Skip to main content

"காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றார்கள் இன்றைக்கு கால்கிலோ வெங்காயம் கூட வாங்க முடியவில்லை.." - இடும்பாவனம் கார்த்திக் பேச்சு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக்கிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

ghj



இந்திய குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவை நாம் தமிழர் கட்சி எப்படி பார்க்கிறது?

இதை தேவையில்லாத ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான சட்டமாகத்தான் இது இருக்கும். இதற்கு நாம் தமிழர் கட்சி வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இத்தகைய பிரச்சனைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதிலும் கூட தங்கள் மாநில மக்களுக்கு கிடைக்கின்ற உரிமைகள் அயலாருக்கு செல்கிறது என்ற மண்ணின் மைந்தன் கோரிக்கைத்தான் அங்கு பிரதானமாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அதனை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பிரித்து குடியுரிமை வழங்க முற்படுகிறது. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வரும் மக்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று கூறுகிறார்கள். 

இதை எதைவைத்து கணக்கிட்டார்கள். அப்படியிருந்தால் இந்தியாவிற்கு அருகில் உள்ள மியான்மரில் இருந்து அகதிகளாக வரும் ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் தமிழ் உறவுகளுக்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏன் தெளிவுபடுத்தவில்லை. இலங்கையில் இருந்து வருபவர்கள் 90 சதவீதம் இந்துக்கள்தானே? அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாமே, ஏன் அவர்களை புறக்கணித்துள்ளார்கள். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அகதிகளாக வருகிறார்கள் என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்கு எப்படி நாம் மதச்சாயம் பூச முடியும். முஸ்லிம் நாட்டில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை தருவோம், ஆனால் முஸ்லிம்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. 

அகதிகளை மக்களாக பார்க்காமல் எந்த மதம் என்று பார்ப்பது ஒரு அரசாங்கத்துக்கு உகந்த முறையா என்பதை நாம் பார்க்க வேண்டும். தான் இந்த நாட்டின் குடிமகன்தான் என்பதை நாம்தான் நிரூபிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசாங்கம் எதற்கு இருக்கிறது. 16 வகையான ஆவணங்களை கொண்டு சென்று நான் இந்தியாவில் தான் பிறந்தேன் என்று சொல்ல சொல்வதெல்லாம் எந்தமாதிரியான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதைபோலத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்தார்கள். அந்த செய்தியே பலருக்கு போய் சேரவில்லை.  சில தினங்களுக்கு முன்பு இரண்டு மூதாட்டிகள் வைத்திருத்த பல ஆயிரக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகளை தொலைக்காட்சிகளில் நாம் அனைவரும் பார்த்திருப்போம். படிப்பறிவு இல்லாத மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த நாட்டில் இருக்கும் மக்களை அவர்களே தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதா? சாலையோரத்தில் வசிப்பவர்கள் எப்படி தங்களை இந்த சட்டதின்படி நிரூபிப்பார்கள்? அதற்கு ஏதாவது வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்களா என்றால் எதுவும் இல்லை.  இப்படிதான் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றார்கள், இப்போது கால்கிலோ வெங்காயம் வாங்க முடியவில்லை. இவர்களிடம் வாய்பேச்சு மட்டுமே இருக்கிறது. செயல் என்பது சுத்தமாக இல்லை. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இலங்கையில் வாழ்வதற்கு மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அதனால்தான் தமிழர்கள் அதில் சேர்க்கப்படவில்லை என்றும் காரணம் கூறுவதை பற்றி? 

அங்கு தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா, இல்லையே.  அங்கு ராணுவத்தில் தமிழர்கள் உள்ளார்களா, ஜனாதிபதி தேர்தலில் தமிழர் போட்டியிட முடியுமா? தமிழர்கள் அங்கு அடிமையாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படுவது இல்லை. இங்கு மதம்வாதம் பேசுபவர்கள் அங்கு பிள்ளையார் கோயிலில் புத்த பிச்சுக்களின் உடல்களை வைத்து கொளுத்துகிறார்களே அது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை. புத்த மடாலங்களை தவிர ஏனைய இந்து கோயில்களை அடித்து உடைக்கிறார்களே, ஏன் அதுகுறித்து இந்தியாவில் யாரும் ஏன் பேசவில்லை. கோத்தபய பதவியேற்ற உடனே தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தபடுகிறது. இதை எல்லாம் மறைக்க முயல்கிறார்கள். நாட்டில் பொருளாதாரம் இருக்கும் இடம்தெரியாமல் உள்ளது. அதையெல்லாம் மடைமாற்றவே பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து எங்களை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு பொதுமக்களை வர வைக்கிறார்கள். அதுவே அவர்களின் தவறை மறைக்கும் வழியாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.