பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.
என்கின்ற புறப்பொருள் வெண்பா மாலைக்கு உதாரணம் காட்டுவதாய் அமைந்துள்ளது தான் கீழடி அகழாய்வு.!
"மனு தர்மம், வருணாசிரமக் கொள்கை இவைகளைக் கொண்டு, இது தான் நாகரீகம் எனக் கூறி சமஸ்கிருத ஆரிய மாயை நம்மை அடிமைப்படுத்திய வேளையில், உலகிற்கெல்லாம் மூத்தக்குடி தமிழர்களே.! என செவிட்டில் அறைந்து நிதர்சனத்தை உணர வைத்தது கீழடி ஆய்வு. இது பொறுக்காத ஆளும் பா.ஜ.க. அரசு ஆய்வில் மண்ணை அள்ளிப்போட்டு மூடியது தான் வேதனையே.!
வணிகம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என கோவலனையும், கண்ணகியையும் பூம்புகாரிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்த கவுந்தியடிகளோ. " அதோ அங்கு கிழக்குப் பக்கமிருக்கின்ற நகரம் தான் மதுரையாக இருக்கக் கூடும்." என்கிறார். அப்படியெனில் அவர் காண்பித்தது அன்றைய மதுரையான இன்றைய கீழடியை. இன்றைய மதுரை இங்கிருந்து 12 கி.மீ.தான். சிவகங்கை மாவட்டத்தின் விளிம்பில், கீழடி எனும் ஊருக்கு கிழக்கு முகமாய், மணலூர் கண்மாயின் மேற்கரையில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது கிறிஸ்து ஆண்டுக்கு முந்தைய தமிழ் நாகரீகம். அகழாய்வில் கிடைத்தப் பொருட்கள் ஏறக்குறைய 2300 ஆண்டுகள் முந்தையது கீழடி நாகரீகம் என்றுரைக்க, “ கீழடி அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று புகழ்ந்திருக்கின்றார் மறைந்த முன்னாள் முதல்வரும், தமிழிற்கு, தமிழ் சமூகத்திற்கு அரும்பெரும் பணியாற்றியவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
2013-2014 காலக்கட்டங்களில் வைகை தொடங்கும் இடமான தேனி மாவட்டத்திலிருந்து, வைகை முடிவுற்று ராமநாதபுரம் மாவட்டம் கடலில் கலக்கும் இடம் வரை உள்ள ஆற்றங்கரையோரங்களிலும், அதனின் அருகாமையிலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட நாகரீகத்தின் எச்சங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட இடங்கள் மட்டும் 293. மண் களஞ்சியங்கள், வணிக துறைமுகங்கள், வாழிடங்கள் என இருந்ததில் வருஷநாட்டு மலைப்பாங்கான இடமும், ராமநாதபுரம் அழகங்குளமும் மட்டுமே பகுத்து ஆராயப்பட்டன. எனினும், தமிழகத்தில் கீழடி பள்ளிசந்தைப் புதூர் ஆய்வே மிகப்பெரிய ஆய்வு என்கின்றது புள்ளி விபரங்கள்.
"110 ஏக்கர் நிலங்கள் கீழடி அகழாய்விற்கு ஒதுக்கப்பட்டப் போதிலும் வெறும் ஒரு ஏக்கருக்கும் குறைவான பரப்பளவிலேயே தான் கீழடியில் ஆய்வினை நடத்தி முடித்திருக்கின்றனர்ர் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வுப் பிரிவு-6ம் அணியினர். மார்ச் 2015 தொடங்கிய முதல் ஆய்வு, நான்காம் கட்டமாககடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அந்த ஆய்வில் தங்க காதணிகள், பொம்மைகள், அச்சுக்கள், பழங்கால அடுப்புகள், கட்டிட சுவர்கள், குதிரன் என்ற பெயர் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 820 பொருட்கள் கிடைத்திருக்க, "பதிமூன்றாம் நூற்றாண்டில், இந்த ஊர் “குந்திதேவி சதுர்வேதி மங்களம்” என ஒரு பாண்டிய அரசியின் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. உருவங்களற்ற தாய் தெய்வ வழிபாட்டு அடையாளங்களும், 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொழிற்சாலை இருந்தமைக்கான அடையாளமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது தான் தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது.
சங்க இலக்கியங்களும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் முடிவுகளும், கால்டுவெல்லின் மொழி ஆய்வும் ஆரியர்களுக்கு முன்பே சமூக மற்றும் கலாச்சாரங்களில் பெருமைபட வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதனை நிரூபித்துள்ளது இந்த அகழாய்வு. இது வேத நாகரீகமும், சமஸ்கிருதமுமே உயர்ந்தது, உலகிற்கெல்லாம் முன்னோடி என பரப்புரை செய்து வரும் இந்துத்துவாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது தான் உண்மையும் கூட.. அதனால் தான் கீழடி அகழாய்வில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது மத்திய அரசு.!" என்கின்றனர் விபரமறிந்த தொல்லியல் ஆர்வலர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பரோ கூறியதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள கட்டாயத்தில் இருக்கின்றோம்.." “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று.! ஒவ்வொரு தமிழரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்தாலொழிய கீழடி ஆய்வினை தொடராது மத்திய அரசு.! குரல் கொடுப்போமா..? 5ம் கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.