'வசந்த் அன் கோ' மறைந்துவிட்டாரா? என்று பலர் பேசிக் கொள்கிறார்கள். இப்படித்தான் பலருக்கு அவரது நிறுவனத்தின் பெயரே, அவராக தெரிகிறது அல்லது அவருக்கும் அவரது நிறுவனத்துக்கும் எந்த வித்தியாசமமும் இல்லாமல் தெரிகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள எளிய மக்களின் துயர் துடைப்பேன், அவர்களையும் பொருளாதார ரீதியாக உயர்த்த பாடுபடுவேன் என எந்த சபதமும் எடுத்துக்கொண்டு அகத்தீஸ்வரத்தில் இருந்து புறப்பட்டிருக்க மாட்டார். ஆனால், அதையெல்லாம் தன் வெற்றியின் மூலம் தன் வாழ்நாளிலேயே நிறைவேற்றி சென்றுள்ளார். அவர் மறைந்தவுடன் அவரைப் பற்றிய அனைத்து தகவல்களும் நம் கைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால், ஒரு 90'ஸ் கிட்ஸின் கண்கள் வழியே நீங்கள் வசந்த குமாரைப் பார்த்து இருக்கிறீர்களா?
ஏனெனில், 90 களில் பிறந்தவர்களுக்கு வசந்தகுமாரின் தாக்கம் இல்லாமல் இருப்பது அரிது. இன்றைய தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு 90 -களில் தான் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது தொலைக்காட்சிகள் எல்லோர் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடவில்லை. அதேபோல், தொலைக்காட்சி வைத்திருக்கும் வெகு சிலர் வீட்டுக்குள், எல்லோரும் நுழைந்துவிடவும் இல்லை. பாதிபேர் திண்ணைக் காட்சிதான். ஊருக்கு ஒரு டி.வி இருந்தால் அதிசயம். அங்கு, ஒவ்வொரு ஞாயிறும் காலையும் மாலையும் கூட்டம் நிரம்பி வழியும். காலையில் 'சக்திமான்', மாலையில் 'திரைப்படம்'. சில சமயம் டெல்லி அஞ்சலாக இந்தித் திரைப்படம் ஒளிபரப்பாகி கூட்டத்தை கண்ணீர்ப் புகை வீசி கலைத்துவிடும். அப்படி நிறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் "உழைப்பாளி" படத்தை சொல்லலாம்.
பல நேரம் இந்தி நிகழ்ச்சிகள் தான் ஒளிபரப்பாகும். இடையிடையே தமிழ் நிகழ்ச்சிகள். மாலை திரைப்படத்திற்கு முன், 15 நிமிட அளவில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த சமையல் நிகழ்ச்சியின் குழந்தை, குட்டிகள்தான் இன்றைய பல சமையல் நிகழ்ச்சிகள். அதே மாவைத் தான் இன்றும் அரைக்கிறார்கள் அனால் அந்த சுவை அளவுக்கு வராது. அந்த சமையல் நிகழ்ச்சிக்கு இடம் பிடித்தால்தான் 3 மணி நேர படத்தை இடையூறுகளின்றி பார்க்கலாம். சிறுநீர் வந்து எழுந்து சென்றால் நம் இடத்தை இன்னொருவன் பட்டா போட்டிருப்பான். அப்படிக் காலப் போக்கில் அந்த சமையல் நிகழ்ச்சி பிடித்துப்போன ஒன்றாக மாறிவிட்டது.
சமையல் கலைஞர்கள் சமைத்து முடித்ததும் அதை சாப்பிட மூன்று பேர் வருவர். அவர்கள் சாப்பிட்ட பிறகு, அவர்களுக்குள் பேசி முடிவு சொல்வர். அந்த மூவரில் ஒருவர் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட், இன்செய்து நடுவில் கறுப்பு பெல்ட், தோளில் துண்டு என பளிச்சென்று இருப்பார். அவர்தான் வசந்த் அன் கோ நிறுவனர் வசந்த குமார். அவர்கள் முடிவு சொல்வதற்காக சிறிது நேரம் எடுத்து கொள்வார்கள், அது நமக்கு கேட்காது. பின்னணி இசை ஒலிக்கும். அதன் பிறகு முடிவை அறிவிப்பார் வசந்தகுமார். அப்படித்தான் ஒரு 90'ஸ் கிட்ஸாக அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு, சில வருடங்கள் சுழன்று ஓடியது. அப்போது, அவரின் சுழல் நாற்காலி பெரும் புகழ் பெற்றது. அவர்தான், இன்றைய நிறுவன முதலாளிகள் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான தூண்டுகோலாக இருந்திருக்கக்கூடும். அன்றே, அவரின் நிறுவன விளம்பரத்திற்கு அவரே முகமாக இருந்தார். "அனைத்து வீட்டு உபயோக பொருட்களுக்கும், குறுகிய கால வீட்டுத் தவணை, இன்றே வாருங்கள் வசந்த் அன் கோ" என பின்குரல் சொல்லியதும், சூழல் நாற்காலியில் அவரின் முதுகு பகுதி தெரியும். பிறகு, மெதுவாக ஒரு சுற்று சுற்றி திரும்புவார். அதைப்போல சுற்றி பார்க்காத, அவரைப் போல அமர்ந்து பார்க்காத 90'ஸ் கிட்ஸுகளே இல்லை. தங்கள் கல்லூரி கம்ப்யூட்டர் அறையில் அந்த சேரில் அமர்ந்து சுற்றிய அனைவருக்குள்ளும் அவரின் தாக்கம் ஆழமாய் இருந்திருக்கும்.
அவர் வெறுமனே விளம்பரம் செய்து லாப நோக்கில் மட்டும் செயல்படவில்லை. அடித்தட்டு மக்களுக்கு எதுவெல்லாம் எட்டாக் கனியாக இருந்ததோ அதுவெல்லாம் சென்று சேர பாலமாய் இருந்தார். தவணை முறைகளைக் கொண்டு வந்ததால்தான், பல ஏழை வீட்டுத் திருமணம் நிறைவோடு நடைபெற்றது. பிற்காலத்தில் அரசியலுக்குள் நுழைந்தவர் எம்.எல்.ஏ, எம்.பி, என தனது அத்தனை அஸ்திரத்தையும், மக்களுக்கு நன்மைகள் செய்ய பயன்படுத்தி கொண்டார். நாடாளுமன்றத்தில் 88 சதவீதம் வருகை புரிந்து மக்கள் நலன் சார்ந்த கேள்விகளையும் விவாதங்களையும் நடத்தியுள்ளார். அதில் மார்ச் மாத நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு ,"கரோனாவை தேசிய பேரிடராக அறிவித்து தினக்கூலி தொழிலாளர்களுக்கு 2,000 வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்தார்." இதுதான் அவரின் கடைசி நாடாளுமன்ற விவாதம். பலருக்கும் அவரது மரணம் வலியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால், குறை நிறைகளுடைய வெகுஜனத்தின் பிரதிநிதியாக பல நேரங்களில் வசந்தகுமார் வெளிப்பட்டுள்ளார்.
"அந்த காலம், அது அது அது...... இந்த காலம், இது இது இதுவும் நம்....." என எல்லா காலமும் அவர் நிறைந்திருப்பார்!