Skip to main content

ஓ.பி.எஸ். - கே.பி. முனுசாமி மோதல்! அதிரவைக்கும் பல சம்பவங்கள்!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
OPS



 

சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது, அவரை உயர்த்தி பிடித்தவர்களில் முக்கியமானவர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. அதிமுகவுடன் ஓபிஎஸ், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இணைந்தப் பிறகும் ஓபிஎஸ்-கே.பி.முனுசாமியின் நட்பும் ஆதரவும் நீடித்தப்படியே இருந்தது. ஆனால், சமீபகாலமாக, இருவருக்குமிடையே பிணக்குகள் அதிகரித்திருந்த நிலையில், ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கத்தில் வெளிப்படையாகவே இவர்களின் மோதல்கள் கசியத்து துவங்கியுள்ளன. 

 


இது குறித்து நாம் விசாரித்தபோது, ‘’ கிருஷ்ணகிரி  மாவட்ட அமைச்சராக கடந்த காலங்களில் இருந்தவர் கே.பி.முனுசாமி. இவரால் உருவாக்கப்பாட்ட அவரது சிஸ்யர் பழனியப்பன் தர்மபுரி மாவட்ட அமைச்சர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை முழுமையாக பெற்றிருந்ததால் ஜெ.ஆட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்தார் முனுசாமி. ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி அதிமுகவின் ஐவர் குழுவை ஜெயலலிதா உருவாக்கியபோது, கே.பி.முனுசாமியை தவிர மற்ற 4 பேரும் சசிகலாவின் சிபாரிசில் இடம் பிடித்தனர். கே.பி.முனுசாமி மட்டும் ஜெயலலிதாவின் சாய்ஸ்! 
             

 

sasikala-jayalalitha




இதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்களை இப்போது நினைவுப்படுத்திக்கொண்டால் தற்போதைய அரசியல் சூழல்கள் புரியும். அதாவது, கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்களில் கே.பி.முனுசாமிக்கும் தம்பிதுரைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். அந்த மோதல்கள் இப்போதும் கட்சியில் நீடித்தப்படிதான் இருக்கின்றன. அதனால், தம்பிதுரையின் செல்வாக்கை குறைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த கொங்கு வேளாளரான பழனியப்பனை வளர்த்தார் கே.பி.முனுசாமி. இதனை அப்போது ஜெயலலிதாவிடம் முறையிட்டுப் புலம்பினார் தம்பிதுரை. ஆனால், கே.பி.முனுசாமி தனது தளபதி என்பதால் தம்பிதுரையின் புலம்பல்கள் ஜெயலலிதாவிடம் எடுபடாமல் போனது. 

 

                இந்த சூழலில்தான், கே.பி.முனுசாமியால் வளர்க்கப்படும் பழனியப்பனை வைத்தே முனுசாமியை ஒழிக்க வேண்டும் என கருதிய தம்பிதுரை, ஓபிஎஸ்சின் உதவியை நாடினார். அதனையடுத்து, சசிகலாவிடம் சொல்லி பழனியப்பனுக்கு 2011-சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார் ஓபிஎஸ்! மேலும், அமைச்சர் பதவியும் ஒரு கட்டத்தில் ஐவர் குழுவில் இடமும் சசிகலாவால் பழனியப்பனுக்கு கிடைத்தது. அதேசமயம், தம்பிதுரை – ஓபிஎஸ் கூட்டணி கே.பி.முனுசாமிக்கு எதிராக பழனியப்பனை நிறுத்தி அரசியல் செய்தனர். தம்பிதுரை கொங்கு வேளாளார் சமூகம் என்பதால், தன்னை வளர்த்த கே.பி.முனுசாமிக்கு எதிராக அரசியல் செய்தார் பழனியப்பன். 

aiadmk palaniyappan

 

                இந்த நிலையில், 2014 நாடாளுமன்ற தேர்தல் வர, தர்மபுரியில் போட்டியிட்டார் டாக்டர் அன்புமணி. சசிகலாவின் தூண்டுதலில் அன்புமணியை தோற்கடிக்கும் அசைண்மெண்ட்டை கே.பி.முனுசாமியிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா. ஆனால், அன்புமணி வெற்றி பெற்றார். அவரின் இந்த வெற்றிக்கு கே.பி.முனுசாமிதான் காரணம் என்றும், அன்புமணி வன்னியர் என்பதால் அவரது வெற்றிக்கு கே.பி.முனுசாமி அனைத்து உதவிகளையும் செய்தார் என்றும் ஜெயலலிதாவிடம் நேரடியாகவும், சசிகலா மூலமாகவும் தம்பிதுரை மற்றும் ஓபிஎஸ் இருவரும் வத்தி வைத்தனர். 

