அதிமுக - பாஜக இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நிலவி வருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்பட்டு வருவதாக கூறி பாஜகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு வினைக்கும், கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என அதிமுகவை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர்களின் உருவப் படங்களை எரித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பாஜகவிற்கு அதிமுகவிற்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக தெரிவித்தது. மேலும் அதிமுக தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் யாரும் பாஜகவையே, அண்ணாமலையையோ விமர்சிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து வருகின்றனர். பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்கள் இல்லையென்றால் அதிமுக அழிந்திருக்கும், எடப்பாடி உருவ பொம்மையைக் கொளுத்துவோம் என நேற்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பாஜக நிர்வாகி ஒருவர், “தமிழகத்தைப் பொறுத்த வரையில் பாஜகதான் எதிர்க்கட்சி என்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டு வருகிறோம். அதிமுக எதிர்க்கட்சி இல்லை நாம்தான் எதிர்க்கட்சி; திறனற்ற, ஆளுமையில்லாதவர் எடப்பாடி என்று கூற உடனே கரு.நாகராஜன் அந்த நிர்வாகி பேசிக்கொண்டிருந்த போதே மைக்கைப் பிடிங்கி பேச்சை நிறுத்தினார். பாஜகவை விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி கூறியிருக்கும் நிலையில், பாஜகவினர் மட்டும் தொடர்ந்து அதிமுகவையும், எடப்பாடியையும் விமர்சித்து வருவதைப் பார்த்து அதிமுக தொண்டர்கள் கலகத்தில் இருக்கிறார்களாம்.