மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “கலைஞர் நூற்றாண்டு விழாவாக மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெல்லாம் கலைஞர் செய்த மாபெரும் சாதனைகளை விளக்குவதைப் பற்றி நமது முதல்வர் திட்டமிட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் எந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இந்தியாவில் நிலை நிறுத்த விரும்பினாரோ அதை மக்களுக்கு நினைவூட்டும் விழாவாகவும் இந்த கலைஞர் நூற்றாண்டு விழா இருக்கிறது.
கலைஞர் சிறு வயதில் செய்த சாதனைகள் நம்மை வியக்க வைக்கிறது. ‘ஃப்ரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகை கலைஞரை பற்றி ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டிருந்தது. அந்த இதழில் உள்ள கட்டுரையில், தனது 13 வயதிலேயே ‘செல்ல சந்திரா’ என்ற சரித்திர நாவலை தமிழில் எழுதியவர் டாக்டர். கலைஞர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த கட்டுரையை படித்தபோது நான் அதிர்ந்து போனேன். எப்படி தனது 13 வயதில் நாவலை எழுத முடியும்? ஏதாவது இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள் என்று எண்ணி அந்த கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொண்டு, நமது இந்து பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கலைஞரை பற்றி ஆய்வு நூல் வெளியிட்டிருக்கையில் இப்படி எழுதி இருக்கிறீர்களே இது உண்மையா என்று கேட்டபோது, அந்த கட்டுரையின் ஆசிரியர் இது நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறினார்.
அந்த செல்ல சந்திரா என்ற நாவல் தற்போது திமுகவின் அலுவலகமாக இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் அரை பக்க நூலாக இருக்கிறது. முழு நூல் கிடைக்காத காரணத்தினாலேயே அந்த நூலை பதிப்பிடம் செய்யவில்லை என்று அந்த ஆசிரியர் கூறினார்.
இந்த நாவலுக்கு கலைஞர் முன்னுரையும் எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும் நாகரிகத்தையும் இழந்து சாதிய மூட நம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை ஒழிக்க சதி வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு, துளு ஆகிய திராவிட மொழிகளில் பழம்பெருமைமிக்க தமிழை அழிக்க விரும்புகிறார்கள். திராவிடர்கள் விழித்து எழ வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த நாவலில் எந்த ஒரு எழுத்து பிழையும், இலக்கண பிழையும் இல்லை என்று அந்த ஆசிரியர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
தனது 13 வயதில் திராவிடத்தை பற்றியும், திராவிட இயக்கத்தை பற்றியும் புரிந்து கொண்டிருக்கின்ற தனி வார்ப்பாக தான் கலைஞர் இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கிற ஆளுநருக்கு, கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது. தமிழை பற்றியும், திராவிடத்தை பற்றியும் தெரியாமல் அரசாங்கத்தின் மாளிகையில் அமர்ந்து கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?
கலைஞர், 13 வயதிலே எப்படிப்பட்ட கொள்கைகளை தூக்கி நிறுத்த விரும்பினாரோ, அந்த கொள்கைகளுக்கு எல்லாம் சாவு மணி அடிக்கும் வகையில் இன்றைக்கு சனாதன சக்திகள் இந்தியாவில் வேகமாக பணியாற்றி கொண்டிருக்கின்றன. அந்த சனாதன சக்திகள் ஏவப்பட்ட அம்பாகத்தான் நமது ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.