 


           இதனை நம்பி, கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கட்சி பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. தம்பிதுரை-ஓபிஎஸ்-பழனியப்பன் மூவரும் குதூகலமடைந்தனர். இதனால், அப்-செட் ஆனார் முனுசாமி. மேலும், முனுசாமிக்கு எதிராகப் போட்டுக்கொடுத்தது போல, தர்மபுரி மா.செ.வாக அப்போது இருந்த தற்போதைய அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராகவும் போட்டுக்கொடுத்தனர். அதனால், அவரது மா.செ.பதவியும் பறிபோனது. அதேபோல, மாநில ஜெ.பேரவைச் செயலாளராக இருந்த பென்னாகரம் அன்பழகனை கட்சியிலிருந்தே நீக்க வைத்தனர். கே.பி.அன்பழகனும், பென்னாகரம் அன்பழகனும் கே.பி.முனுசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் இதனை செய்தது ஓபிஎஸ்-தம்பிதுரை குரூப் !  இதெல்லாமே தம்பிதுரை-ஓபிஎஸ் உதவியில் சசிகலாவின் தூண்டுதலிலே நடந்தது. 2016-சட்டமன்ற தேர்தலின் போது பென்னாகரம் அன்பழகனை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா.


 

eps

             


இந்த சூழலில்தான், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து முதல்வரான ஓபிஎஸ்சை ராஜினாமா செய்ய வைத்தனர் சசிகலா குடும்பத்தினர். ராஜினாமாவை விருப்பத்துடன் செய்த ஓபிஎஸ், அரசியல் துறவறம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால், சசிகலாவுக்கு எதிராக 2017- ஜனவரி 18-ந்தேதி கலகக்குரலை எழுப்பிய முனுசாமி, அரசியல் துறவறம் மேற்கொள்ளவிருந்த ஓபிஎஸ்சை சந்தித்து, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்த தூண்டினார் கே.பி.முனுசாமி. எந்த சசிகலாவை வைத்து தனக்கு எதிராக ஓபிஎஸ் அரசியல் செய்தாரோ, அதே ஓபிஎஸ்சை சசிகலாவுக்கு எதிராக திருப்பும் திட்டத்தை கையிலெடுத்தார் முனுசாமி. 
            


அதன்படியே தர்மயுத்தத்தை நடத்த ஓபிஎஸ்சை மெல்லமெல்ல உருவாக்கினார். முனுசாமியின் பேச்சில் தெளிவான அர்த்தங்கள் இருந்ததை உணர்ந்த ஓபிஎஸ், பிப்ரவரி 8-ந்தேதி சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்ததை துவக்கினார். தன்னை பழிவாங்கிய சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்த ஓபிஎஸ்சை உயர்த்திப் பிடிக்கும் முதல் ஆளாக தெரியும் வகையில் ஆதரவு தந்தார் கே.பி.முனுசாமி.  ஓபிஎஸ்சுக்கு அடுத்தடுத்து ஆதரவு பெருகியது. இந்த நிலையில் சசிகலா மற்றும் தினகரனையும் அவர்களது குடும்பத்தையும் அதிமுகவிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு கே.பி.முனுசாமி போன்ற சசிகலா குடும்பத்திற்கு எதிரான தலைவர்கள் மூலம் அதிமுகவில் இணையும் முடிவை ஓபிஎஸ்சை எடுக்க வைத்தனர். இணைவதற்கான சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களிடம் சொல்லப்பட்டது. அதே சமயம் சில திரைக்கதைகளை பாஜக எழுத, இணைப்பும் நடந்தது. 

 

                   ஆனால், இணைப்பிற்கு பிறகு கே.பி.முனுசாமி உள்ளிட்ட தன்னை உயர்த்திப் பிடித்த சீனியர்களுக்கு எந்த சிபாரிசையும் செய்யவில்லை ஓபிஎஸ்! அவர்களை புறக்கணிக்கவும் செய்தார். இதனால், ஓபிஎஸ்சுக்கும் அவரை தூக்கி நிறுத்திய சீனியர்களுக்குமிடையே அவ்வப்போது அதிர்ப்திகள் உருவாகியே வந்தன. ஆனால், அவைகள் வெளியே தெரியவில்லை. 

 

 

          இந்த நிலையில், அதிமுகவிலிருந்து தினகரன் தொடர்பை துண்டித்துக்கொள்ள எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் முடிவெடுத்து அறிவித்த நிலையில்  தம்பிதுரை அதிமுகவிலேயே இருந்தார். பழனியப்பனோ தினகரன் பக்கம் தாவினார். இப்படிப்பட்ட சூழலில், கட்சியையும் ஆட்சியையும் தன் வயப்படுத்திக்கொள்ளவும் ஓபிஎஸ்சின் முக்கியத்துவத்தை குறைக்கவும் கே.பி.முனுசாமி உள்பட சீனியர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. 

