Skip to main content

மேடை பேச்சுக்கு கைது என்றால் பாஜகவில் யாரும் பேசவே முடியாது... எச்.ராஜா, எஸ்.வி.சேகர் எப்போது கைது? கொந்தளிக்கும் மக்கள்!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

தன் தமிழால் எல்லோரையும் கவரும் நெல்லை கண்ணனின் அந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

nellai kannan



சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவுசெய்யும்விதமாக பேசிய நெல்லை கண்ணன் தனக்கே உரிய வட்டார வழக்கு பேச்சுத் தொனியில், "உச்சநீதிமன்றம் அஸ்ஸாம்ல மட்டும்தான் என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நடத்தச்சொன்னது. அதை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தி திட்டமிட்டது அமித்ஷாதான். மோடி முழு முட்டாள், அமித்ஷாதான் ஆபத்தானவர். அமித்ஷாவின் சோலி முடிஞ்சா, மோடியின் கதையும் முடிந்தது. பிரதம வேட்பாளராக முதல் தேர்தலில் "கல்யாணமாகாதவர்' என குறிப்பிட்ட மோடி, அவரது மனைவி வேட்புமனுவில் மோடி எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என கேள்வியெழுப்பிய பிறகு "கல்யாணமானவர்' என மாற்றிக் குறிப்பிட்டார். மோடியும் அமித்ஷாவும் பிராடுகள். பெண்களின் சாபம் அவர்களை சும்மாவிடாது. டில்லில நிறைய பேரு முஸ்லிம் இருக்கிறீங்க. நீங்களும் அவர் சோலிய முடிப்பீங்கனு பார்க்கின்றேன். செய்யமாட்டுக்கீங்களே'' என மோடி, அமித்ஷாவுக்கு எதிராகவும், “எம்.ஜி.ஆர்., ஜெ, பேரையே சொல்லத் தகுதியற்றவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்' என எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகவும் தனக்கே உரிய பாணியில் பேசினார்.

 

politics



இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பா.ஜ.க. தரப்பில் கொந்தளிப்பை உண்டாக்கியது. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை நேர் அர்த்தம் செய்து, நகர போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தயாசங்கர் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், கண்ணன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பா.ஜ.க.வினரைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினரும் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மாநில பா.ஜ.க. உத்தரவுப்படி தமிழ்நாடெங்கும் நெல்லை கண்ணனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. டிசம்பர் 31-ஆம் தேதி பா.ஜ.க.வினர் நெல்லை கண்ணன் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.

 

politics



75 வயது நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் நெல்லை தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைபெற ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவமனை வளாகத்துக்கு முன்பாக பா.ஜ.க.வினர் திரள, போராட்டக்காரர்களால் இடையூறு நேரலாமென இரண்டு மருத்துவமனைகளில் நெல்லை கண்ணனுக்கு சிகிச்சையளிக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மதுரையை நோக்கி விரைந்தது. நெல்லை கண்ணன் மதுரைக்கு வரும்முன்பே மதுரையின் பிரபலமான மூன்று மருத்துவமனைகளின் முன்பு பா.ஜ.க.வினர் போராட ஆயத்தமாகி குழுமியிருந்தனர். எனினும் உரிய பாதுகாப்போடு மதுரை தனியார் மருத்துவமனையொன்றில் நெல்லை கண்ணன் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையில் நெல்லை கண்ணனை கைது செய்யவேண்டுமென வானதி சீனிவாசன் சென்னை சிட்டி சென்டர் அருகே பேரணி நடத்தி சாலை மறியலில் அமர்ந்தார். எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புத் தெரிவித்து கண்ணனைக் கைது செய்ய வலியுறுத்தியதுடன், சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.
 

politics



இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று பெரம்பலூர் குரு லாட்ஜில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை கைதுசெய்ய காவல்துறை ஆயத்தமானது. தகவலறிந்த பா.ஜ.க.வினர் கண்ணனைக் கைதுசெய்யவேண்டுமென கோஷமிட்டனர். அதேசமயம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் அங்கு கூடி அவரைக் கைதுசெய்யக் கூடாதென கோஷமிட்டனர். நெல்லை கண்ணனின் வழக்கறிஞர், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பெரம்பலூரிலே அரசு மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


போராட்டக்காரர்கள் சூழ்ந்திருந்த நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜின் தலைமையிலான தனிப்படையினர் லாட்ஜின் பின்வாசல் வழியாக அவரைக் கைதுசெய்து கொண்டுசென்ற னர். பா.ஜ.க.வினர் கும்பலாக சூழ்ந்துகொண்டு கோஷமிட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர்களிட மிருந்து நெல்லை கண்ணனை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல காவல்துறை மிகுந்த சிரமப்பட் டது. நெல்லை கொண்டுசெல்லப்பட்ட கண்ணன், உரிய மருத்துவப் பரிசோதனைக்குப்பின் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனவரி 2ம் தேதி மதியம் ஆஜர்படுத்தப்பட்டார்.


