சேலத்தில் உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சரியாக திட்டமிடாததால் மாவட்ட ஆட்சியருக்காக மணிக்கணக்கில் காத்திருந்ததில் மாணவிகள் பலர் மயங்கி விழுந்தனர். நூறு நாள் வேலைத்திட்ட பெண்கள், மூதாட்டிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து அவர்களை பட்டினியால் தவிக்க விட்ட அலங்கோலங்களும் அரங்கேறின.
ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி, உலக கை கழுவும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் சோனா பொறியியல் கல்லூரி திடலில் ஒரே இடத்தில் அதிகமானோர் கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி, அக்டோபர் 15, 2018 காலை 9.30 மணிக்கு நடைபெறும் என மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் என்ன நினைத்தார்களோ, காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றனர். அந்த நேரத்தையும் மாற்றி, பகல் 12 மணிக்குமேல் ஆட்சியர் கலந்து கொள்வார் என்று அறிவித்தனர்.
ஆரம்பமே தாறுமாறு தக்காளி சோறாகிப் போன நிலையில், ஒட்டுமொத்த நிகழ்ச்சியுமே பல்வேறு கோமாளித்தனங்களுடன் நடந்து முடிந்ததுதான் உச்சக்கட்ட ஹைலைட்.
இந்த நிகழ்ச்சிக்காக சேலம் மாநகரில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகளை அழைத்து வந்திருந்தனர். போதாக்குறைக்கு, ஆட்சியரிடம் நல்லபேர் வாங்க வேண்டும் என்ற முனைப்பில், ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தலா 100 பேரை இந்த நிகழ்ச்சிக்காக கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தனர்.
இவர்களில் பலர் தள்ளாத வயதிலுள்ள மூதாட்டிகளும் அடங்குவர். கிட்டத்தட்ட அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வாகனங்களில் ஆள்களை திரட்டி வரும் வேலையைத்தான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்து இருந்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள், நூறு நாள் வேலைத்திட்ட பெண்கள் என எல்லோரும் காலை 8.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் திடலுக்கு வந்துவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைகளில் இருக்கை எண் குறிப்பிடப்பட்ட நீல நிற பட்டை ஒட்டப்பட்டது. ஆமாம்... சிறைக்கைதிகளுக்கு தனியாக எண் வழங்கப்படுமே அதேபோலதான். கைமணிக்கட்டு பகுதியில் சுற்றப்பட்ட அந்த பட்டையை கேமராவில் காட்டி பதிவு செய்த பிறகு, அதில் குறிப்பிட்டிருக்கும் எண்ணுள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
இதெல்லாம் கச்சிதமாக முடிந்த நிலையில், அடுத்து ஆட்சியர் வர வேண்டியதுதான் பாக்கி. என்ன காரணத்தாலோ அவரால் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. பல மணி நேரம் தாமதம் ஆனதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கழுவிய கைகளையே திரும்ப திரும்ப கழுவி எல்லோரையும் வெறுப்பேற்றினர்.
நூறு நாள் வேலைத்திட்ட பெண்கள் காலையில் சாப்பிடாமல் கொள்ளாமல் வந்ததால் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. 5 மாணவிகள் பசியால் மயக்கம் அடைந்தனர். ஒரு மாணவி, திடீரென்று வாந்தி எடுத்தார். ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, மயக்கம் அடைந்த மாணவிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவழியாக, மதியம் 2 மணியளவில் ஆட்சியர் ரோகிணி நிகழ்ச்சி நடைபெறும் திடலுக்கு வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவரும் கிளம்பிச்சென்றார்.
நூறு நாள் வேலைத்திட்ட பெண்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம்.
வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ராதா, தீபா, பழனியம்மாள் ஆகியோர் கூறுகையில், ''ஏதோ கைகழுவுற தினம்னு சொன்னாங்க. அதுல கலெக்டரம்மா கலந்துக்கிறதால நீங்கள்லாம் வந்தே ஆகணும்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தாங்க. இன்னும் எங்க பகுதியில இந்த வருஷத்துல ஒரு நாள் கூட நூறுநாள் வேலைத்திட்டத்துல வேலை கொடுக்கல. இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டாதான் நூறு நாள் திட்டத்துல வேலை கிடைக்கும்ணும் சொன்னாங்க.
