பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்
தேசிய பத்திரிகை, பத்திரிகையாளர் தினம்

"சுதந்திரமான பத்திரிகைத் துறை என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூணாகும். அப்படிப்பட்ட சுதந்திரத்தை இந்திய பத்திரிகைகளுக்கு எங்கள் அரசு உறுதி செய்யும்", என்று பிரதமர் மோடி நேற்று தேசிய பத்திரிகை தினத்தை (16 நவம்பர்) முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1966 இல் நவம்பர் 16 அன்று பத்திரிகை தர்மங்களை நிலைநாட்டவும், உரிமைகளை உறுதி செய்யவும் தேசிய பத்திரிகை கவுன்சில் உருவாக்கப்பட்டது. நவம்பர் 17ஐ பத்திரிகையாளர்களுக்கான தினமாக அனுசரித்து கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த நாட்களை முன்னிட்டு தான் பிரதமரின் இந்த வாழ்த்து. அவர் அப்படி சொன்னாலும், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்று தான் கூறவேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட உலக பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆண்டை விட மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிலவும் பத்திரிகை சுதந்திரத்திற்கு அடையாளமாக இருக்கிறது பின்வரும் பத்திரிகையாளர்களின் மரணம்.
ஷிவானி பட்னாகர்
1999ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஷிவானி பட்னாகர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். ஷிவானி, இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளர் ஆவார். இவரின் கொலை வழக்கில் முதலில் அவரின் கணவர் ராகேஷ் பட்னாகரிடம் போலீசார் பலமுறை விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் இந்த கொலைக்கும் அவருக்கும் தொடர்பில்லை என காவல்துறை முடிவு செய்தது. 2002 ஆம் ஆண்டு மூன்றாண்டுகள் விசாரணைக்கு பிறகு 3 பேரை காவல்துறை கைது செய்தது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் 3 பேர் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும். இதற்கு மூளையாக செயல்பட்டது ஐ.பி.எஸ். அதிகாரி ரவி ஷர்மா என்றும் தெரியவந்தது. அரசியல்வாதிகளுடனான பிரச்சனையில் கொல்லப்பட்டாலும், சொந்த பிரச்சனைகளுக்காக கொல்லப்பட்டார் என்றும் சர்ச்சையை கிளப்பினார் ரவி ஷர்மா.

ஷிவானி
இர்பான் உசைன்

இர்பான் உசைன், 1999 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். இவர் 'அவுட்லுக்' பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். அரசியல்வாதிகளைத் தொடர்ந்து விமர்சித்து இவர் வரைந்த கார்ட்டூன்கள் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக கடத்திக் கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். ஒரே ஆண்டில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொலைசெய்யப்பட்டது பத்திரிகையாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷிவானி மரணத்திற்கு பின் பத்திரிகையாளர்கள் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியிடம் சென்று நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வற்புறுத்தினர். அதன் பிறகு நடந்தது தான் இர்பான் கொலை.

இர்பான்
சாய் ரெட்டி

சாய் ரெட்டி
சாய் ரெட்டி, 2013 டிசம்பர் 6 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசுகுடா கிராமத்தில் உள்ள மார்க்கெட்டிலிருந்து வெளியேறிய பொழுது மர்மநபர்களால் தலை மற்றும் கழுத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். "தேசபந்து" எனும் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றினார். இவர் உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான விமர்சனங்களை தைரியமாக எழுதிவந்தார். இவரின் மரணத்திற்கு தாங்கள்தான் காரணம் என மாவோயிஸ்ட்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டனர்.
கௌரி லங்கேஷ்
கர்நாடகாவின் முக்கிய எழுத்தாளரான கல்புர்கி கொல்லப்பட்ட அதே பாணியில் கொல்லப்பட்டார் கௌரி லங்கேஷ். கௌரிலங்கேஷ்(55) பெங்களுரை சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர். இவர் தந்தையால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ' 'லங்கேஷ் பத்திரிகே'யை கௌரி எடுத்து நடத்தி வந்தார். தனது பத்திரிகையின் வாயிலாக சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவீரமாக முன்னேடுத்து வந்தார். இவர் தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராகவும், ஹிந்துத்துவ விமர்சகராகவும் அறியப்பட்டார். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாக கருத்து கூறிவந்தார். சில சமயங்களில் கொலைமிரட்டல்களும் வந்தன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பெங்களூரில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பிய போது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பத்திரிகையாளர்களும் செயல்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களாக இருந்து கொல்லப்பட்ட இவர்களின் மரணத்தில் பத்திரிகை சுதந்திரமும் மயக்கமடைகிறது. தமிழகத்திலும் எரிக்கப்பட்ட, அடித்து நொறுக்கப்பட்ட பத்திரிகை அலுவலகங்கள் இருக்கின்றன. அதை செய்தவர்கள் தான் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் இடத்திலும் இருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டித் தான் பத்திரிகையாளர்கள் இன்றும் புலனாய்கின்றனர்.
ஹரிஹரசுதன்