இரும்புத்திரை படம் வெளியான பின்பு தமிழக மக்கள் பலருக்கு ஒரு அச்சம் இருக்கிறது. அந்த படத்தில் வருவது போல நம்முடைய அந்தரங்கங்களையும் ஹேக்கர்கள் எளிதில் திருடிவிடுவார்களோ, அதை வைத்து நம்மையும் மிரட்டுவார்களோ என்கிற பயம் மனதின் ஏதாவது ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஏற்றாற்போல் டிராய் அமைப்பின் தலைவர் 'ஆதார் எண்'ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முடிந்தால் என்னுடைய தகவலை வெளியிடுங்கள் என்று பகிரங்கமாக சவால் விட்டார். அதற்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த ஒரு ஹேக்கர் டிராய் தலைவருடைய அந்தரங்களை எல்லாம் எடுத்து மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் பொது மக்களின் அச்சத்தை இன்னும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார். ஆனால், ஆதார் அமைப்பு டிராய் தலைவருடைய எந்த அந்தரங்கமும் ஹேக் செய்யப்படவில்லை என்று மறுப்புதான் தெரிவித்திருக்கிறது.
இந்த செய்திகள் ஓய்ந்து முடிவதற்குள், மேலும் ஒரு செய்தி மக்களின் அச்சத்தை கூட்டியிருக்கிறது. இதைப்படித்துக்கொண்டு இருக்கும்போதே உங்களுடைய ஆன்ட்ராய்டு கைபேசியில் காண்டாக்ட் லிஸ்ட்டை எடுத்து பாருங்கள், நீங்கள் சேமிக்காத ஒரு எண் 18003001947 'UIDAI' என்று சேமிக்கப்பட்டிருக்கும். அப்படி அந்த எண் உங்கள் மொபைல்களில் சேமிக்கப்பட்டிருந்தால், உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் செய்திகள் உலாவருகிறது. இது உண்மையா என்று மக்கள் பலருக்கும் குழப்பத்திலேயே இருக்கின்றனர். இது பற்றி ஆதார் அமைப்பும்," எதோ ஒரு மர்மமான முறையில் உங்களது மொபைல்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது" என்று அறிக்கை வெளியிட்டது. ஆதாருக்கே இந்த விஷயம் தெரியவில்லையே என்று மேலும் மக்கள் குழம்ப ஆர்மபிக்கின்றனர். அதற்குள் இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவிவிட்டது.
உண்மையில் படங்களில் காட்டுவது போன்று நம்முடைய வாழ்க்கையின் முக்கிய தேவையாக இருக்கும் மொபைல் ஹேக் செய்யப்பட்டதா, செய்யப்பட்டதா... என்று தீவிர யோசனையிலேயே இருக்கும் மக்களுக்கும், எதையாவது ஒரு செய்தி வைத்து மக்களை பயமுறுத்தலாம் என்று யோசித்தவர்களுக்கும் கூகுள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த பிரச்சனைக்கு நாங்கள் தான் காரணம் என்றது. கூகுள் அறிக்கையில்," ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக ஆதார் உதவி மையம் இலவச அழைப்பு எண் கோடிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 2014-ல் வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் தளத்தில் இருந்தது மட்டுமல்லாமல் புதிய சாதனத்திலும் அப்டேட் ஆகி உள்ளது " என்று தெரிவித்துள்ளனர். இந்த uidai எண் சில ஐபோன் ஓ.எஸ் பயன்பாட்டாளர்களுக்கும் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். இது ஆதார் சேவைமையத்தின் எண்ணே இல்லை, இதற்கு முந்தைய அரசாங்கம் 2014ஆம் ஆண்டில் சேர்க்க சொன்ன விஷயத்தை கூகுள் நிறுவனம் தவறுதலாக தற்போது சேர்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நம்முடைய அனைத்து தகவல்களையும் கூகுளும், பேஸ்புக்கும் இதர சமூக வலைதளங்களும் நோட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன, நாம் என்ன மாதிரியான பதிவுகளை விரும்புகிறோம் என்பதை தெரிந்து, விரும்பிய விஷயங்களின் விளம்பரங்களை நமக்கு காட்டும் அளவுக்கு இந்த டிஜிட்டல் யுகம் இருக்கிறது. நாம் ஏற்கனவே நம்முடைய தகவல்களை தாரைவார்த்துவிட்டோம். UIDAI என்ற எண் உங்கள் மொபைலில் ஏற்றப்பட்டிருந்தால் பயப்படவேண்டாம். ஆனால், ஒரு விஷயம் உங்களுடைய அனுமதி இல்லாமலே உங்களுடைய மொபைலில் ஏற்றப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய தவறான ஒன்று அதற்கு அந்த நிறுவனமோ ஒரு அறிக்கையில் பதில் அளித்து முடித்துவிட்டனர். இது போன்ற ஒரு விஷயம் அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும், பல சுதந்திரங்களை பற்றி பேசும் நாம் இந்த அத்துமீறலை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது வருங்காலத்தில் பெரிய சிக்கலை உருவாக்கும். இணையத்தில் நமக்கு தனியுரிமை (privacy) எதும் இல்லை என்று கூறும் அளவிற்கு ஆகிவிட்டது. இதற்குமேல் தாரைவார்க்க ஏதேனும் இருக்கிறதா இந்த டிஜிட்டல் உலகத்தில்? என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.