திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் எப்போது கூட்டப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து கேட்பதற்காக அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை தொடர்பு கொண்டோம்.
அதிமுக பொதுக்குழு ஏன் தள்ளிப்போகிறது?
ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அது நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் கடைசியில் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார். ஜெயலலிதா இறந்த பின்னர் 2016 டிசம்பர் 29ல் நடந்தது. அதில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ல் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்புக்காக ஒரு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அது அதிமுகவின் பொதுக்குழு அல்ல. அதன் பிறகு 2018ல் நடக்கவில்லை. 2019ல் இதுவரை நடக்கவில்லை.
நீங்கள் தொடர்ந்த வழக்கு எந்த நிலைமையில் உள்ளது?
அந்த வழக்கு 2019 செப்டம்பர் 17ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது. என்னுடைய மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தினகரன் சசிகலா vs ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வழக்கில் நீதிமன்றம், சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தவறு. அதை நீக்குவதாக சொல்லியிருக்கிறது. அதேபோல், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் கட்சி விதிகளை திருத்தம் செய்ததும் தவறு, அதாவது அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை பறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என திருத்தம் செய்தது தவறு என்று கூறியுள்ளது. இது டிவிஷன் பென்ஞ் தீர்ப்பு. இதைக்காட்டித்தான் தேர்தல் ஆணையத்திற்கு சொல்லுங்கள் என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தாக்கல் செய்யாததால் 06 பிப்ரவரி 2020க்கு இந்த வழக்கு திரும்ப வருகிறது.
அதற்குள் பொதுக்குழுவை கூட்டுவார்களா?
அது தெரியவில்லை. இவர்களுக்கு ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கிடையாது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் அதிமுக எம்எல்ஏக்கள் தன் பக்கம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். எம்எல்ஏக்களை கையில் வைத்திருந்தாலே அரசை நடத்திடலாம், அரசு கையில் இருந்தால் கட்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி, தன் குடும்பம், வாரிசுகளுக்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வதற்காக கிட்டதட்ட எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டார். உண்மையான அதிமுக விசுவாசிகள், அனுதாபிகள், வாக்காளர்களை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவர்களது நலன்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கட்சியை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். இது எது வரைக்கும் போகும் என்றால் வரும் 2020 மே, ஜுன் வரை போகும். 2020 பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தல் வரும். அப்போதுதான் கட்சிக்காரர்கள் தேவை, கட்சியை புறக்கணித்தற்கான பலன்களை உணர்வார்கள்.
பொதுச்செயலாளராக தான் ஆகுவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?
பொதுக்குழுவைக் கூட்டி அந்த பொதுக்குழுவிலேயே தான் பொதுச்செயலாளராக ஆகிவிடலாம் என்று ஒரு முயற்சியை அவர் எடுக்கிறார். மேலும் டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு, சசிகலா தரப்புடனும் தொடர்பில் இருந்து அந்த பதவியை பெற நினைக்கிறார். ஆனால் இந்த நடைமுறை செல்லாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுக்குழுவை இவர்களால் கூட்ட முடியுமா? முடியாதா?
என்னை இவர்களால் விலைக்கு வாங்க முடியாது. இந்த வழக்கு முடியும் வரை பொதுக்குழுவை கூட்டவும் வாய்ப்பு இல்லை.
பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தால் போட்டியிடுவீர்களா?
கட்டாயமாக போட்டியிடுவேன்.