நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நெருக்கடியான காலத்தில் தற்சார்புடன் இருக்கவேண்டும். 21ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவுக்குச் சொந்தமானது. அந்தக் கனவு மெய்ப்பட, இந்தியாவின் தற்சார்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். ‘தற்சார்பு’த் தன்மையுடன் ஒரு நாடு வளர வேண்டும் என அதன் பிரதமர் விரும்புவது பாராட்டுக்குரியது.
இந்தியா என்பது ஒரே நாடல்ல. புவியியல் அமைப்பின்படியும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையிலும் இது ஒரு துணைக்கண்டம். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம். (India that is Bharat shall be a union of States)
பிரதமர் இப்போது தற்சார்பு பற்றிப் பேசுவதைத்தான், 1970களிலேயே ‘மாநில சுயாட்சி’ என உரக்க ஒலித்தது தமிழ்நாடு. கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா அரசும் அதன் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது. பல மாநிலங்கள் அத்தகையத் தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டாலும், மாநில உரிமைகளுக்கான குரலை அழுத்தமாக எதிரொலிக்கின்றன.
இடதுசாரிகள் ஆளும் கேரளா, இடதுசாரிகளைத் தோற்கடித்து திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்காளம், பா.ஜ.க.வின் பழைய அரசியல் கூட்டாளியும்-நிரந்தரக் கொள்கைக் கூட்டாளியுமான சிவசேனா ஆளுகின்ற மராட்டியம், இந்தியாவில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலமான தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனப் பல தரப்பிலிருந்தும் மாநிலங்களின் அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது.
மாநிலங்களின் சுயாட்சி என்பது, மத்தியில் உள்ள ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் கூட்டாட்சித் தன்மையைப் பொறுத்தே அமையும். அதைத்தான், “மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி” என சற்றொப்ப அரை நூற்றாண்டுக்கு முன் தி.மு.க. அரசு முன்மொழிந்தது. (அதிகாரப் பகிர்தல்-அதிகாரப் பரவல் அடிப்படையிலான கூட்டாட்சியையும் சுயாட்சியையும், பதவி அடிப்படையிலான மத்தியில் கூட்டணி ஆட்சியுடனும், மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சியுடனும் ஒப்பிட்டு மனநிறைவடைந்த கட்சிக்காரர்களும் உண்டு)
உண்மையான கூட்டாட்சித்தன்மை இல்லாமல், மாநிலத்தில் சுயாட்சி என்பதோ, கூடுதல் அதிகாரம் என்பதோ நடைமுறைக்கு வராது என்பதை இந்தப் பேரிடர் காலம் மெய்ப்பித்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை, வரைவு மின்சார சட்டத் திருத்தம், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி (நீர் ஆற்றல்) துறையுடன் இணைத்தது என மாநிலங்களின் மிச்சமுள்ள அதிகாரங்களையும் பறித்து, ஏற்கனவே குவிந்திருக்கும் தன் அதிகாரத்தின் மீது கூடுதலாகச் சேர்த்துக் கொள்கிறது ஒன்றிய அரசு.
மத்திய அரசின் கீழ் உள்ள துறைகள்-மாநில அரசின் கீழ் துறைகள்-இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள துறைகள் என மூன்று பிரிவுகளின் உள்ள துறைகளில், மூன்றாவது பிரிவின் மீது தன் அதிகாரத்தைச் செலுத்துவது ஒன்றிய அரசுகளின் நீண்டகால வழக்கமாக உள்ளது. அத்துடன், இரண்டாவது பிரிவில் உள்ளவற்றைத் தன் வசப்படுத்துவதும், முதல் பிரிவின் கீழ் புதுப்புது துறைகளை உருவாக்கிக் கொள்வதும் தொடர்கிறது.
பேரிடர் மேலாண்மை என்பது 2004 ஆழிப்பேரலைக்குப் பிறகு, மத்திய ஒன்றிய அரசு வலிமைப்படுத்திக் கொண்ட துறையாகும். தற்போது கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பரவக்கூடிய நோய் என்ற அடிப்படையில் இதனை ஒன்றிய அரசு பேரிடர் மேலாண்மை ஆளுகைக்குள் கொண்டு வந்து, மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது.
அதே நேரத்தில், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணிகளை மேற்கொள்ளும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் (பொது சுகாதாரம்), தூய்மைப் பணியும் மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருப்பவை. எனவே மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோய்த்தொற்று நிலைமையைப் பொறுத்து, கட்டுப்பாடுகளைக் கூடுதலாக்கவோ குறைக்கவோ அதிகாரம் உள்ளது.
கேரள அரசு அதனை மேற்கொள்ள முன்வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு எதிரான நிலையை எடுத்து, கட்டுப்படுத்தியது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாவட்டங்களை ஒன்றிய அரசு வகைப்படுத்தியதிலும் மாநிலங்களின் மீதான ஆதிக்கம் இருந்தது. பெரியளவிலான மாவட்டங்களில் ஒரு பகுதியில் உள்ள நோய்த்தொற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சிவப்பு மண்டலமாக அறிவிக்கும்போது, மொத்த மாவட்டமும் முடக்கப்பட்டு, தொழில்கள் பாதிக்கப்படுவதால் மாநிலத்தின் வருவாய் இழப்பு குறித்து ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை, இது பற்றி, பல மாநிலங்களும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிதியும் வந்து சேரவில்லை.
ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை விதிகளின் அடிப்படையில், மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ள நோய்த்தொற்றுத் தடுப்புத் துறைகளை மீறி செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல எனக் குறிப்பிடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரசாந்த பூஷன்-ஷ்யாம் அகர்வால் இருவரும், மேலும் சிலவற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான அதிகார வரம்புகள் பற்றிய சர்ச்சைக்குரிய துறைகளில் எடுக்கப்படும் முடிவுகள் இணக்கமானவையாக இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியிருப்பதையும், ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை அரசியல் சட்டம் வழங்கியிருந்தாலும், மாநில அரசுகளும் இறையாண்மை கொண்டவை என்பதை பல்வேறு காலங்களிலும் வழங்கிய தீர்ப்புகளில் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். (Riding roughshod over State Governments- THE HINDU May 13, 2020)
தற்சார்பு-உள்நாட்டுச் சந்தை-தன்னிறைவு உள்ளிட்டவை இந்திய ஒன்றிய அரசுக்கு மட்டும் உரியவையன்று. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அவை உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே கூட்டாட்சித் தத்துவம்தான். இதனையும் உச்சநீதிமன்றம் பலமுறை நினைவுபடுத்தியுள்ளது. அதை மறந்தும் மறுத்தும், மாநில அதிகாரங்களைப் பறித்துக்கொண்டு, ‘எல்லாமே நான்தான்’ என மத்திய அரசு செயல்படுவது என்பது தற்சார்பு அல்ல, ஜனநாயக விரோதம் கரோனாவை விட கொடூரம்.