ஜெ.வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலை பாதிக்காது - முத்தரசன் பேட்டி

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவில் ஜெயலலிதா வீடியோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.
நக்கீரன் இணையதளத்திற்கு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி...
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி ஜெ. நினைவிடத்தில் தியானம் செய்து, ஜெயலலிதா சிகிச்சையிலும் மரணத்திலும் மர்மம் இருக்கிறது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரினார். அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் எல்லோரும் ஒரே அணியில்தான் இருந்தார்கள். அப்போதே ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிட்டிருக்கலாம். அதன் பிறகு ஜெயலலிதா சிகிச்சையில், மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பலரும் இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரிய நிலையில், அப்போதெல்லாம் இந்த வீடியோவை வெளியிடாத தினகரன் அணியினர், நாளைக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கக் கூடிய சூழலில் இன்றைக்கு இந்த வீடியோவை வெளியிட்டது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
முன்பே அவர்கள் வெளியிட்டிருக்கலாம். தற்போது உள்ள விசாரணை ஆணையத்திடம் அந்த வீடியோவை கொடுத்திருக்கலாம். இந்த இரண்டையும் செய்யாமல் திடீரென வெளியிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தவறான செயல். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை.
இடைத்தேர்தலுக்காக வெளியிடவில்லை. எதிரணியினர் அவதூறு பரப்புகிறார்கள் என்பதால் வெளியிடுகிறோம் என்று வெற்றிவேல் கூறியிருக்கிறாரே?
அதாவது அசிங்கப்படுத்த வேண்டும் என்று தொடங்கியது பிப்ரவரி 7ஆம் தேதி இரவு. இரண்டு முறை ஜெயலலிதாவால் முதல் அமைச்சராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலாவால் முதல் அமைச்சராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தான், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, சிகிச்சையில் மர்மம் இருக்கிறது, சசிகலா தரப்பினர் அவரை கொன்றுவிட்டார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி, சிபிஐ விசாரணை கோரினார். அன்றைக்கு சசிகலா, தினரகன், எடப்பாடி பழனிசாமி எல்லோரும் ஒரே அணியாகத்தான் இருந்தார்கள். அப்போதும் வெளியிடவில்லை, அதன் பிறகும் வெளியிடவில்லை. ஜெயலலிதா எப்போதெல்லாம் அசிங்கப்பட்டாரோ, அப்போதெல்லாம் கவலைப்படாத தினகரன், தற்போது வெளியிடுவது என்பது, அதவும் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியிடுவது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.
வே.ராஜவேல்