தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா வழக்கு தொடர்ந்திருந்தார். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மேலும் சிலரும் தொடர்ந்திருந்த வழக்கில், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய ம.நீ.ம. செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என கோரிக்கை வைத்தோம். அரசு கேட்கவில்லை. சட்ட ரீதியாக அணுகுவதுதான் சரியானது என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றம்தான் ஒரே வழி என முடிவு செய்தோம். கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா தொடர்ந்த வழக்கில் எங்களுடைய வழக்கறிஞர் சுந்தரேசன் ஆஜரானார்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனையின்போது இன்னென்ன வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில் முக்கியமானது சமூக இடைவெளி. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதை நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னோம். இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
ஆன்லைனில் விற்பனை செய்வது தமிழக அரசுக்கு சாத்தியப்படுமா?
அது அவர்களுக்கு சாத்தியப்படாது. அவர்கள் எதிர்பார்ககிற வருமானத்தை அதில் பார்க்க முடியாது. அதற்கான ஆட்கள் பலமும் அவர்களிடம் இல்லை. மக்கள் மயங்கிபோய் கொடுக்கிற காசுதான் அவர்களுக்கு முக்கியம். இப்பவும் அவர்கள் மேல்முறையீட்டுக்கு செல்வார்கள் என்று செய்திகள் வருகிறது. மேல்முறையீட்டிலும் நாங்கள் முறையாக போராடி வெற்றி பெறுவோம். இவ்வாறு கூறினார்.