தேர்தல் முடிவுகள் முன்னே பின்னே இருந்தாலும் மத்தியில் ஆட்சியமைத்து விட முடியும் என கணக்குப் போடும் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற கவலைதான் அதிகமாக உள்ளது என்கின்றன மத்திய உளவுத்துறை வட்டாரங்கள். அதே கவலை பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் எதிரொலித் துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஜெ.வின் உதவியாளராக இருந்து சசிகலாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவராக இருக்கும் பூங்குன்றன் சமீபத்தில் சசிகலாவை சந்தித்தார். அதற்கு முன் அவர் தமிழக முதல்வர் எடப்பாடியையும் சில முக்கிய அமைச்சர்களையும் சந்தித்தார். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளை சசிகலாவிடம் தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழல் விரைவாக மாறி வருகிறது. இதுவரை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டது இல்லை. முதன்முறையாக தமிழக சபாநாயகர், தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.எல். ஏ.க்களுக்கு கொடுத்த நோட்டீஸில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்மூலம் ஓ.பி.எஸ். உட்பட பதினோரு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்திலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்து அந்த பதினோரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரும். அ.தி.மு.க. பிளவு பட்டு நின்றால் தி.மு.க. வெற்றி பெறுவதை தவிர்க்க முடியாது. எனவே அ.தி.மு.க. மறுபடியும் இணைய வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் ஓரம் கட்டப்பட வேண்டும். சசிகலா மறுபடியும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தலைமை ஏற்க வேண்டும். முதல்வராக சசிகலா யாரை விரும்புகிறாரோ அவரை கொண்டு வரலாம்'' என பூங்குன்றனிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதை சசிகலாவிடம் அவர் தெரிவித்தபோது, "தினகரன் மீது எனக்கு எப்பொழுதும் பாசம் உண்டு. அவரது மனைவி அனுராதா எனது சகோதரர் சுந்தரவதனத்தின் மகள்தான். ஆனால் அனுராதா ஆட்டம் அ.ம.மு.க.வில் அதிகமாகிவிட்டது. அதனால்தான் அவர்களே நிர்வகிக்கட்டும் என அ.ம.மு.க.வை ஒரு தனி அரசியல் கட்சியாக, தினகரனை தலைவராக போட்டு கட்சி ஆரம்பிக்க நான் கடிதம் கொடுத்தேன். நான் எப்போதும் அக்கா கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த அ.தி.மு.க. பக்கம்தான். நான் எடப்பாடியை முதல்வர் ஆக்கினேன். அவருக்கு பதில் செங்கோட்டையனை முதல்வராக்கியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது'' என சசிகலா சொல்லியிருக்கிறார். அவரிடம், அ.தி.மு.க. அணிகள் இணைவதை பா.ஜ.க. ஆதரிக்கிறது என கூடுதல் தகவலையும் சொல்லியிருக்கிறார் பூங்குன்றன். "நல்லது நடக்கட்டும் பார்க்கலாம். நான் இரட்டை இலையின் பக்கமே' என எடப்பாடிக்கு பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா. இதையொட்டி இப்போது அதற்கான மூவ் நடக்கிறது. இது ஓ.பி.எஸ். தரப்பை அதிர வைத்துள்ளது. "ஜெ. மறைவுக்கு பிறகு தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த்தது மாபெரும் தவறு'' என ஓ.பி.எஸ். வெடித்திருக்கிறார். அத்துடன், "எனக்கெதிராக எடப்பாடி செயல்படுகிறார். அவர் சசிகலாவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் வாரணாசியில் மோடியை சந்தித்து பேசிய விஷயங்களை திரித்து மீடியாக்களில் மாநில உளவுத்துறை மூலம் எடப்பாடி பரப்பினார்'' என டெல்லி பா.ஜ.க. தலைமையில் புகார் கடிதம் வாசித்திருக்கிறாராம் ஓ.பி.எஸ்.
அதே நேரத்தில், தினகரனின் அ.ம.மு.க. இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும். இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் ஜெயிக்கும் அந்த வெற்றியின் அடிப்படையில் பன்னீருக்கு கல்தா கொடுத்துவிட்டு அவரது இடத்தில் தினகரனை துணை முதல்வராக நியமிப்பார்கள் என டெல்லிக்கு கிடைத்துள்ள ரிப்போர்ட்டின்படி, "எடப்பாடி ஆட்சி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தொடரும். சசிகலா மீண்டும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
"எடப்பாடி முதல்வராக தொடர்வதை தினகரன் ஏற்றுக் கொள்வாரா?' என அவரது குடும்ப வட்டாரங்களில் கேட்டோம். "சசிகலா சொன்னால் தினகரன் எதையும் செய்வார். அதனால்தான் தினகரன், திவாகரன், விவேக் என அனைவரும் ஒருவித மவுனத்தையே இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்கிறார்கள். மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அளித்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் தினகரனை கேட்காமல்தான் சென்றார்கள். சபாநாயகர் உத்தரவுக்கு தடை என இடைக்கால தீர்ப்பு வந்ததும் தினகரனின் பேச்சைக் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகாமல் இருந்த பிரபு எம்.எல்.ஏ. தினகரன் சொன்ன பிறகு ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். தினகரனின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் அசைவுகள் காட்டுகிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.