68 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரையும் 3 ம் வகுப்பு ஆசிரியையும் தேடிச் சென்று காலில் விழுந்து வணங்க ஆசைப்பட்டு தேடிச் சென்ற போது 93 வயதில் இருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து மகிழ்ந்தவர், ஆசிரியை உயிருடன் இல்லாமல் படமாக இருப்பதைப் பார்த்து கண்கலங்கிய பழைய மாணவர் அபுல்ஹசன் ஐஏஎஸ் (ஓய்வு) க்கு வயது 78. இந்த சம்பவம் ஆசிரியர் - மாணவர் நல்லுறவை காட்டும் நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்துள்ளது.
தனக்கு பள்ளி பாடம் மட்டுமின்றி வாழ்க்கை பாடம் புகட்டி தன் உயர்வுக்கும், உயர் பதவிக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை காண நினைக்கும் போதெல்லாம் பணிச்சுமையும், பல்வேறு காரணங்களும் தடுத்துக்கொண்டே இருந்தது. இந்த தடைகள் ஓராண்டு, ஈராண்டு இல்லை. 5, 10, 20 ஆண்டுகளும் இல்லை 68 ஆண்டுகள்.. ஆனாலும் எப்படியும் ஒரு நாள் என் ஆசிரியர்களை நேரில் பார்த்துவிட வேண்டும், பார்த்துவிடுவேன் என்ற வைராக்கியம் தான் 68 ஆண்டுகளுக்கு பிறகு 93 வயது ஆசிரியரை 78 வயது மாணவர் நேரில் பார்த்து மகிழ்ந்தது.
68 ஆண்டுகளுக்கு பிறகு தனது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேடிச் சென்ற மாணவரான அபுல்ஹசன் (78) ஐஏஎஸ் (ஓய்வு) நம்மிடம், “ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் எங்க ஊர். அப்பா காங்கிரஸ்காரர் ஊ.ம.தலைவராகவும் இருந்தார். அப்ப தான் எங்க ஊர் தொடக்கப் பள்ளிக் கூடத்துக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுதூர் கிராமத்தைச் சேர்ந்த சேவுகபாண்டியன் அய்யா தலைமை ஆசிரியராக இருந்தார். எங்க பக்கத்து ஊர் முத்துப்பேட்டையை சேர்ந்த மனோரஞ்சிதம் 3 ம் வகுப்பு டீச்சர். இவங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதி. ஆனால் அப்பவே "சாதி மறுப்பு திருமணம்" செய்துகிட்டாங்க. நான் ரெண்டு பேருகிட்டயும் படிச்சேன். ரொம்ப அன்பா இருப்பாங்க அதனால இவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும். எல்லாரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரனும்னு அடிக்கடி சொல்வாங்க. அவங்களோட அறிவுரைகள் என் கண்முன்னே நிற்கும்.
தொடக்கப்பள்ளி படிப்பை முடிச்ச பிறகு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்புகளை முடித்து கல்லூரி முடித்து தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகிட்டேன். கோவை மாவட்ட ஆட்சியர், பல துறைகளிலும் இயக்குநர், செயலாளர் என உயர்ந்த பதவிகளில் இருந்துட்டேன். அதன் பிறகு எப்போதாவது சொந்த ஊருக்கு போவேன் அப்பவெல்லாம் எங்க ஆசிரியர்களை பார்க்க ஞாபகம் வரும் ஆனால் எங்கிருக்காங்கன்னு தெரியாது. கொஞ்ச வருசம் முன்னால தலைமை ஆசிரியர் சார்கிட்ட பேசிட்டேன். ஆனால் நேரில் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவங்களை தேடிப் போய் பார்த்து உங்கள் அறிவுரையால கலெக்டராகி இப்ப ஓய்வும் பெற்று பல ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கும் இடத்தில் இருந்து அறிவுரை சொல்றேன்னு சொல்லி அவங்க கால்ல விழுந்து வணங்கனும் என்று தினமும் நினைப்பேன்.
