2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தமிழ்மொழி வரலாற்றில் முக்கியமான நாள். தமிழின் தொன்மை குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் பேசிய பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள், தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவந்தனர்.
தமிழ்நாட்டில் இந்தியை திணித்து, தமிழை பின்னுக்குத் தள்ள காலமெல்லாம் முயற்சித்த காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்த அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது. கூட்டணி அரசில் இடம்பெற்ற திமுக தமிழை செம்மொழியாக்கியே தீர வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுதொடர்பான திமுக தலைவர் கலைஞரின் கோரிக்கையை ஏற்ற சோனியாவும் பிரதமர் மன்மொகன் சிங்கும் தமிழை செம்மொழியாக்கும் அறிவிப்பை 12.10.2014ல் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உரையில் இடம்பெறச் செய்தனர்.
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கலைஞர் அரசு தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தியது. இந்த மாநாட்டுக்காக செம்மொழியான தமிழ்மொழியே என்ற பாடலை எழுதிய கலைஞர் அதை சிறுவர் முதல் முதியோர் வரை பாடவைத்தார்.