Skip to main content

‘கேஷ்’-சுக்கே திரும்பிய கேஷ்லெஸ் கிராமம்!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017


ஒரு நாட்டின் உயர்பதவியில் இருக்கும் ஒருவர் எடுக்கும் எந்தவொரு முடிவும், அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சாதித்துவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால், தோற்றுவிட்டால் மக்கள் கொளுத்திவிடும் அளவிற்கு கொந்தளித்துவிடுவார்களே. அதேபோலத்தான் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவித்தார். நாட்டு மக்களிடையே புழக்கத்தில் இருந்த 86% ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்த அறிவிப்பால் பணத்தட்டுபாடு ஏற்பட்டு வங்கியிலும், ஏடிஎம் வாசல்களிலும் பணத்திற்காக மக்கள் கால்கடுக்க நெடுவரிசையில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். உண்மையில் நாட்டு நன்மைக்காகதான் என்ற எண்ணத்தில் கால்கடுக்க நின்றிருந்த மக்களுக்கு நினைத்தது நடந்ததா? 

பணத்தின் மதிப்பு செல்லாது என்ற அறிவித்த சமயத்தில், மகாராஷ்டிரா மாநிலம் தாசாய் எனும் கிராமம் 2016 டிசம்பர் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனைக்கு (அறிவிப்பு வெளியான ஒரு மாதத்தில்) முழுமையாக மாறியதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக செய்திகள் பரவின. பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிய இந்தியாவின் இரண்டாம் கிராமம் என்றும், சலூன் கடை முதல் மளிகைக்கடை வரை அனைத்து வியாபாரிகளும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், நாடையே திரும்பிப் பார்க்க வைத்தது அந்த கிராமம்.



இந்த செய்தி வெளிவந்து சரியாக 10 மாதம் கழிந்துள்ள நிலையில், தாசாய் கிராமத்தின் தற்போதைய நிலை குறித்து அந்த கிராம மக்கள், வியாபாரிகள் பணமில்லா பரிவர்த்தனை குறித்த தங்களது அபிப்ராயங்களைத் தெரிவித்துள்ளனர். உண்மையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முறையான வளர்ச்சியில்லாத கிராமத்தில்(நாட்டிலேயே சரியாக இல்லை), பணமில்லா பரிவர்த்தனை வெற்றிபெற்றதா? அந்த கிராம மக்களே சொல்கின்றனர். கேளுங்கள்..

பணமில்லா பரிவர்த்தனை குறித்து தொடக்கத்தில் எந்த விழிப்புணர்வும் இல்லாததால் எங்கள் கிராமத்தில் 100க்கு 70% சதவீத வியாபாரிகள் ஆர்வத்துடன் ஸ்வைப்பிங் மிஷின்களை வாங்கினோம். ஆனால், அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் பின்னர்தான் எங்களுக்கு தெரியவந்தது. முதலில் எங்கள் கிராம மக்கள் யாரிடமும் கிரெடிட், டெபிட் கார்டுகள் கிடையாது. அதற்குமுன் எங்களில் பலரிடம் வங்கிக்கணக்கே கிடையாது. நிலையான வருமானம் வரும் எந்த வேலையும் இல்லாத மக்கள் எப்படி வங்கியில் கணக்கு வைத்திருப்பார்கள்? வங்கிக்கணக்கு வைப்பதற்கான தேவையும் அவர்களுக்கு ஏற்படவில்லை. ஏற்கனவே கிரெடிட், டெபிட் கார்டுகளை வைத்திருந்தவர்கள் மட்டுமே முதலில் பணமில்லா பரிவர்த்தணையை பயன்படுத்தி வந்தார்கள். அவர்களும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 2% கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருந்ததால் பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டை நிறுத்திவிட்டு பண பரிவர்த்தனைக்கே திரும்பிவிட்டார்கள். நாங்களும் ஸ்வைப்பிங் மிஷின்களை வாங்கிய முதல் 10 - 20 நாட்கள் மட்டுமே பயன்படுத்தினோம். தற்போது ஸ்வைப்பிங் மிஷின்களை எந்த வியாபாரிகளும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் பெயருக்கு அதை வைத்திருந்தாலும் அதில் எந்த பணபரிவர்த்தனையும் நடப்பதில்லை என்றனர்.



ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தாசாய் கிராமத்தை டிஜிட்டல் கிராமமாக மாற்றவதற்கான முயற்சியில் ஈடுபட்ட தாசாய் சாஹர் வியாபாரிகள் சங்க தலைவர் கூறும் போது, அரசாங்கமே பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளச் சொன்னது. ஆனால், தற்போது அந்த அரசாங்கமே எங்களுக்கு எந்த உதவிகளும் செய்வதில்லை. தாசாய் கிராமத்தை பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற்றுவதற்காக முதலில் எங்கள் கிராமத்தில் உள்ள விஜயா வங்கி மற்றும் தானே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடம் ஸ்வைப்பிங் மிஷினிற்கான அனுகினோம். இரு வங்கிகளும் ஸ்வைப்பிங் மிஷினிற்கான முன்பண தொகையையும், மாதாந்திர கட்டணத்தையும் அதிகப்படியாக கூறியது. இதையடுத்து பேங்க் ஆப் பரோடா வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாதந்திர வாடகை இல்லாத வகையில் ஸ்வைப்பிங் மிஷின்களை கொடுக்க சம்மதித்தது. இதேபோல் எங்கள் கிராமத்தில் நெட்வொர்க் ஒரு மிகப்பெரிய பிரச்சனை, இதற்காக பிஎஸ்என்எல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்களில் எங்கள் கிராமத்தில் நெட்வொர்க் எல்லையை விரிவுபடுத்தும்படி பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை அந்நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

தாசாய் கிராமத்தில் மேலும் சிலர் கூறும்போது, இவை அனைத்தும் வேடிக்கையான நாடகம், தாசாய் கிராம மக்கள் பலரிடம் வங்கிக்கணக்கே கிடையாது. பின் அவர்களிடம் எப்படி கிரெடிட், டெபிட் கார்டுகள் இருக்கும்? அவர்கள் எப்படி ஸ்வைப்பிங் மிஷின்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை செய்வார்கள்? எங்கள் கிராமத்தில் பலரும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், அவர்களும் சம்பளத்தை ரொக்கமாகவே பெறுவார்கள். மாதஊதியம் பெறுபவர்கள் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை யெல்லாம் செய்யமுடியும், அப்படி வேலைவாய்ப்புக்கு இங்கு பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எதுவும் அருகில் இல்லை. அப்படி இருக்கையில் வருமானம் ஈட்டுவதற்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த பழங்குடி கிராமத்தில் எப்படி இது சாத்தியமாகும்? மோடியின் திட்டங்கள் அனைத்தும் ஊடகங்களில் மட்டுமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகின்றன. எங்கள் கிராமத்தை வைத்து அரசியல் செய்துவிட்டார்கள். அதனாலே எங்கள் கிராமம் கேஷ்லெஸ் தாசாய் என்று அழைக்கப்பட்டது என்கின்றனர்.



இப்படி வேலைவாய்ப்புக்கே வழியில்லாத, பணம் சம்பாதிக்கமுடியாத கிராம மக்களிடம் பணபரிவர்த்தனை செய்யாதே, வங்கிகணக்கு தொடங்கு, கிரெடிட், டெபிட்கார்டு பயன்படுத்து என்று ஆசைகாட்டுவதாலும், அந்த மக்களுக்கு எந்தவித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத சூழலில், தேவையில்லாத விஷயங்களை அவர்களிடம் திணிப்பதனாலும் எந்தமாற்றமும் வந்துவிடப்போவதில்லை. 

ஒருவேளை 50 நாட்களுக்குள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மாற்றங்கள் நிகழவில்லை என்றால் என்னைக் கொளுத்துங்கள் என கண்கலங்க பேசினார் மோடி. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 300 நாட்கள் கடந்துவிட்டன. இந்த நடவடிக்கை முழுமையாக தோற்றுப்போனதாக மாறிவிட்டது என்று சொன்னால் மோடி என்ன சொல்லப்போகிறார்? அவருக்கென்ன.. 2018 ஜனவரிவரை காத்திருங்கள் என்பார். 

- இசக்கி

சார்ந்த செய்திகள்