கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். ஜெ.அன்பழகனுடன் நெருக்கமாகப் பழகி வந்தவர் நடிகரும், வேளச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர். ஜெ.அன்பழகனுடன் பழகிய தருணங்களை நம்மிடம் நினைவு கூர்ந்தார்.
''ஜெ.அன்பழகன் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். நான் தி.மு.க.வில் இணைந்ததில் இருந்து அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். அவர் மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய பகுதியில் பல இடங்களில் என்னை அழைத்து பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார். கலைத்துறையில் சிறந்த ஈடுபாடு கொண்டவர். 'இது நல்ல படம், சிறந்த படம், வியாபார ரீதியிலான படம், சிறந்த கலைக்கான படம்' என்று சொல்லக் கூடிய அளவுக்கு கலைத்துறையையும் நேசித்தவர். அரசியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு கலைத்துறையையும் எப்படிக் கவனிக்கிறார் என நான் ஆச்சரியப்பட்டதும் உண்டு.
கட்சிப் பணி என எடுத்துக்கொண்டால், அவரைப்போல தி.மு.க.வில் பணியாற்றுவதைப் பார்க்க முடியாது. ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அதற்குப் பிறகும் 10, 15 ஆண்டு காலமாக அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், மிகவும் மன தைரியத்தோடு இரவு பகல் பாராமல் பணியாற்றுவார். மன வலிமை அவருக்கு அதிகம்.
கலைஞர், அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என அன்பழகனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் மிகுந்த நம்பிக்கையோடு ரிலாக்ஸாக இருப்பார் கலைஞர். தான் நினைத்ததைவிட சிறப்பாக அன்பழகன் செய்வார் எனும் நம்பிக்கையில் கலைஞர் இருப்பார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அன்பழகனை கலைஞர் பாராட்டுவார். பாராட்டாமல் ஒருமுறைக் கூட இருந்ததில்லை. கலைஞரிடம் பாராட்டுப் பெறுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்தப் பாராட்டைப் பெறும்போது சாதனையாக நினைப்பார் அன்பழகன்.
தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கிய காலத்தில் இருந்து சென்னையில் இருக்கிற காரணத்தினால் மு.க.ஸ்டாலினோடு மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அதேபோல அன்பழகன்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை முடியும் வரைக்கும் ஜெ.அன்பழகனின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. மைக் கொடுக்க மாட்டார்கள். மைக் அணைக்கப்பட்டால் கூட, அவர் எழுந்தவுடனேயே ஆளுங்கட்சியினர் அனைவரும் அலர்ட் ஆயிடுவார்கள். சபை அமைதியாக இருக்கும்போது ஒரே ஒரு வார்த்தை சொல்வார்; அப்போது சபையே ஆடிப்போகும்! நமக்குக் கோபம் வரும்போது, இந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும் என பொங்கும்போது நாம் உணர்ச்சிவசப்பட்டுவோம். ஆனால், அன்பழகன் கோபமாக ஒரு கருத்தைச் சொல்லும்போது ரொம்ப ரிலாக்ஸாக, ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். வார்த்தை ஒவ்வொன்றும் கனலாக வந்து விழும்; அக்னியாக வந்து விழும்.
உண்மையிலேயே எங்கள் கழகத்திற்கு அன்பழகன் தூண்தான்! எங்கள் இயக்கத்தின் ஆற்றல் மிக்க செயல் வீரர். மாவட்டச் செயலாளராக இருந்து. அந்த மாவட்டத்தில் கட்சியினரை ராணுவக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தவர். பொறுப்பில் உள்ளவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர். அதேநேரத்தில் மென்மையானவர். எல்லாரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர்.
'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சிகளில் தானே கலந்து கொண்டு, முன்னின்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போதுகூட தலைவர் ஸ்டாலின், ''அன்பு... நீங்க இந்த வேலையைச் செய்ய வேண்டாம்! நீங்க உங்க உடல்நிலையைப் பாருங்க! நீங்க பத்திரமா இருங்க! நீங்க பத்திரமா இருங்க''ன்னு பார்க்கிற இடத்திலெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அன்பழகன் பணியாற்றியதால் இக்கட்டான சூழ்நிலை வந்துவிட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நட்போடு பழகியவர். அவரது இழப்பு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பு'' என நா தழுதழுக்க கூறினார்.