காலையிலேயே சீக்கிரமாக இந்த இடத்துக்கு வந்துட்டதால நாங்க யாருமே சாப்பிடல. மதியம் தக்காளி, தயிர் சோறு பொட்டலம் கட்டிக் கொடுத்தாங்க. அதைத்தான் சாப்பிட்டோம். நாங்க கடைசில உட்கார்ந்து இருந்ததால டாக்டருங்க என்ன பேசினாங்கனே தெரியல. எங்களை எல்லாம் கையையும் கழுவச் சொல்லல,'' என்றவர்கள், ''ஆமா.... இந்த நிகழ்ச்சிக்கு வந்துட்டோமே இனிமேலாவது எங்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்துல வேலை கொடுத்துடுவாங்கள்ல...,'' என வெள்ளந்தியாய்க் கேட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொட்டல உணவுடன், குடிநீர் பாட்டில், டி&ஷர்ட், தொப்பி ஆகியவையும் வழங்கப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் பொருள்களுக்கு சேலம் மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனாலும், பொட்டல உணவுப்பொருள்கள் உள்ளிட்ட இத்யாதிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில்தான் அடைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. காலியான குடிநீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள் அந்த திடல் முழுவதுமே விரவிக்கிடந்தன.
பிளாஸ்டிக் தடை குறித்து பரப்புரை செய்த ஆட்சியர் ரோகிணி, பொது நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நீக்கமற பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எந்த ஆட்சேபனையும் சொல்லாதது ஏனென்று தெரியவில்லை.
கைகழுவும் நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள், மாணவர்கள் பலரும் 'பசி வந்தால் பத்து பறந்து போகும்' என்ற கணக்காக, கைகளைக்கூட கழுவாமலேயே மதிய உணவை சாப்பிட்டு முடித்ததுதான் இந்த நிகழ்ச்சியின் ஆகப்பெரிய நகைமுரண். கைகளைக் கழுவும்போது என்னென்ன விதிகளை எல்லாம் பின்பற்ற வேண்டுமோ அவை எதுவுமோ அவர்கள் பின்பற்றவில்லை.
காமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், ''ஒவ்வொரு பஞ்சாயத்தில் இருந்தும் நூறு நூறு பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தனர். எங்கள் பகுதியில் இந்த ஆண்டில் நாங்கள் நூறு நாள் திட்டத்தில் 50 நாள்கள் ஏரி சீரமைப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல் பணிகளை செய்திருக்கிறோம். சில பகுதிகளில்தான் நூறு நாள் திட்டம் செயல்படாமல் இருக்கு.
இந்த நிகழ்ச்சியில் வந்தவர்களுக்கு வேலைக்கு போனால் என்ன கூலி கிடைக்குமோ அதைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லித்தான் கூட்டிக்கிட்டு வந்தார்கள். கைகழுவறத பத்தி டாக்டர்கள் இங்கிலீஷ்லயே பேசினதால எங்களுக்குதான் ஒண்ணுமே புரியல. அங்கே திரையில ஓடின பொம்மையை பாத்துதான் ஏதோ கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டோம்.
காலையிலேயே சீக்கிரமாக இங்கு வந்துவிட்டதால் நாங்கள் எல்லோருமே இன்னிக்கு காலையில் பட்டினிதான். சாப்பிடறதுக்கு டீ, பிஸ்கட்டாவது கொடுத்திருக்கலாம். மதியம் உணவுப் பொட்டலம் கொடுத்தார்கள். அதுவும் முறையாக விநியோகம் செய்யாததால, பல பேருக்கு சரியாக கிடைக்கல. கூட்டத்துல முண்டியடித்துப் போய் வாங்க முடியாததால வயசான பல பெண்கள் பட்டினியாவே வீட்டுக்குக் போய்ட்டாங்க,'' என்றனர்.
அவர்கள் நம்மிடம் பேசியதைப் பார்த்த களப்பணியாளர்கள் சிலர், அவர்களை அங்கிருந்து கிளப்பி விடுவதிலேயே குறியாக இருந்தனர். பின்னர் அவர்களை சரக்கு வாகனங்களை கால்நடைகளை ஏற்றிச் செல்வதுபோல் ஏற்றிக்கொண்டு சென்றனர். சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று நாம்தான் உத்தரவும் போடுகிறோம். நம் வசதிக்காக நாமே அதை முறியடிக்கவும் செய்கிறோம்.
நூறுநாள் வேலைத்திட்டப் பெண்களை அழைத்து வந்தது குறித்து ஆட்சியர் ரோகிணியிடம் கேட்டபோது, ''இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை. குறிப்பாக நூறு நாள் வேலைத்திட்ட பெண்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.