இந்த நிலையில தான் சில மாதங்களுக்கு முன்னால விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தொல்லியல் ஆர்வலர் சிவக்குமார் நாங்கள் நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையம் பற்றி அறிந்து என்னை பார்க்க சென்னை வந்தார். அப்ப அவரிடம் எங்கள் ஆசிரியர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அதுக்கு பிறகு ஒரு திருமண நிகழ்வுக்காக ராஜபாளையம் வந்தப்ப தான் அருகில் தான் உங்கள் தலைமை ஆசிரியரின் சொக்கநாதபுதூர் என்று சொன்னார். இதை கேட்டதும் ரொம்பவே மகிழ்ந்துட்டேன். 68 வருசத்துக்கு முன்னால 5 ஆம் வகுப்பு படிச்ச மாணவன் போல மனசு பறந்தது. எங்க சாரைப் பார்க்கப் போறோம்னு அவ்வளவு மகிழ்ச்சி. சொக்கநாதபுதூர் போய் சார் பெயரைச் சொன்னதும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தாரே ‘அன்பகம்’ சேவுகபாண்டியன் சார் வீடானு கேட்டு வீட்டுக்கே அழைத்துப் போனாங்க.
திராவிட கொள்கை பற்றாளராக இருந்ததால அப்பவே ஜாதி மறுப்பு திருமணம் செய்த எங்க சார், பணி ஓய்வுக்கு பிறகு முழுநேர திமுக பேச்சாளராக மேடைகளில் முழங்கி இருக்கிறார். அவரைப் பற்றி தெரியாத யாரும் இல்லை. அவங்க வீட்டிற்கு சென்றதும் முதலில் சாரோட மகள் வரவேற்றாங்க.. உள்ளே போனதும் எங்க 3 ஆம் வகுப்பு டீச்சர் மனோரஞ்சிதம் படத்துக்கு மாலை போட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். கலங்கிப்போய் அவங்களுக்கு அஞ்சலி செலுத்திட்டு உங்களை உயிரோட பார்க்க வந்தேன் இப்படி படத்தில் பார்க்கிறேனேனு கலங்கிட்டேன்.
அங்கே அமர்ந்திருந்த எங்க சார் கிட்ட அவங்க மகள் போய் உங்ககிட்ட படிச்சு கலெக்டரா இருந்தவர் வந்திருக்கார் உங்களை பார்க்க என்று சொல்ல ஏதும் பேச முடியாமல் கண்கலங்கிட்டார். என் பேரு என்ன சார் சொல்லுங்கன்னு நான் கேட்டா நான் கலெக்டரா உயர்ந்த பதவியில இருந்ததால பேர சொல்லக்கூடாதுனு சொல்ல கடைசிவரை சொல்லல.. உங்க வயசு என்ன சார்னு கேட்டேன் 90க்கு மேலன்னார். அவருக்கு 93 வயதாகுதாம். ரொம்ப நேரம் அவர் உடல் நலம் விசாரிச்சுட்டு எங்க சார் காலில் விழுந்து வணங்கிய பிறகு என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு தம்பி. ஒரே வருத்தம் எங்க டீச்சரை உயிரோட பார்க்க முடியலங்கிறது தான். என்னை பார்த்ததில் எங்க சாருக்கும் மகிழ்ச்சி என்று சொன்னார். 68 வருசம் கழிச்சு ஒரு மாணவன் என்னைப் பார்க்க வருவான் என்று நினைக்கவில்லை. வந்ததில் பெரும் மகிழ்ச்சி” என்றார் எங்க சார்.
“ஒவ்வொருத்தரும் தங்களோட தொடக்க காலத்தில் வழிகாட்டிய ஆசிரியர்களை எப்பவுமே நினைத்துப் பார்க்கனும். இப்ப உள்ள ஆசிரியர் - மாணவர் உறவுகள் விரும்பத்தகாததது போல உள்ளது. ஆசிரியர்களை மதிக்க கத்துக்கனும்” என்றார். 60 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து, தனது ஆசிரியர் பணி ஓய்வுக்கு பிறகு திராவிடர் கொள்கை பிடிப்போடு கட்சிக்காக மேடைகள் பல ஏறி உழைத்து 93 வயதிலும் அதே துடிப்போடு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஓய்வு தலைமை ஆசிரியர் சேவுகபாண்டியனை இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாக ஏற்க வேண்டும். திமுக தலைமை அவரது உழைப்பை கௌரவப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.