அவுங்கவுங்களுக்கு நடந்தாதான் தெரியும். எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும் சங்கரின் அரவணைப்பு வராது. அவனுக்கான நீதிப்பயணம் தொடரும். அதில் எந்த சிறு தடையையும் எனது புதிய வாழ்க்கை ஏற்படுத்தாது. அந்த நீதிப்பயணத்துக்கு என்னை ஒப்புக்கொடுத்துதான் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.
சமூகத்தில் சாதி முக்கிய அங்கமாக இருக்கு... சமூக ஊடகங்களில் உங்கள் மீது வன்மம் பெருகி இருக்குன்னு சொல்றீங்க... அப்படியிருக்கும்போது இந்த ஒரு குடும்பத்தை மட்டும் தண்டித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?
உண்மைதான்... இது சமூக நோய்தான். சமூக ஊடகங்களில் இப்படி பேசுபவர்கள், இதை ஆதரிப்பவர்கள் எல்லாரும் இதன் பின்னணிதான். ஆனால், அவர்கள் கொலை செய்யாமல் இருக்குறாங்க. இவுங்க கொலை செஞ்சுட்டாங்களே? எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால், விடலையே...? நாங்க வெட்டுப்பட்டு ஆம்புலன்ஸில் சென்ற அந்த காட்சி என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ இவர்கள் விடுதலை செய்யப்படுவதால் சாதி ஆணவக்கொலை செய்யும் எண்ணம் சுலபமாக வரும். மேல்முறையீட்டில் தப்பிக்கலாம் என்று நினைப்பார்கள்.
இனி எனக்கே என்ன நடக்கும்னு அச்சுறுத்தலா இருக்கு. பவரை பயன்படுத்தி தண்டனையிலிருந்து வெளியே வர முடியுமென்றால், 'இன்னொரு பத்து லட்சம்தானே, இன்னொரு அஞ்சு பேரை வச்சு கொலை செய்துவிட்டு அவுங்கள தண்டனை அனுபவிக்கவிட்டுக்கலாம்' என்ற எண்ணத்தில் எங்களை எதுவேண்டுமானாலும் செய்ய முடியும். எனக்கு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் எண்ணம், மரண தண்டனை கொடுக்கணும்னு எப்பவும் நினைக்கல. ஆனால், தண்டிக்கப்படணும்.
உரையாடலின் தொடர்ச்சி...
"என் அப்பா இன்னும் உணரல... என் தம்பி மாறிவிட்டான்...” - கௌசல்யா உணர்வலை #2