Skip to main content

மருத்துவமனைகளை கரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாற்றும் எடப்பாடி அரசாங்கம்! -எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டால் பரபரப்பு

Published on 09/05/2020 | Edited on 10/05/2020
ss sivasankar dmk



கிராமங்களில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கரோனா தொற்று பரப்பும் கேந்திரங்களாக, 'ஹாட் ஸ்பாட்களாக' மாறிக் கொண்டிருக்கின்றன. முதலில் மருத்துவர்களை காப்பாற்றுங்கள், அவர்கள் மக்களை காப்பாற்றுவார்கள் என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

''நான் 6 ஆம் தேதி வெளியிட்ட  "அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசு?" என்ற அறிக்கையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டும் அவரை பணி செய்ய வற்புறுத்தும் கொடுமையையும், குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரவி இருக்கக் கூடிய வாய்ப்பையும் குறிப்பிட்டிருந்தேன். இதுவாவது மாவட்ட அளவிலான ஒரு மருத்துவமனை. 

 

இப்போது அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் வருகின்றன. திருமானூர் ஒன்றியத்தில் இரண்டு செவிலியர்களுக்கும், தா.பழூர் ஒன்றியத்தில் ஒரு செவிலியருக்கும், மாவட்டத்தில் ஒரு சுகாதார ஆய்வாளருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


ஆனால் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல், பணி செய்ய வற்புறுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் கிராமத்து மக்களோடு பணிபுரிபவர்கள். மிக எளிதாக கிராமங்களில் கரோனா பரவ கதவை திறந்து விட்டது போல் உள்ளது, அரசின் நடவடிக்கை.


இத்தனை சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவி இருப்பதை கண்ட மற்ற மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தங்களுக்கு சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க, அது மறுக்கப்பட்டுள்ளது. 


காரணம் கேட்டதற்கு, எப்படியும் உங்களுக்கு கரோனா தொற்றி இருக்கும், நீங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் யார் பணியாற்றுவது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.  அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறை அமைச்சராக செயல்படும் மருத்துவ துணை இயக்குநர் ஆணை இது.

 


இவர்களது வயது காரணமாக, இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும், இவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். இன்னொரு பக்கம், இவர்களின் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும். 

இது குறித்து மற்ற மாவட்டங்களில் விசாரித்தபோது, "ஆமாம். இங்கும் அதே நிலைதான். இனி ஸ்வாப் டெஸ்ட் எனப்படும் தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுக்கும் பரிசோதனை மருத்துவர்களுக்கோ, சுகாதாரப் பணியாளர்களுக்கோ கிடையாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்து விட்டார்களாம்", என்கிறார்கள். 

 

 

 


இவர்களிடம்தான், கிராமத்தில் இருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்று தெரியாதவர்களும் சிகிச்சைக்கு செல்கிறார்கள். அதனால், நோயாளிகள் மூலம் தொற்று பரவி, அறிகுறி தெரியாமலே இருக்கக் கூடிய மருத்துவத் துறையினர் கரோனா தொற்று பரப்பும் நிலைக்கு ஆளாவார்கள். அதனால் கிராமங்களில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கரோனா தொற்று பரப்பும் கேந்திரங்களாக 'ஹாட் ஸ்பாட்களாக' மாறிக் கொண்டிருக்கின்றன.


இந்த மருத்துவர்களுக்குதான் எல்லா வசதிகளும் செய்யப்படும், என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  போதி தர்மர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார். மக்களை காக்க வேண்டிய துறை இவருடையது. ஆனால், தன் துறையில் பணிபுரிபவர்களையே காக்காத பெருமகனாக திகழ்கிறார். இதை விட முக்கியப் பணிகள் அவருக்கு இருக்கின்றன. ஆம், தனி கம்பெனிகள் ஆரம்பிக்க வேண்டும், அதன் மூலம் டெஸ்ட் கிட்டை அதிக விலைக்கு வாங்க வேண்டும், கேமராக்கள் முன் ஸ்வீட் பர்சனாலிட்டியாக சிரிக்க வேண்டும். பாவம், எவ்வளவு வேலைகள். 

 

 


இந்த மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி சொல்லத் தான், மணியடிக்க சொன்னார் நமது மாண்புமிகு பிரதம மந்திரி மோடி. மணியடித்ததோடு முடித்துக் கொண்டார் போலும் பிரதமர். இடம்பெயர் தொழிலாளர்கள் போல், தம்மை நீண்ட பயணம் அனுப்பாமல் விட்டாரே பிரதமர் என ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான் போலும் மருத்துவத் துறையினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி அன்றோடு அதை மறந்து தனது மாமூல் டெண்டர் பணிகளில் மூழ்கி விட்டார். மீறி ஏதாவது கேட்டால், "அரசியல் செய்றாங்க", என தூக்கத்தில் எழுந்தும் கதறுவார். 


N95 மாஸ்க், முழு பாதுகாப்பு உடை, சரியான பாதுகாப்பு வசதிகள் எனக் கேட்ட மருத்துவர்களுக்கு அதை எல்லாம் கொடுக்காமல், அவர்கள் உழைப்புக்கு பரிசாக கரோனாவை தருகிறது எடப்பாடி அரசாங்கம். 

பிரதமர் செய்கையை மீம்ஸ் போட்டு கிண்டலாக கடந்து விட்டோம். ஆனால் அவர் தெளிவாகத் தான் செய்திருக்கிறார். ராணுவத்தை விட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர் வழியாக பூத்தூவியது ஒரு குறியீடாகத் செய்யப்பட்டிருக்கிறது போலும். 


ஆம், மருத்துவமனைகள் மேல் பூத்தூவி, இதை மட்டும் தான் தாங்கள் செய்ய முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் காட்டியிருக்கின்றன. 


முதலில் மருத்துவர்களை காப்பாற்றுங்கள், அவர்கள் மக்களை காப்பாற்றுவார்கள்!''

இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்