Skip to main content

"குஜராத் விபத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று அண்ணாமலை கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது..." - மருத்துவர் காந்தராஜ்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

தக

 

கோவை  சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தமிழக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த சம்பவம் தமிழக உளவுத்துறையின் தோல்வி என்று விமர்சித்த அவர், இந்த சம்பவத்துக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை அலட்சியமாக இருந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற உடனே என்ஐஏ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் விவகாரம், வி.பி.துரைசாமி விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அரசியல் விமர்சகர் காந்தராஜிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழக அரசியல் ரொம்ப மோசமாகப் போய் இருக்கும். அதை அவ்வாறு போகாமல் சரி செய்ததே அண்ணாமலையும், தமிழக ஆளுநரும் தான் என்று பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளாரே? 

 

வி.பி.துரைசாமிக்கு ஏதோ கெட்ட நேரம் வந்துவிட்டது போலத் தெரிகிறது. அவர் பாஜகவிலிருந்தாலும் அவரை மாநில பாஜக முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் அவர் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர். அவருக்கு பாஜகவெல்லாம் சரி வராது. தன் மீது வந்துள்ள இந்த சந்தேகத்தை அவர்களுக்கு எப்படி போக்கலாம் என்று நினைத்த அவர், திமுக மீது புழுதி வாரித் தூற்றுகிறார். ஆனால் இதையெல்லாம் வைத்து அவரை பாஜக முழுவதுமாக நம்பாது என்பதை அவருக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதில் பார்க்கவேண்டிய முக்கிய அம்சம், பாஜக அவரை நமக்குள்ளார ஊடுறுவி உள்ள ஒரு சக்தியாக பார்க்கிறது. நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று நினைக்கிறது. அதனால் இவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி அவர்களை நான் அப்படி இல்லை என்று ஏமாற்ற பார்க்கிறார்.


ஆளுநரை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சிப்பதால் ஆளுநர் சரியாகச் செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. அவரை அரசியல் நோக்கத்திற்காகவே திமுக விமர்சனம் செய்து வருகிறது, இதனால் ஆளுநரை நான் பாராட்டுகிறேன் என்று அண்ணாமலை கூறுகிறாரே? 

 

வேறு யார் பாராட்டுவா? வேலிக்கு ஓணான் சாட்சி. இவரை அவர் பாராட்டுவதும், அவரை இவர் பாராட்டுவதும் தான் தொடர்ந்து நடைபெற்று வரும். இவர்களை வேறு யார் பாராட்டுவார்கள். நடுநிலையாக இருப்பவர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். இரண்டு கோமாளிகள் இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்கள், அதையும் தாண்டி கோமாளிகளை நாம் கேவலப்படுத்தக்கூடாது என்பதும் மிக முக்கியம். அண்ணாமலை பேசுவதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? வாயில் என்ன வருகிறதோ அதையெல்லாம் கோமாளித்தனமாகப் பேசுகிறார். 

 

அவர் அறிவுப்பூர்வமாகப் பேசி நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா, நான் இதுவரை பார்த்தது இல்லை. அவர் வேறு ஒன்றைப் பேசுவார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். குஜராத் பாலம் இடிந்து விழுந்ததற்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கு என்று கூறுவார் என்று நினைத்தேன். திமுக ஆளுங்க அங்கே பரவி இருக்கிறார்கள், அதனால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த அந்தப் பாலத்தை இடித்துவிட்டார்கள் என்று அண்ணாமலை கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சொல்லவில்லை. இது எனக்குப் பெரிய ஆச்சரியமாக உள்ளது. அதையும் ஆமாம் என்று சொல்லி ஆளுநர் ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால் இருவரும் அவ்வாறு சொல்லவில்லை. சற்று ஆச்சரியமான ஒன்றுதான்.