Skip to main content

ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

எப்படியாவது வெற்றிபெறுவது என்ற இறுதிக்கட்ட வியூகத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. தினமும் இரவு 11 மணிக்கு மேல் உளவுத்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட அமைச்சர்களிடமும் தொகுதி நிலவரங்களைப் பற்றி விவாதித்தபடி இருக்கிறார். அதில் எடுக்கும் முடிவுகளின்படி பல விசயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்கிறார்கள் அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள். 

 

ops eps



இதுகுறித்து எடப்பாடியின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, "நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கும்,  இடைத் தேர்தலில் 9 தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கும் சாதகமாக இருப்பதாக கடைசிக்கட்ட தகவலை எடப்பாடிக்கு தந்துள்ளனர் உளவுத்துறையினர். நாடாளுமன்றத்தை விட இடைத்தேர்தலில்தான் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்களின் கவனம் அதிகமாக இருப்பதால் குறைந்தபட்சம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளனர். 

 

admk alliance



இடைத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம்தான் வெற்றியை தீர்மானிப்பதாக இருப்பதை மத்திய-மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட  ரிப்போர்ட் கூறுகிறது. அதன்படி, அனைத்து வியூகங்களையும் அதிகாரிகள் மூலமாகவே செயல்படுத்தியுள்ள எடப்பாடியும் அமைச்சர்களும், இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க.வினரிடமும் கூட்டணிக் கட்சிகளிடத்திலும் தாராளமயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். மேலும்,  சொந்த கட்சியில் உள்குத்து, கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தி இரண்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி. 

 

modi



இடைத்தேர்தல் தொகுதிகள் குறித்து சமீபத்தில் அமைச்சர்களிடம் ஆலோசித்த எடப்பாடி, அம்மா இறந்ததையடுத்து "அ.தி.மு.க. ஆட்சி 6 மாதத்திலே கவிழ்ந்துவிடும் என கணக்குப் போட்டனர். கவிழ்ப்பிற்கான பல முயற்சிகளை     ஸ்டாலினும் தினகரனும் எடுத்தனர். தவிர, டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியும் உங்களுக்குத் தெரியும். ஸ்டாலின் - தினகரன் முயற்சிகளை உடைத்தும், டெல்லி நெருக்கடியை சமாளித்தும் இதுவரை ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். இனி உங்கள் கைகளில் தான் இருக்கிறது. 22 தொகுதிகளுக்கு இடைத்தேர் தல்ங்கிறது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் சோதனை. இதில் சறுக்கினால் ஆட்சி கவிழ்வது உறுதி. 

நம்முடைய ஆட்சி கவிழ்ந்து தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழல் உருவானால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலை என்னவாகும் என யோசியுங்கள். மீதியுள்ள 2 வருஷமும் நம் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இந்த காலகட்டத்தில் அ.தி.மு.க.வை பலவீனப் படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்துவார்கள்.  

ஒருவேளை, தி.மு.க. தலைமையில் ஆட்சி உருவாகாமல் நம்முடைய ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால், மீண்டும் ஆட்சியை நாம் பிடிப்போமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், இதுவரை ஆட்சியை பாதுகாத்துவிட்டேன். இனி மீதியுள்ள 2 வருட ஆட்சி தொடர, எம்.எல்.ஏ.க்கள்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, இடைத்தேர்தலில் நமக்கு கணிசமான வெற்றிபோதும் என்றாலும் 22 தொகுதிகளையும் ஜெயித்தால்தான் தி.மு.க.வின் எதிர்கால அரசியலை முடக்க முடியும். 

அதனால், மீதியுள்ள 2 வருடமும் எல்லா வளத்துடனும் எம்.எல்.ஏ.க்கள் இருக்க, இந்த ஆட்சியை அவர்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதனால், இடைத்தேர்தலில் அலட்சியம் காட்டாமல் 22 தொகுதிகளையும் ஜெயிப்பதற்கு முழு முயற்சியையும் உழைப்பையும் காட்டச்சொல்லுங்கள். இனி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அவர்கள் வழியாக அனைத்து நிர்வாகிகளும் உண்மையாக உழைத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்ங்கிறதை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என பல்வேறு விவரங்களை அமைச்சர்களிடம் சொல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி. மேலும், எம்.எல்.ஏ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு எடப்பாடியே இதனை வலியுறுத்தவும் செய்திருக்கிறார்'' என விவரித்தனர். 

எடப்பாடியின் கட்டளைப்படி இடைத் தேர்தல் தொகுதிகளில் கடைசிக்கட்ட பண விநியோகமாக, ஆளுங்கட்சி ஆதரவு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000-மும், எதிர்க் கட்சிகளின் வாக்குகளை கவர்வதற்கு 3000-மும் கொடுக்கத் திட்டமிட்டு 25 சதவீத மக்களை இதுவரை வளைத்துள்ளனர். பண விநியோகத்தில் 60 சதவீதம் முடித்தாலே நிம்மதியாக இருக்கலாம் என ஆளும் கட்சி தரப்பில் தற்போது எதிரொலிக்கிறது. 

இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மோடி, கூட்டம் முடிந்ததும் எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் தேர்தல் பணிகளையும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் குறித்து 20 நிமிடம் விவாதித்திருக்கிறார். இது குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "தேர்தல் பற்றி விசாரித்த மோடியிடம், "எம்.பி. தொகுதிகளில் 22 முதல் 28 தொகுதிகள் நமது கூட்டணிக்கு கிடைக்கும். பா.ஜ.க.வின் 5 தொகுதிகளின் வெற்றிக்கு நாங்கள் பொறுப்பு' என இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சில சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட மோடி, "எனக்கு கிடைக்கிற தகவல்கள் நெகட்டிவ்வாக இருக்கிறது. அதனை பொய்யாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என அட்வைஸ் செய்து விட்டு கிளம்பினார்'' என்றனர் பா.ஜ.க. மேலிட தொடர்பாளர்கள்.