Skip to main content

ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்! 

சென்னை மாதிரியான பெருநகரங்களில், அன்னாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களில் இருக்கும் ஐடி நிறுவனங்களில், எப்படியாவது வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்பதே இந்தக்காலத்து இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களில் நடக்கும் அவலங்கள் நமக்கு வேறொரு கதையைச் சொல்கின்றன.

ஆம், ‘ஐடி லே-ஆஃப்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நடுநடுங்கிப் போகும் ஐடி ஊழியர்களுக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆண்டொன்றுக்கு 2 லட்சம் ஊழியர்கள் வீதம் மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. ஊடகங்கள் மூலம் அது பரவிய நிலையில், பின்னர் மறுக்கப்பட்டாலும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் கமுக்கமாக ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன பெரும்பாலான ஐடி நிறுவனங்கள். சென்னையில் இருக்கும் வெரிசான் என்ற நிறுவனத்திலும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.



ஐடி ஊழியர்களின் உரிமைக்காக போராடும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அழகு நம்பி வெல்கினிடம் விரிவாக பேச தொடர்பு கொண்டோம்..

‘சென்னையில் உள்ள ‘வெரிசான் டேட்டா சர்வீஸ் இந்தியா’ என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமாகத்தான், எங்கள் UNITE யூனியனுக்கு லே-ஆஃப் நடவடிக்கையால் 993 ஊழியர்கள் வேலையிழந்திருப்பது தெரியவந்தது. அதிலும் முக்கியமாக பேண்ட் – 7 முதல் பேண்ட் – 3 (ஊழியரின் பணிக்காலம் மற்றும் ஊதியம்தான் இதில் முக்கியக் காரணிகள்) சார்ந்த ஊழியர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெரிசான் நிறுவனம் இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்காக திட்டமிட்டதுதான் வியப்பிற்குரிய விஷயம். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 15% ஊழியர்களின் பட்டியலைத் தயார்செய்து, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்த தனியார் நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் இருக்கும் மூத்த மேலாளர்களுடன் சேர்ந்து, மொத்தம் 50 குழுக்களை அமைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். ஒரே நிறுவனத்திற்குள் இருப்பவர்களை வைத்து, இதைச் செய்தால் தகவல் பரவி ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவே இப்படி செய்திருக்கிறார்கள். மூத்த ஊழியர்களுக்கு வேலையிழப்பு நடவடிக்கையின்போது மாரடைப்பு ஏற்படலாம் என்பதற்காக ஆம்புலன்ஸுகளும், நிறுவன வளாகத்திற்குள் போராட்டங்கள் வெடித்தால் அவர்களை அப்புறப்படுத்த செக்யூரிட்டிக்களையும் முன்கூட்டியே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த சூழலை நினைத்துப் பாருங்கள், ஒரு மூத்த ஊழியர் எப்போதும் போல நிறுவனத்திற்குள் வந்து, தனது கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். செக்யூரிட்டி ஒருவர் அந்த இடத்திற்குச் சென்று அந்த ஊழியரை மீட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அந்த மீட்டிங்கிற்குள் நுழைந்த அடுத்த பத்து நிமிடங்களுக்குள், ‘நான் சுயநினைவோடுதான், நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன்’ என இறுதி முழு தீர்வுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, அந்த ஊழியரை வாகனநிறுத்தம் வரை கொண்டுவந்து செக்யூரிட்டி விட்டுச்செல்கிறார். ஒருவேளை இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், யோசிப்பதற்கோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, சக ஊழியர்களுடன் பேசுவதற்கோகூட அந்த ஊழியருக்கு வாய்ப்பு வழங்கமாட்டார்கள்.

ஊழியர்களின் செயல்திறனைக் காரணம் காட்டியோ, அவர்கள் வேலை சரியாகப் பார்ப்பதில்லை என்றோ இல்லாமல், அந்தந்த துறைகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் மூத்த ஊழியர்கள் மட்டுமின்றி, மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் ஆணையரிடம்  முறையிட்டுள்ளோம். இதுகுறித்து பேச டிசம்பர் 15ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 



இதுமாதிரியான நடவடிக்கைகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. ‘ஐடி ஊழியர்களுக்கான வேலை பாதுகாப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டால் மட்டுமே  மீண்டும் இதுபோல நடக்காமல் தடுக்கமுடியும். இதை உருவாக்கி, நடைமுறைப்படுத்த நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.. இதுமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அரசுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படவேண்டும். அப்படியான எந்த வாய்ப்பையும் ஏற்படுத்தாமல், நிறுவனத்திற்காக பல ஆண்டுகள் உழைத்த ஊழியர்களை செக்யூரிட்டிகளைக் கொண்டு விரட்டியடிப்பது கீழ்த்தரமான செயல். இப்படி வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு மார்க்கெட்டில் வேலை கிடைப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதனால், அதே நிறுவனத்தில் அவர்களை மீண்டும் பணியிலமர்த்த வலியுறுத்த இருக்கிறோம். மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு எங்கள் யூனியனின் சார்பாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கிவருகிறோம். ஐடி ஊழியர்களின் வேலை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இதுமாதிரியான கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்’ என்கிறார் ஆதங்கமாக.

நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருந்த ஐடி நிறுவனங்கள், இன்று அதில் வேலை செய்யும் ஊழியர்களையே நடுத்தெருவில் நிறுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டன. ஐடி உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும், வேலை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இன்றும் அது கவனிக்கப்பட்டதாக தெரியவில்லை.
நிவாரணம் தருவது மட்டும் அரசின் வேலை அல்ல.. நீதியைக் காப்பதும்தான்!

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்