''பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்'' என்று கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலினின் பேச்சு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான எஸ்.எஸ்.சிவசங்கர்:-
தலைவர் கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழா. தலைவர் கலைஞர் இருந்து ஒரு கழக விழா நடந்திருந்தால் என்ன நடைபெற்றிருக்குமோ, அது சிறப்பாகவே நடந்துள்ளது. தலைவர் கலைஞர் இடத்தில் இருந்து, தலைவர் ஸ்டாலின் நடத்தி இருக்கிறார்.
1980 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல். இந்திராவை அழைத்து, சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை தலைவர் கலைஞர் நடத்தினார். அது அகில இந்திய அரசியலில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
காரணம், இந்திராவும் கலைஞரும் எதிரெதிர் அணியில் இருந்திருந்தனர். அவர்கள் கூட்டணி அமைத்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.
1976 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். எதிர்கட்சிகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்கினார். கலைஞர் தலைமையிலான தி.மு.க, நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தது. தி.மு.க ஆட்சியை கலைத்தார் இந்திரா.
சர்வாதிகார ஆட்சியின் ஆட்டம் எல்லையை கடந்தது. இந்தியாவே இந்திரா மீது கோபம் கொண்டது. 1977 தேர்தலில் அது பிரதிபலித்தது. இந்திரா காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. ஜனதாவில் இருந்த தலைவர்கள் இடையிலான மோதலில் ஜனதாவும், ஆட்சியும் சிதைந்தது. மக்களின் நம்பிக்கையை இழந்தது ஜனதா. ஜனதா தலைவர்கள் ஜோக்கர்களாக கருதும் சூழல் ஏற்பட்டது.
அந்த நிலையில் நாட்டின் நிலையே சிக்கலானது. ஒரு நிலையான ஆட்சி அமைந்தால் தான் இந்தியா காப்பாற்றப்படும் என்ற சூழல். அந்தக் கட்டத்தில் தான், கலைஞர் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார். "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக!" என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முழங்கினார். இந்தியாவிலேயே முதல் குரல் கலைஞருடையது தான். அதுவே இந்தியாவின் குரலாகவும் ஆனது. இந்திரா 374 தொகுதிகளில் வென்று, பிரதமரானார்.
1989 ஆம் ஆண்டு. காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்காந்தி போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நேரம். வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியை வடிவமைத்தவர்களில் கலைஞர் முக்கியமானவர். வி.பி.சிங் பிரதமரானார்.
1996 ஆம் ஆண்டு தேர்தல். காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். காங்கிரஸ் தோல்வியை தழுவியது. ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தி.மு.க இணைந்தது. தெற்கில் இருந்து தேவகௌடா பிரதமராக, கலைஞரே முக்கியக் காரணம். தனக்கு வந்த பிரதமர் வாய்ப்பை, "என் உயரம் எனக்கு தெரியும்" என்று உதறினார் கலைஞர்.
1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஜெயலலிதா ஆதரவில் அமைந்திருந்தது. தி.மு.க அரசை கலைக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தார். வாஜ்பாய் ஒப்புக் கொள்ளவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி. வாஜ்பாய் ஆட்சிக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்று, ஆட்சியை கவிழ்த்தார்.
ஜெயலலிதாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த, அந்த நேரத்தில் வாஜ்பாய்க்கு தி.மு.க ஆதரவளித்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் வாஜ்பாய் தலைமையிலான அரசில் தி.மு.க இடம் பெற்றது. பின்னர் பா.ஜ.கவின் மதம் சார்ந்த நடவடிக்கைகள், குஜராத் கலவரம் போன்றவை தி.மு.கவின் ஆதரவை விலக்கிக் கொள்ள செய்தது.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். பா.ஜ.க ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது. காங்கிரஸ் தலைவராக சோனியா வந்திருந்தார். சோனியாவை பிரதமராக முன்மொழிந்தார் கலைஞர். காங்கிரசிலேயே முன்மொழியாத போது, சோனியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் கலைஞர்.
ஆனால் வெளிநாட்டவர் என தன்னை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்ததை மனதில் கொண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் சோனியா. அப்போதிருந்து கலைஞர் மீது சோனியாவிற்கு தனி மரியாதை ஏற்பட்டது.
வரலாறு திரும்பி இருக்கிறது, இப்போது.
மோடியின் ஆட்சியில் இந்தியா கிழித்துப் போடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சிக்கான எச்சரிக்கை மணியை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் அடித்துள்ளன.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கடந்த 2017 ஆம் ஆண்டு கலைஞர் பிறந்தநாள் விழாவிலும், முரசொலி பவள விழாவிலும் இந்திய அளவில் ஓர் எதிர்கட்சி ஒற்றுமைக்கான வழியை ஸ்டாலின் காட்டினார்.
இப்போது தலைவர் கலைஞர் சிலை திறப்புவிழாவில், அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவிற்கு தலைப்பு செய்தியை கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறார். காங்கிரஸில் இருந்து குரல் வரும் முன்பே, தலைவர் கலைஞர் இடத்தில் இருந்து ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
இந்திய அளவில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய கட்சி தி.மு.க. கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. பி.ஜே.பிக்கு வாய்ப்பு இல்லாத மாநிலமும் இது தான். தி.மு.க உறுதியாக அடுத்து வரும் தேர்தலில் வெல்லும் என்ற சூழலில் ஸ்டாலின் இந்த அறிவிப்பைக் கொடுத்திருப்பது ஓர் முக்கிய நகர்வு.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளோ அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள் இனி பேரம் பேச வாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்கி விட்டார் ஸ்டாலின்.
சேடிஸ்ட் பிரதமர் மோடி ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதையும் அறிவித்து விட்டார் ஸ்டாலின்.
தமிழகத்தின் குரலாக, தலைவர் கலைஞரின் குரலாக தலைவர் ஸ்டாலின் ஒலித்திருக்கிறார், அதுவும் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில்.
தேசிய அரசியலில் தன் முத்திரையை பதித்து விட்டார் ஸ்டாலின். இதுவரை கலைஞர் முன்மொழிந்து பல பிரதமர்கள் உருவானார்கள். இப்போது ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்.
ஸ்டாலின் குரலை இந்தியா வழிமொழியும்!