Skip to main content

இதில் ஓ.பி.எஸ்.சின் சதி இருப்பதாக சந்தேகப்படுகிறேன்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

அரசியல் கட்சியினர் மட்டுமல்ல, வாக்களித்த மக்களும் அதிர்ச்சியில் தான் உள்ளனர். மதுரையைத் தொடர்ந்து தேனி, ஈரோடு ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மின்னணு இயந்திர முறை கேடு பலவித சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் பெரும்பான்மைக் கனவு சந்தேகமாகியுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க  தொகுதிக்கு 20 வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்குகள் அதிகமாக இருக் கும்படி செய்து, அதிகாரிகள் துணையோடு மாற்றி வைக்க மோடி திட்டமிட்டிருப்பதை நக்கீரனில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். 

 

ops



அதை நினைவூட்டும் வகையில் தேனி தொகுதியிலும், ஈரோடு தொகுதியிலும் திடீரென வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகளை கையெழுத்து போட வரும்படி அதிகாரிகள் அழைத்ததும் பதற்றம் தொடங்கியது. எந்தவிதமான காரணமும் இல்லாமல் தேனி தொகுதிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஈரோடு தொகுதிக்கு 20 வாக்குப்பதிவு எந்திரங்களும் வந்திருப்பதாக தகவல் பரவியதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆவேசமடைந்தனர். 

 

stalin



தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டி யிடுகிறார். ஒரு வாக்கிற்கு 5 ஆயிரம் ரூபாய்வரை செலவழித்துள்ளார். வாரணாசி வரை சென்று ஓ.பி.எஸ்.ஸும் மகனும் மோடியை சந்தித்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்ததால், எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்யத் திட்டமிட்டிருப்பதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, தேனியில் உள்ள தாலுகா அலுவலகம் முன் எதிர்க்கட்சி களின் தொண்டர்கள் திரண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பாகியது. தாசில்தார் மணவாளனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவும், எஸ்.பி. பாஸ்கரனும் தாலுகா அலுவலகம் வந்தனர்.   

 

evks



ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஆகிய இரண்டு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்காக இந்த எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்த வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி முகவர்களால் போடப்பட்ட 50 சோதனை வாக்குகளை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்க மறந்துவிட்டார் என்றும், அதன்காரணமாகவே மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்படாத நிலையில்... தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுப்பதாக தெரிவித்தார் கலெக்டர். 
 

ops son



மாவட்ட ஆட்சியர் பல்லவி நம்மிடம், "தேர்தல் சமயத்தில் வாக்கு எந்திரங்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவது இயல்பான விஷயம்தான். வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவெல்லாம் முடியாது'' என்றார்.எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் கேட்டபோது, "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவர் கல்லூரி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. கல்லூரிப் பேருந்துகள் உள்ளே வந்து செல்கின்றன. இங்கிருந்து வாக்கு எந்திரங்களை மாற்ற வாய்ப் பிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம்''’என்றனர். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசிய போது…"இதில் ஓ.பி.எஸ்.சின் சதி இருப்பதாக சந்தேகப்படுகிறேன்''’என்றார். 

தேனியில் இப்படியென்றால், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருமங்கலம் ஊராட்சிப் பள்ளி பூத்தில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்காக என்று 20 விவிபேட் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வாக்குச் சாவடியில் எந்திரத்தை சரிபார்க்க முகவர்கள் போட்ட மாதிரி வாக்குகள் 50. அதை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்காமல் விட்டுவிட்டார். அந்த பூத்தில் பதிவான மொத்த வாக்குகள் 736. அழிக்காமல் விட்ட வாக்குகளையும் சேர்த்தால் 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெட்டியில் இருந்தது 777 வாக்குகள்தான். 9 வாக்குகள் குறைவாக காட்டியதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.   

தேனி தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்த அதிகபட்சமாக 8 எந்திரங்கள் போதுமானது. ஈரோடு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச மாக 4 எந்திரங்கள் போதுமானது. ஆனால், தேனிக்கு 50 எந்திரங்களும், ஈரோடுக்கு 20 எந்திரங்களும் கொண்டுவரப்பட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

- சக்தி, ஜீவாதங்கவேல்.