Skip to main content

நித்தியானந்தா அறிவித்த சலுகைகள்... ஏன் இப்படி செய்கிறார் என்று கடும் கோபத்தில் அமித்ஷா... அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

"எனது நாட்டிற்கு வளர்ப்பு பிராணிகள் கூட வரலாம். அவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் தரப்படும்'' என ஸ்பெஷல் சலுகைகளை அறிவித்திருக்கிறார் நித்தி. "எனது நாடு எல்லைகளற்றது' என சொல்லி குழப்பியிருக்கிறார். "நித்தி போல ஒருவர் ஒரு தீவை வாங்கி தனி நாடு அமைக்க முடியுமா? அதில் நாய், பூனையையெல்லாம் குடிமகன்களாக ஆக்க முடியுமா? ஒரு நாடு என்றால் அதற்கு எல்லைகள் கிடையாதா?' என சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கேட்டோம்.

 

nithy



"ஒரு நாட்டை உருவாக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. நித்தி சொல்வது போல ஒரு தீவை வாங்கி அதை உடனடியாக தனிநாடு ஆக்கிவிட முடியாது. சமீபத்தில் தனிநாடு அந்தஸ்தை பெற்ற நாடுகள் ஈஸ்ட் தைமூரும் எரிட்ரியாவும்தான். செர்பியாவிலிருந்து பிரிந்த கோசோவோ என்கிற நாட்டை பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அந்த நாட்டால் தனிநாடு அந்தஸ்தை அடைய முடியவில்லை. சீனாவுக்கு பக்கத்தில் உள்ள தைவானால் இன்று வரை முழுமையான நாடாக முடியவில்லை. கத்தோலிக்க மத தலைமையகம் அமைந்துள்ள வாடிகனையும் முழுமையான நாடாக ஐ.நா. அங்கீகரிக்கவில்லை.

 

nithy



கோசோவோ விஷயத்தில் அதை நாடு என செர்பியா ஏற்றுக் கொள்ளவில்லை. செர்பியாவில் இருந்து பிரிந்த நாடு என்பதால் அதை செர்பியா ஏற்றுக் கொள்ளாததால் கோசோவோவால் தனிநாடு அந்தஸ்தை பெற முடியவில்லை. எந்த ஒரு தனிநாடும் இன்னொரு நாட்டில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதுதான். அந்த தனிநாடு ஏற்கனவே அது எந்த நாட்டுடன் இணைந்திருக்கிறதோ அந்த நாடு ஏற்காமல் அதை ஐ.நா. சபை தனிநாடாக அங்கீகரிக்காது. ஈஸ்ட் தைமூர், இந்தோனேஷியாவிலுள்ளது. பிரிந்த நாடான அதை இந்தோனேஷியா ஏற்றுக் கொண்டது. எத்தியோப்பியாவிலிருந்து பிரிந்த எரிட்ரியாவை எத்தியோப்பியா ஏற்றுக் கொண்டதால் தனி நாடானது.
 

nithy



பிரெஞ்சு கடல் பயணியான போகன் வில்லேவின் பெயரை சூடிய நாடு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா, நியூகினியாவிடமிருந்து சுதந்திரம் பெறுகிறது. 1998-ம் ஆண்டு முதல் சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தி போராடிய போகன் வில்லேவின் போராளிகளின் போராட்டம் ஒரு தேர்தல் மூலம் முடிவுக்கு வந்து அது புதிய நாடாக மாறுகிறது. அந்த மாற்றம் முழுமையடைய இன்னமும் 10 வருடம் ஆகலாம் என்கிறார்கள். இத்துடன் ஒரு நாடு தனிநாடாக வேண்டுமென்றால் அதற்கென ஒரு பூகோள பரப்பும் மக்கள்தொகையும் அவசியம். அந்த நாடு ராணுவம் வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாத நித்தி "கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கினார் என்பதெல்லாம் கட்டுக் கதை. இதை நம்புபவர்கள் முட்டாள்கள்'' என்கிறார்கள்.


நித்தி இந்தியாவில் இல்லை என கடந்த பிப்ரவரி மாதமே, "நித்தி இருக்கும் நாடு! பக்தர்கள் கண்டுபிடிப்பு!' என நக்கீரன் கவர் ஸ்டோரி வெளியிட்டது. நேபாளம் வழியாக பிரேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோ சென்ற நித்தி அங்கிருந்து மேற்கு இந்திய தீவு நாடான டிரினிடாட் வழியாக சென்றுள்ளார் என எழுதியிருந்தோம். இப்படி சுற்றித் திரிந்த நித்தி தற்பொழுது தீவு வாங்கியுள்ளார் என சொல்லப்படும் ஈக்வடார் நாட்டுக்குச் சென்றார். நித்தி கடந்த வருடம் ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் ஈக்வடார் நாட்டுக்கு வந்தார். வந்தவர் என்னை அகதியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என அரசிடம் விண்ணப்பித்தார். ஜூன் முதல் 2019 ஆகஸ்டு வரை 14 மாதங்கள் தங்கியிருந்தார். நாங்கள் அவருக்கு அகதி அந்தஸ்து தர மறுத்து விட்டோம். ஆகஸ்ட் மாதம் ஈக்வடாரை விட்டு வெளியேறும் போது ஏர் போர்ட்டில் "எங்கே செல்கிறீர்கள்' என கேட்டோம். "மேற்கிந்திய தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஹைதி தீவுக்கு போகிறேன்' என எழுதி கொடுத்துவிட்டு சென்றார்' என ஈக்வடார் அரசு லண்டனிலிருந்து வெளியாகும் தி. கார்டியன் பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளது.


