சிறு வயதிலேயே பல்வேறு உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் கிரிஷ் ஆதித் மற்றும் அவரது தந்தை பிரவீன்குமாருடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
சாதனை சிறுவனின் தந்தை பேசியதாவது “ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் தான் செய்த சாதனை மூலம் கிரிஷ் ஆதித் இடம்பிடித்துள்ளான். ஒரே நேரத்தில் ஸ்கேட்டிங், ரூபிக் க்யூப் ஆகியவற்றைக் கையாள்வது தான் அந்த சாதனை. மூன்று வருட பயிற்சியில் அவனுக்கு இது சாத்தியமானது. கொரோனா காலத்தில் அதிகமான பயிற்சிகளை வழங்கினோம். 47 செகண்டில் 5 முறை அவனால் ரூபிக் க்யூப் சால்வ் செய்ய முடியும்.
இந்த உலக சாதனைகள் குறித்த புரிதல் நம் அளவுக்கு குழந்தைகளுக்கு இருக்காது. இவனை ஒரு இடத்தில் உட்கார வைப்பது தான் எங்களுக்கு பெரிய சவால். பள்ளியிலும் இது குறித்த தகவல்களை நாங்கள் தெரிவித்துவிட்டதால் அதிக அழுத்தத்தை தருவதில்லை. ஆனால் இயற்கையிலேயே நன்கு படிக்கக் கூடியவன். அவனுக்கு கால்பந்தின் மீதும் ஆர்வம் அதிகம். நாம் அதிக அழுத்தம் தராமல் குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டால் அவர்களுடைய திறமைகள் தானாக வெளிவரும்.
படிப்பு மற்றும் பிராக்டீஸ் முடித்தவுடன் கொஞ்ச நேரம் தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்க்க அனுமதிப்போம். ஆனால் அதற்கு அடிமையாக விடுவதில்லை. மற்ற பிள்ளைகளோடு விளையாட விடுவோம். உலக சாதனையில் ஈடுபடும்போது முதல் நாள் எங்களுக்கு பயமாக இருந்தது. என்னை விட அவருடைய தாய் இதற்காக அதிக முயற்சிகளை எடுத்தார். மேலும் இந்த விளையாட்டுகள் மற்றவற்றை விட வித்தியாசமானவை. இவை அனைத்துமே மாடர்ன் சர்க்கஸ் என்று அழைக்கப்படுகின்றன.
மற்ற விளையாட்டுகளை விரைவாகக் கற்றுக்கொண்டான். ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள மட்டும் கொஞ்சம் தாமதமானது. விளையாட்டுகளை அவனுக்கு ஒவ்வொன்றாகத் தான் நாங்கள் கற்றுக்கொடுத்தோம். இந்த விளையாட்டுகளை எனக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்லி அவனிடம் தற்போது கேட்டு வருகிறேன்.