அந்தக் காலத்தில் பேனா நண்பர்கள் என்ற பெயரில், தாளில் எழுதி, கடிதம் அனுப்பி பெண்களிடம் ஜொள்ளுவிட்டவர்கள் அனேகம் பேர். காலம் மாறிவிட்ட நிலையில், இப்போது செல்போனில் பேசி கடலை போடுகின்றனர், சாட் செய்கின்றனர். இந்த வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., ‘Number : BT-655678 என்ற எண்ணிலிருந்து இன்று ரொமான்டிக்காக பேசும் மூடில் உள்ளேன் கால் @ 556786634’ என, எண்களை வெளியிடுகிறது. சில வலைத்தளங்களோ, அறிமுகமே இல்லாத ஆணுக்கும், பெண்ணுக்கும் ‘லிங்க்’ ஏற்படுத்தித்தருவதாக தூண்டில் போடுகின்றன.
தற்போதைய வரவாக, அழகான பெண்களின் வாட்ஸ்-ஆப் நம்பர் எடுப்பது எப்படி? தமிழ் பேசும் பெண்களுடன் நண்பராகுங்கள்! இதற்கான ஆப்-ஐ இப்போதே நிறுவுக! என, ஜொள்ளர்களுக்கு வலை வீசுகின்றன க்ளிப்-இந்தியா, க்வாக் க்வாக் போன்ற நிறுவனங்கள்.
வேறு சிந்தனைக்கே இடம் தராமல், எந்நேரமும் போனிலேயே பொழுதைக் கழிப்பவர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களின் எண்ணிக்கையை மேலும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கின்றன.
குடும்பம், வாழ்க்கை, தொழில், வேலை, எதிர்காலம் குறித்த திட்டமிடுதல் என எதிலும் மனதைச் செலுத்தாமல், விபரீதத்துக்கு வழிவகுக்கும் கூடா நட்புக்காக, நேரத்தை விரயம் செய்வதில், இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்காலிக சந்தோஷத்துக்காக, யார் யாரோ விரிக்கும் சதிவலையில் மாட்டிக்கொள்கின்றனர்.