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வன்முறையைத் தூண்டி விடுவதாக குற்றம் சாட் டப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவிக்க, அதனை மறுத்த நெல்லை கண்ணன், "வீடியோவில் எனது பேச்சின் சில பகுதி மட்டுமே உள்ளது'' என்றார். அவர் தரப்பு வழக்கறிஞரும் அரசு வழக்கறிஞரும் வாதாடினர். தனக்கு மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதையும் பிறர் துணையின்றி செயல்பட முடியாது என்றும் நெல்லை கண்ணன் தெரிவித்தும், அவர் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் என கோர்ட் உத்தரவிட்டது. நெல்லை கண்ணனைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பிய எடப்பாடி அரசின் போலீசார், ஏற்கெனவே பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க.வினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமர் பாலம் விவகாரத்தில், உ.பி.யைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் "கருணாநிதியின் தலையைச் சீவுவேன்' என கலைஞருக்கு எதிராக பகிரங்க அறிக்கை விட்டபோது தமிழகம் கொந்தளித்தது. ஆனாலும் இந்துத்வா அமைப் பினர் தொடர்ந்து தங்கள் பேச்சுக்களால் வன்முறையை விதைத்தனர். புதுக்கோட் டையில் விநாயகர் சிலை ஊர்வலம், மேடை அமைப்பதை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது எச்.ராஜா காவல் துறையை "லஞ்சம் வாங்கும் துறை' என்று ஏளனமாகப் பேசியதோடு உயர்நீதிமன்றத்தை, "ஹைகோர்ட்டாவது, மயிராவது' என இழிவாகப் பேசினார்.

2018-ல் திரிபுராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் லெனின் சிலை இடிக்கப்பட் டது. அதைப்போல் "தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். எதிர்ப்பு எழுந்ததும் அதை தனது அனுமதியின்றி தனது அட்மின் பதிவிட்டு விட்டதாகக் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்றுக்கு பதில் அளித்த ஆளுநர், செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் தட்டிச்சென்றது சர்ச்சையானபோது, எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழியை தாக்கும் விதத்தில் பதிவிட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராடியது பற்றி பேசிய ராஜா, "ஏதோ பள்ளிக்கூட, காலேஜ் கேம்பஸ்க்குள்ள இருந்துக்கிட்டு கல்லெறியலாம் என நினைக்காத. எப்படி காம்பவுண்டுக்கு வெளியே கல் வருதோ, அதேபோல வெளியில இருந்து குண்டு உள்ளே போகும்'' என்றார். இந்தச் சந்தர்ப்பங்களில் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் அவர் கைதுசெய்யப்பட வில்லை. ஆண்டாள் விவகாரத்தில் நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாகேந்திரன், "வைரமுத்துவின் நாக்கை அறுத்துவாருங்கள். நான் உங்களுக்கு 10 லட்சம் தருகிறேன்'' என்றார்.

எஸ்.வி.சேகர், தனது பேஸ்புக் பக்கத்தில், "பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் பணி, பதவிக்காக பாலியல்ரீதியாகவும் உடன்படுகிறார்கள்' என்ற சர்ச்சை கருத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்தப் பதிவை நீக்கினார். நண்பரின் பதிவை படித்துப் பார்க்காமல் ஷேர்செய்துவிட்டதாகக் கூறிய எஸ்.வி.சேகர் மீது சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை. அவர்மீது புகார் தரப்பட்டு 50 நாட்கள் ஆனநிலையில் சென்னை படப்பையருகே அவர் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுப் போன புகைப்படம் வைரலானது.

முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், "குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க. முன்னெடுத்த கோலம் போராட்டம் பற்றி, "பெண்கள் கோலம் போட்டால் குண்டு வெடிக்கும்'' என்றார்.

நெல்லை கண்ணன் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான், "மேடைப் பேச்சுகளுக்கு கைது என்றால் பா.ஜ.க.வின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கமாட்டார்கள். தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த நெல்லை கண்ணனை கைதுசெய்திருப்பது மிகப்பெரும் அநீதி'' என கண்டனம் தெரிவித்தார்.

தொகுப்பு: -நாகேந்திரன், பரமசிவன், சுப்பிரமணியன், ராஜவேல்