Skip to main content

நகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்..! பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

 

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ஆம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.  
 

இந்தநிலையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், சுரேஷ் என்ற கொள்ளையன் செங்கம் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். மேலும் இந்த வழக்கில் மணிகண்டன், சுரேசின் தாயார் கனகவள்ளி, முருகனின் நண்பனான கணேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசிடம் திருச்சி கோட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். 

 

Jewel


 

இதுபற்றி திருச்சி தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் கூறியபோது, ''சுரேஷை விசாரித்தபோது சில விசயங்கள் தெரிய வந்துள்ளன. முருகன் கொள்ளையடித்த பணத்தில் சினிமா தொழிலில் முதலீடு செய்யலாம் என்று நினைத்துள்ளார். இதற்காக ஐதராபாத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்றும் கூறியுள்ளார். தெலுங்கு பட உலகில் சிலரை சந்தித்துள்ளான். அப்போது பலர் அதிகமாக சம்பளம் கேட்டதால் சுரேஷையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளான்.  


 

 

சுரேஷ் மேலும் கூறும்போது, ஆத்மா என்ற படத்தை எடுக்கும்போது பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது. பின்னர் மான்சா என்ற படம் தயாரிக்க திட்டமிட்டு ஒரு நடிகையை சந்தித்தபோது அந்த நடிகை 50 லட்சம் கேட்டார். அப்போது பேசி முன்பணமாக 6 லட்சம் கொடுத்தோம். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த நடிகைக்கு முழுத் தொகையை கொடுக்க இயலவில்லை. இதனால் அந்த நடிகை கோர்ட்டுக்கு போனார். அந்த பிரச்சனை நீடித்து வருகிறது. 
 

மீண்டும் பணத்தை தயார் செய்து படம் எடுப்பதற்காக பல முன்னணி தமிழ் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது ஒரு தமிழ் நடிகையை ஐதராபாத்தில் நானும், முருகனும் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தான் பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது சில நகைகளை காண்பித்தோம். நன்றாக இருக்கிறது என்றார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்துள்ளோம் என்றதும், அப்படியா என்றவர் நெருக்கி பழக ஆரம்பித்தார். 
 

எங்களிடம் நெருங்கி பழகியதால் அந்த நடிகைக்கு முருகன் நகைகளை பரிசாக அளித்தார். அந்த நடிகையும் மறுக்காமல் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டார். அதிலிருந்து நாங்கள் தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நெருக்கமாக பழகினோம்'' என்று தெரிவித்துள்ளான். 


 

 

முருகன், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கொள்ளையர்கள் என்று தெரியாமல், நகைக்கடை அதிபர் என்று நம்பி நகையை பரிசாக பெற்று அவர்களிடம் பழகிய நடிகைகளை லிஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் போலீசார். அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த நகைகளை பரிசாக பெற்றது பற்றி விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
 

இதனால் கொள்ளையர்கள் என்று தெரியாமல் முருகன், சுரேஷிடம் பழகிய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் தற்போது பதட்டத்தில் உள்ளனர். விசாரணையில் அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், சம்மந்தப்பட்ட நடிகைகளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிப்பதுடன், முருகனையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் சுரேஷ் சொன்னது உண்மையா என்று தெரிய வரும் என தனிப்படை போலீஸ்காரர்கள் தெரிவிக்கின்றனர்.