இதைப் பற்றி நித்திக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். "நித்தி ஈக்வடார் நாட்டில் அகதியாக விண்ணப்பித்த போது "ஏன் இந்தியாவை விட்டு வருகிறீர்கள்' என ஈக் வடார் அதிகாரிகள் கேட்டார்கள். "இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது' என நித்தி குறிப்பிட்டார். ஈக்வடார் இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட நாடு என்பதால் அது உடனே விசாரித்தது. நித்தி மேல் போடப்பட்ட கற்பழிப்பு வழக்கிற்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. நித்தியின் காமலீலைகள் பற்றி அறிந்ததும் அகதி என அவரை நிரந்தரமாக தங்க வைக்க முடியாது என சொல்லிவிட்டது. நித்தி ஈக்வடாரிலேயே, தங்கிவிட நிறைய பணம் செலவழித்தார். அது முடியாமல் போகவே அங்கிருக்கும் நீதிமன்றத்தில் ஈக்வடார் அரசுக்கெதிராக வழக்குப் பதிவு செய்துவிட்டு ஹைதிக்குப் போகிறேன் என பறந்து விட்டார் நித்தி'' என்கிறார்கள்.

அதற்குப் பிறகு அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. எங்கிருந்தாலும் ஒரு சிம்மாசனம், கொற்றக்குடை அத்துடன் பெண் சீடர்கள் -அதிலும் குறிப்பாக ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்கள் என தினமும் சமூக வலைத்தளங்களில் தோன்றி வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என மத்திய அரசின் உளவுத்துறையும் கர்நாடகா, குஜராத் மாநில போலீசாரும் அறிவார்கள் என்கிறது போலீஸ் வட்டாரம்.

இதற்கிடையே கர்நாடகா ராம் நகர் கோர்ட்டில் நடந்த கற்பழிப்பு வழக்கு நித்தியானந்தாவுக்கு எதிராக பூமராங்காக திரும்பியுள்ளது. அந்த வழக்கில் 43 வாய்தாக்களுக்கு நித்தி ஆஜராகவில்லை. புகார் தாரரான லெனின் கருப்பன் ஒரு வாய்தாவுக்கு வரவில்லையென அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்க வாதாடி வெற்றியும் பெற்றார் அரசு வழக்கறிஞர். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் லெனின் கருப்பன். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ""43 முறை வராத நித்திக்கு கைது வாரண்ட் பிறப்பிக்காமல் ஒருமுறை வராத லெனினுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பதா? அரசு வழக்கறிஞர் என்ன செய்கிறார்? கற்பழிப்பு குற்றவாளியான நித்திக்கு ஆதரவாக செயல்படும் ராம்நகர் கோர்ட்டில் நடக்கும் விசாரணையை மாற்றுங்கள். உடனே வழக்கு விவரங்களை ஐகோர்ட்டில் ஒப்படையுங்கள். வருகிற 18-ம் தேதிக்குள் நித்தியை கைது செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்கள் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஏற்கனவே 12-ம் தேதிக்குள் நித்தி இருக்கும் இடத்தை கண்டுபிடியுங் கள் என கர்நாடக அரசுக் கும் போலீசுக்கும் இதே உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதற்கு போலீ சார் நித்தியை கண்டு பிடிக்க முடியவில்லை என கோர்ட்டில் சொல்ல, 18-ம் தேதி கெடு விதித்துள்ளது நீதிமன்றம் என்கிறார்கள் பெங்களூரு வழக்கறிஞர்கள்.

அதேபோல் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடிக்க சொல்லி தொடரப்பட்ட வழக்கில் "நித்தியை கண்டுபிடியுங்கள். அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என ஒவ்வொரு நாளும் எடுத்த நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி கோர்ட்டில் சொல்ல வேண்டும்' என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக வரும் 20-ம் தேதிக்குள் நித்தியை இந்திய போலீசார் கைது செய்து விடுவார்கள் என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள். இந்த தகவல் நித்தியை எட்டியுள்ளது. அவர் பயந்து போய் கிடக்கிறார். வெளியே "நான் ஒரு பொறம்போக்கு. பரதேசி' என பேசுவதெல்லாம் வெற்றுப் பேச்சு. கைது செய்து விடுவார்கள் என்கிற பயம். அவர் குரலில் தெரிகிறது'' என்கிறார்கள் அவரை தினமும் கவனித்துக் கொள்ளும் பெண் சிஷ்யைகள்.

இதற்கிடையே "நாங்கள் இந்தியா வந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து' என ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சொல்கிறார்கள் என நித்தியின் வழக்கறிஞர் சொல்ல, "முதலில் நித்தி எங்கே அதற்கு பதில் சொல்லுங்கள்'' என கோபமாக கேட்டிருக்கிறார்கள் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள். நித்தியின் விளையாட்டில் க்ளைமேக்சான கைது நடவடிக்கை இரண்டாவது முறையாக நடக்க இருக்கிறது. அமித்ஷா நித்தி விஷயத்தில் கடும் கோபமாக இருக்கிறார். "இந்தியாவை அவர் அவமானப்படுத்துகிறாரா?' என நித்திக்கு ஆதரவாக பேசிய தமிழக பா.ஜ.க. பிரமுகரை திட்டித் தீர்த்து விட்டார். அத்துடன் "20-ம் தேதிக்குள் நித்தியை தூக்குங்கள்' என கர்நாடக மற்றும் குஜராத் போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.