தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதைப் பொதுமக்கள் கையில் எடுத்துவிட்டார்கள் என்று தெரிந்தாலோ, அல்லது பொதுமக்கள் அந்த பிரச்சனையால் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் பல்வேறு தரப்பும் அதற்காக அடையாள போராட்டங்களை நடத்துவதுண்டு. சமீப காலமாக அந்தப் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஜல்லிக்கட்டுக்கு பொது மக்கள் காட்டிய பெரும் எழுச்சியின் விளைவு இது.
அரசியல் கட்சிகள், அமைப்புகளைத் தாண்டி வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம் ஆகியவை இதில் அடக்கம். அந்த வகையில் மக்களுக்கு நாளுக்கு நாள் நெருக்கமாகிக் கொண்டிருக்கும் ஒரு அணியும் புதிய சங்கத்தை உருவாக்கி மக்கள் பிரச்சனைக்காக போராட்டத்தை நடத்தியுள்ளது. சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் சேர்ந்து பெரும் போராட்டம் நிகழ்த்திய அன்று தான் இவர்களின் போராட்டமும் நடந்தது.
யூ-ட்யூப் சேனல் போன்ற ஆன்லைன் மீடியாக்களை சேர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் மீடியா சங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோபி
இந்த ஆர்ப்பாட்டத்தில் ப்ளூ சட்டை மாறன், கோபி-சுதாகர், பிரசாந்த், விக்னேஷ் உள்ளிட்ட பல யூ-ட்யூப் பிரபலங்கள் மற்றும் விஜேக்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் சினிமா விமர்சனத்தில் பிரபலமானவரும் இந்த டிஜிட்டல் மீடியா சங்கத்தின் தலைவருமான 'ப்ளூ சட்டை' மாறன் பேசுகையில், "எங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பலரும், 'ஏன் நீங்கள் மக்கள் பிரச்சனையை பேசக்கூடாது?' என்று கேட்டார்கள். இந்த டிஜிட்டல் மீடியா சாதாரணமான ஒன்றல்ல, ஒரே க்ளிக்கில் கோடி பேர்களை ஒரு விஷயத்தை கவனிக்க வைக்கும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. அதைக் கொண்டு மக்கள் பிரச்சனைகளைப் பேசத் தயாராகியிருக்கிறோம். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணிக்குத்தான் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தார்கள். அதுவும் ஒரு மணி நேரத்திற்குதான். ஏன் ஒரு மூன்று மணி நேரம் கொடுத்திருக்கலாமே? எங்கள் மீது யாருக்கு என்ன பயமோ? இருந்தாலும் இது வெறும் தொடக்கத்தோடு முடிந்துவிடாது. கண்டிப்பாக மக்கள் விஷயங்களில் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
'பரிதாபங்கள்' கோபி பேசுகையில், "நாங்க சின்ன வயசுல இருந்து பார்த்துட்டோம். எல்லாரும் கூட்டணி வைக்கிறாங்க, தீர்வு தர சொல்றாங்க. இதெல்லாம் கேட்டு காது புளிச்சுப்போச்சு. தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிஞ்சுக்க நீங்க நெட்ல சவுத் ஆப்பிரிக்கால இருக்க கேப் டவுன் அப்படிங்கிற இடத்த பத்தி படிச்சுப் பாருங்க, தண்ணீரோட அவசியம் தெரியும். ஐபிஎல் போங்க, அது உங்க விருப்பம். ஆனா இவ்வளவு நாள் எந்த கட்டுப்பாடும் இல்லை. இப்போ ஜட்டி கூட கருப்பா அணியக் கூடாதாம். நான் கேட்கிறேன், நான் என்ன கலர் உள்ளாடை அணியனும்னு என் அம்மா அப்பாவே சொல்ல முடியாது, இவங்க யாரு? மொபைல் போன் எடுத்துட்டு வரக் கூடாதாம். கல்லூரிக்கு மொபைல் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொன்னாவே கேட்கமாட்டோம். இதுல ஐபிஎல்க்கு மொபைல் எடுத்து வரக்கூடதாம்.
பிரசாந்த்
பொருளாளர் 'ஸ்மைல் சேட்டை' விக்னேஷ், "ஐபிஎல் மேட்ச்க்கு உள்ள போறவங்கள நெனச்சு பயப்படுறோம். கருப்பு உள்ளாடைக்கு தடையாம். இப்போலாம் பேன்சி ஸ்டோர்ல கூட கருப்பு ரிப்பன், கருப்பு பலூன் விக்கக்கூடாதாம். ஏன்னா மோடி வரும்போது அதை காட்டி எதிர்ப்பு தெரிவிப்போமாம். அப்டினா எரும கருப்புதான? நாங்க 10 எருமைய வரிசையா மேச்சிட்டு போனா தடுக்க முடியுமா? எல்லார் வாயையும் மூடிறலாம், உள்ள கமெண்ட்ரில இருக்காரு எங்காளு. அவர் வாய மூட முடியுமா? ரெண்டு வார்த்தை காவிரி பத்தி பேசமாட்டாரா? கண்டிப்பா ஜல்லிக்கட்டு மாதிரி இதுவும் நடக்கும்" என்றார். அவர் குறிப்பிட்ட கமென்டேடர் ஆர்.ஜே.பாலாஜி சென்னையில் அன்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் பணியாற்ற மறுத்து அதற்கான காரணத்தை விளக்கி வீடியோவும் வெளியிட்டார்.
போலீஸார் அனுமதிப்படி ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கண்டன போராட்டத்தை கோஷங்களுடன் நிறைவு செய்தனர். இந்த புதிய சங்கத்தின் போராட்டமும் ஒரு அடையாளமாக மட்டும் நின்றுவிடாமல், வேறு நோக்கங்களுக்காக சென்று விடாமல் மக்களுக்கானதாக தொடர வேண்டும். தொடருமா என்று பார்ப்போம்.