அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் பதவியில் இருந்து திமுக நீக்கியது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது குறித்தும் குஷ்பு செய்தியாளர் சந்திப்பு குறித்தும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகியை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் ஒரு பகுதி:
பாஜகவில் இருக்கக்கூடிய டெய்ஸிக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது குஷ்பு அமைதியாக இருந்ததற்கு காரணம் என்ன?
எல்லா விஷயத்திற்கும் குஷ்பு தலையிட வேண்டும் என அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாஷேத்ரா விவகாரத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, 'என்னை பற்றி விமர்சனம் செய்தால் தான் மாதர் சங்கம் லைம் லைட்டுக்கு வரும்’ என எங்களது பொதுச்செயலாளருக்கு பதில் அனுப்பியிருந்தார் குஷ்பு. இதற்கு பதில் அளித்த நான், ஜனநாயக மாதர் சங்கத்துக்கு அந்த புகழெல்லாம் தேவை இல்லை. இத்தனை வருடங்களில் அந்த புகழை எதிர்பார்த்து நாங்கள் காவல் துறையிடமும், சமூக விரோதிகளிடமும் மோதவில்லை. உங்களை பற்றி அதிகமாக யோசிக்கிறீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால், ஆணைய உறுப்பினர் என்ற முறையில் முக்கியமான விஷயங்களில் குஷ்பு தலையிட வேண்டும். குற்றவாளிகள் பலரும் அவருடைய கட்சியில் இருப்பதன் பின்னணியில் பாஜக உறுப்பினராக இல்லாமல் மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து அவருடைய கட்சி தலைமையோடு கூட குஷ்பு மோத வேண்டிய அவசியம் ஏற்படும். அவர் அதை செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறுகின்றோம்.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராடிக் கொண்டிருந்தபோது குஷ்பு அமைதியாக இருந்ததன் காரணம் என்ன ?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவில் இருந்தால் பாஜக தரப்பினர் தேடித் தேடி அதில் தலையிடுவார்கள். சமீபத்தில் கூட மைக்கல்பட்டியில் பள்ளி சிறுமி மரணம் அடைந்த விஷயத்தில் குழந்தை உரிமைகள் ஆணையம் உடனே தேடி வந்து விசாரித்தார்கள். அதில் காட்டிய கவனம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளிலும் காட்ட வேண்டும். காஷ்மீர் கத்துவாவில் நடந்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கவனம் காட்டியது இல்லை. அதே போல் உத்தரப்பிரதேசம் உன்னாவ் சம்பவம் உட்பட அந்த மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் பல நிகழ்ந்து உள்ளன. ஆனால், மகளிர் ஆணையம் அங்கு என்ன கவனம் காட்டியது என்ற கேள்வி எழுகிறது.
பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நோக்கத்தை வைத்து கொண்டு பார்ப்பது, எதிர்க்கட்சியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டால் உடனே அதில் தலையிடுவது மற்றும் மைக்கல்பட்டி போன்ற மத சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போன்று குறிப்பிட்ட விஷயத்தில் தான் தலையிடுகிறார்கள். மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில், நீதிமன்றத்தில் விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர அங்கு போராடும் வீராங்கனைகளுக்கு நேரில் சென்று ஆதரவு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது. சட்டம் எங்களுக்கு தெரியவில்லையா அல்லது குஷ்புவுக்கு தெரியவில்லையா என்று தான் நான் கேட்கிறேன்.
உங்களுடைய கணவருடைய சொத்தை பாதுகாப்பதற்குத்தான் கட்சி மாறுகிறீர்களா என்று குஷ்புவிடம் ஒருவர் கேட்டபோது, உங்கள் வீட்டுப் பெண்களை வைத்துத்தான் நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார் குஷ்பு. பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய குஷ்பு பிறர் வீட்டுப் பெண்களை இழிவாகப் பேசுகிறாரே?
எல்லோருக்கும் அளவுகோல் என்பது சமம் தான். பெண்களை பாலியல் ரீதியாக அவதூறுகள் செய்யக்கூடாது என்று சொன்னால் அது அனைவருக்கும் சமமான ஒரே நிலைப்பாடுதான். குஷ்பு அதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரியங்காவை சகோதரி என்று சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய ரேகா ஷர்மா 'ரெண்டு பேருக்கும் ஒரே அப்பாவா' என்று இழிவாகப் பேசுகிறார். ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடியவரே இப்படி பேசினால் மற்றவர்கள் எப்படி பேசுவார்கள்.