 

 

              கொங்கு வேளாளர் சமூகத்தில் தன்னைத் தவிர அதிமுகவில் இன்னொரு நபர் உயர்ந்து தெரியக்கூடாது என அரசியல் செய்து வருகிறார்  எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, தம்பிதுரைக்கு எதிரான கே.பி.முனுசாமிக்கு ஆதரவாக நீண்ட காலமாக இருந்தே வருபவர் எடப்பாடி! அதேபோல, வன்னியர் சமூகத்தில் தன்னைத் தவிர வேறு நபர்கள் உயர்ந்து தெரியக்கூடாது என அரசியல் செய்து வருபவர் முனுசாமி. அதனால், சேலம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவரான செம்மலைக்கு  எதிராக அரசியல் செய்ய எடப்பாடியின் நட்பில் இருந்தார் முனுசாமி. பரஸ்பரம் இருவரும் இப்படித்தான் நட்புடன் இருந்து வருகின்றனர். 
 

 

            மேலும்,  சசிகலாவின் ஆதரவாளராக எடப்பாடி இருந்தாலும் ஐவர் அணியில் சசிகலாவுக்கு எதிரானவரான கே.பி.முனுசாமிக்கு பக்கபலமாக இருந்தவர் எடப்பாடி. இவர்களது நட்பு எல்லா கட்டத்திலுமே தொடர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் மாநில தலைவராக இருந்த தனது ஆதரவாளர் கவிதா ராஜேந்திரனுக்கு பதிலாக எடப்பாடியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கு எல்லாமுமாக இருக்கும் சேலம் இளங்கோவனை ஆதரித்தார் கே.பி.முனுசாமி. இன்றைக்கு அச்சங்கத்தின் தலைவராக சேலம் இளங்கோவன் இருப்பதற்கு கே.பி.முனுசாமியின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், எடப்பாடியும் முனுசாமியும் இப்போதும் கைக்கோர்த்துள்ளனர். ஓபிஎஸ்சுக்கு எதிரான அரசியலையும் மெல்ல கையிலெடுத்துள்ளனர். அதன் முதல் கட்டம்தான் ஓபிஎஸ்சின் தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கியது ! ‘’ என்று விரிவாக விவரிக்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள். 
 


மேலும் நம்மிடம் பேசிய அவர்கள், ‘’ கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்கள் இணைந்த ஆவினின் சேர்மனாக இருக்கிறார் பென்னாகரம் அன்பழகன். கே.பி.முனுசாமியின் முழு ஆதரவில் வெற்றிப்பெற்றிருக்கிறார் அன்பழகன். தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் மாநில தலைவராக எடப்பாடியின் சேலம் இளங்கோவனுக்கு கே.பி.முனுசாமி உதவியது போல, தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவின் நிறுவனத்தின் மாநில சேர்மனாக பென்னாகரம் அன்பழகனை முனுசாமியின் விருப்பத்துகேற்ப எடப்பாடியும் உதவ முன் வந்துள்ளார். 


 

o raja - ops




ஆனால்,  ஆவின் நிறுவனத்தின் மாநில சேர்மன் பதவியை பிடிக்க திட்டமிடுகிறார் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா! அதற்காக பல்வேறு காரியங்களை செய்து மதுரை ஆவினின் சேர்மனாகவும் வந்து விடுகிறார். இதனை எடப்பாடியும் முனுசாமியும் எதிர்பார்க்கவில்லை. ராஜாவின் திட்டங்கள் ஓபிஎஸ்சுக்கு தெரிந்தும் தடுக்க முயற்சிக்கவில்லை என்கிற கோபம் எடப்பாடியிடம் எட்டிப்பார்த்தது. உடனே, எடப்பாடியும் முனுசாமியும் ஓபிஎஸ்சிடம் ஆலோசித்தனர். ஆனால், அவர் நழுவி விட்டார். இந்த சமயத்தில்தான் மதுரை ஆவின் சேர்மன் தேர்தலில் நடந்த பல  தில்லுமுல்லுகள் , சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரியவர, அதற்கான ஆதாரங்களைத் திரட்டி ஓபிஎஸ்சை மிரள வைத்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ’ இனியும் ராஜாவை கட்சியில் வைத்திருப்பது கட்சியின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. ஆவின் நிறுவனத்தின் சேர்மனாக ஓபிஎஸ் தம்பி வருவது தங்களுக்கு ஆபத்து ’ என கருதி ஓபிஎஸ்சிடம் வலியுறுத்தி அவரிடம் கையெழுத்துப் பெற்று ஓ.ராஜாவை கட்சியிலிருந்து கட்டம் கட்டியிருக்கிறார்கள் எடப்பாடியும் முனுசாமியும். இதற்கு முழுமுழுக்க கே.பி.முனுசாமிதான் காரணம் என அவர் மீது காட்டமாக இருக்கிறார் ஓபிஎஸ் ! ஆக, ஓபிஎஸ்-கே.பி.முனுசாமி மோதல்தான் தற்போது அதிமுகவில் ஹாட் டாபிக் ! ஆனால், இதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருவருமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘’ என்று சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள் பலர்.   
 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.