Skip to main content

மாற்றுத்திறனாளி மகளுக்காக ரூ.300 கோடியில் தீம் பார்க்!

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
மாற்றுத்திறனாளி மகளுக்காக ரூ.300 கோடியில் தீம் பார்க்!



எனது மகளுடன் ஒருமுறை நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தேன். குளித்து முடித்து கரைக்கு வந்தபோது எனது மகள் பக்கத்தில் நீச்சலடித்து விளையாடிய குழந்தைகளிடம் போனாள். 

ஆனால், அவர்கள் அவளுடன் பேசத் தயங்கி விலகிப் போனார்கள். அது என் இதயத்தைக் கசக்கியது. 

அந்தக் குழந்தைகள் மீது தவறில்லை. அவர்களுக்கு எனது மகளைக் கையாளத் தெரியவில்லை. 

அவள் மனவளர்ச்சி குன்றியவள். அவள் வளர வளர அவள் சுதந்திரமாக விளையாட ஒரு இடம் வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னை வாட்டிக் கொண்டே இருந்தது என்கிறார் கோர்டன் ஹர்ட்மேன்.

எனது மகள் மோர்கனின் உதடுகளில் எப்போதும் புன்சிரிப்பு தங்கியிருக்கும். அவள் விரும்புவது ஆதரவான ஒரு அணைப்பு. ஆனால், அவளை நாங்கள் பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் இருந்தோம்.

அவளைப் போன்ற குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்கிறார் கோர்டன்.

தங்கள் மகளைப் போலவே மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரிடம் மோர்கனின் தாய் மேகி பேசிப்பார்த்தார்.

"உங்கள் குழந்தைகளை எங்கே அழைத்துச் செல்ல விரும்புவீர்கள்?" என்று கேட்டார்.

"அவளுடன் இயல்பாக பழகக்கூடிய ஆட்கள் இருக்கும் இடத்துக்கு" என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

அப்படி ஒரு இடம் எங்குமே இல்லை என்பதை கோர்டன் உணர்ந்தார்.

அப்படி ஒரு இடத்தை தனது மகளுக்காக, தனது மகளைப் போன்றோருக்காக கட்ட விரும்பினார்.

2007ம் ஆண்டு அப்படி ஒரு பொழுதுபோக்கு இடத்தை கட்டும் முயற்சியைத் தொடங்கினார்.

லாப நோக்கம் இல்லாத ஒரு தீம் பார்க்கை வடிவமைக்க விரும்பினார். இதற்காக மருத்துவர்கள், பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிந்திப்பவர்கள் என பல தரப்பட்டவர்களையும் அழைத்து ஆலோசித்தார்.



பின்னர் டெக்ஸாஸ் நகரில் 25 ஏக்கர் பரப்பில் ஒரு தீம் பார்க்கை கட்டத் தொடங்கினார்.

2010 ஆம் ஆண்டு இந்த தீம் பார்க் திறக்கப்பட்டது. 

அப்போதிருந்து இன்றுவரை 67 நாடுகளில் இருந்தும் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள்.

ஏதேனும் ஒரு உடல் குறைபாடு இந்தாலும் அவர்களுக்கு அனுமதி இலவசம்.

இழப்பு அதிகமாக இருந்தாலும், குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்பதால் நஷ்டத்தை தாங்குகிறோம் என்கிறார் கோர்டன்.

இந்த பார்க் தனது மகள் மோர்கனை சந்தோஷப்படுத்துகிறது. இங்கு வரும் அவளைப்போன்ற ஏராளமான குழந்தைகள் கலகலப்பாக பழகுவது மனதுக்கு இதமாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் அவர்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்