நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றதை பாஜக கொண்டாடி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்கிற விமர்சனம் காங்கிரஸ் மத்தியில் எதிரொலித்தது.
தோல்வி காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன், அதனை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக கட்டியின் காரிய கமிட்டியை (செயற்குழு) கூட்டி விவாதிக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரசில் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், 25.05.2019 சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் பல்வேறு மாநிலங்களில் விவாதங்கள் எழுந்தன.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஷீலா தீட்சித், அசோக் கெலாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ''கடந்த தேர்தலில் துணைத் தலைவராக இருந்தேன். அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அதேபோன்று இன்று ஏற்பட்ட தோல்விக்கு நானே முழுக்க பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இந்த தோல்விக்கான காரணத்தை நாம் முழுமையாக ஆய்வுப்படுத்த வேண்டும்'' என்று கூறியதுடன், தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை கூட்டத்தில் அளித்துள்ளார்.
அப்போது மன்மோகன் சிங், ''தேர்தல் என்றால் வெற்றியும் தோல்வியும் சகஜமானது. தோல்வி ஏற்பட்டது என்பதற்காகவே பதவி விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. உங்கள் தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனால் உங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க இயலாது. அதை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார் உருக்கமாக. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர். ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்தனர். மூத்த தலைவர்களின் வலியுறுத்தலை ராகுல் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்தே, ராகுல் ராஜினாமா செய்தார் என பரவிய தகவலுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. "ராகுல் ராஜினாமா செய்தார் என செய்தி பதிவாவதன் மூலம் ராகுலின் இமேஜ் குறைந்து விடும் என காரிய கமிட்டி கருதியதால்தான் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது " என்கிறன்றனர் கதர் சட்டையினர்.