தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவராக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியின் தலைவர் யாரென்று பெரும்பான்மையான தமிழக மக்களுக்கே தெரியாத நிலைதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாஜகவின் தலைவராக தமிழிசை பொறுப்பேற்று, அந்தக் கட்சியையும் அதன் சின்னத்தையும் தனது தமிழால், குரலால் பட்டி தொட்டியெங்கும் தெரியவைத்தார்.
![tamilisai](http://image.nakkheeran.in/cdn/farfuture/zy7FS5M-FuZECkVrNCTvE0P1lwysTR32Ph9FjJSWxD0/1577694312/sites/default/files/inline-images/tamilisai_14.jpg)
தோற்றம் சார்ந்து பல்வேறு அநாகரீகமான கிண்டல்களுக்கு ஆளானாலும் அசராமல் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு தினமும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். தமிழிசையை கலாய்ப்பது என்றால் சமூக வலைத்தளத்தில் இயங்குவோருக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆனால், தமிழிசையை யாரேனும் உருவத்தை வைத்து, தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தால் அவருக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுப்பதிலும் அவர்களே முன் நிற்பார்கள்.
“தாமரை மலர்ந்தே தீரும்” “கழகங்கள் இல்லா தமிழகம்” என்ற முழக்கங்களை சளைக்காமல் முழங்கியவர். பாஜகவின் தலைவராக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் இவராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு பாஜக என்றால் தமிழிசை, தமிழிசை என்றால் பாஜக என்று ஆகியிருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். அத்துடன் அவரை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்துவிட்டார்கள். உயரிய பொறுப்பு என்றாலும், அதிகம் பேசவே வாய்ப்பில்லாத பொறுப்பாகிவிட்டது. அவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாஜகவில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிவிட்டது. ஒற்றை ஆளாக அரசியல் களத்தில் பாஜகவை பரபரப்பாக பேச வைத்த தமிழிசைக்கு இணையாக நான்கு பேரை தலைவர்களாக நியமிக்க வேண்டிய நிலைக்கு பாஜக தலைமை தள்ளப்பட்டிருக்கிறது.
அதாவது, பாஜக தலைவர் என்றால் யாரை அடையாளம் காட்டுவது என்றே குழப்பமாகிவிட்டது. தமிழிசை இல்லாமல் பாஜக தவிக்கிறதோ இல்லையோ, சமூக வலைத்தளத்தினர் ரொம்பவே தவிக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.