கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மக்கள் பலியான வேகத்தைவிட ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 116 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஐரோப்பாவில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இதன் தாக்கம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் கரோனாவால் இத்தாலி 368 பேர் பலியாகியுள்ளார். இத்தாலியில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,809 ஆகவும், ஸ்பெயினில் ஒரேநாளில் 97 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இப்போது சீனாவில் நடந்ததை விட மிக வேகமாக பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என தெரியவந்துள்ளது.