கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரான செந்தில் பாலாஜி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் எஞ்சினியர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இவர் தினகரன் தலைமையிலான அமமுகவில் சில காலம் பணியாற்றினார். பின்னர், அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்து பணியாற்றினார்.
இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதன் பின்னர், தமிழக பாஜகவுக்கு எதிரான கருத்துகளை மிகவும் ஆணித்தரமாகப் பேசத் தொடங்கினார். சமீபத்தில் கூட, ரஃபேல் வாட்ச் பில் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இவருக்கும் நடந்த வாதப்பிரதிவாதம் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது மின்சாரம் தடைப்பட்டது. இது வேண்டுமென்றே செந்தில் பாலாஜிதான் செய்தார் எனக் கூறி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மின்துறை அதிகாரிகள், போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்தப் பாதையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதே மின் இணைப்பு தடைப்பட்டதற்கு காரணம் என விளக்கமளித்தனர். இருப்பினும், இதனால் அமித்ஷா கடும் ஆவேசமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி, கரூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்தி வந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே, அமைச்சரின் வீட்டில் ரெய்டு நடந்த சலசலப்பு அடங்குவதற்குள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். அதேபோல, ஜூன் 13 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில், ஆயுதம் ஏந்திய போலீசாருடன் வீட்டின் உள்ளே வந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இல்லத்தில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், இப்போது நேரடியாக செந்தில் பாலஜியின் வீட்டிற்கே சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
அதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அதிமுக ஆட்சியில், தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ரெய்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் வந்திருந்தனர். அதிகாரிகளை மட்டும் அனுமதித்த தமிழக போலீஸ், முறைப்படி துணை ராணுவப்படை அதிகாரிகளை உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது எனக் கூறி, தலைமைச் செயலகத்தின் 6 ஆம் எண் நுழைவு வாயிலிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வாசலிலேயே காத்திருந்தனர்.
மேலும், வங்கி பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக, எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதற்காக வெளியே சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியறிந்து அவசர அவசரமாக வீட்டுக்கு விரைந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், அமலாக்கதுறையின் இந்த திடீர் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதேபோன்று, சென்னை அபிராமபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை துணை ராணுவப் படையினர், வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பகுதி மேலும் சில மணி நேரம் பரபரப்பானது.
அதனைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி ஒன்றிய அரசின் மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து, ‘முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக அச்சுறுத்த நினைக்கிறது பாஜக’ எனக் கடுமையாக சாடியுள்ளார். இதற்கெல்லாம் திமுக அரசு ஒருபோதும் அச்சப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 18 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையின் இறுதியில், அவர் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது.. ஐயோ.. என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறிய செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2.15 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, கே.என்.நேரு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் போய்ச் சந்தித்துள்ளனர். செந்தில் பாலாஜியின் காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்றும் நான்கைந்து முறை அழைத்தும் அவர் கண்களை திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்தார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செந்தில் பாலஜியின் மனைவி மேனகா, சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் திமுகவை மிரட்டுவதற்காகவே இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.