நீட் தேர்வு, ஆளுநர் நடத்திய ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் மாணவரின் தந்தை கேட்ட கேள்விக்கு ஆளுநர் அளித்த பதில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறித்து நம்மிடம் வழக்கறிஞர் பாலு பேசினார். அவர் கொடுத்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவை;
ஆளுநர் மாளிகையில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நிறைய வந்துகொண்டு இருக்கிறது. ஆர்.என். ரவி வந்த பிறகு அரசியல் சூழலில் இதனை எப்படி அணுகுகிறீர்கள்?
கிராமங்களில் சிலரை உயர்த்தி சொல்ல வேண்டுமென்றால், “ஆமாம் இவரு பெரிய கலெக்டரு.. பெரிய கவர்னரு...” என்று மதிக்கக்கூடிய பதவியாக இருந்தது. ஆனால், ஆர்.என். ரவி கவர்னராக பதவியேற்ற பின்பு, ஆளுநர் என்ற அழகான தமிழ் வார்த்தை அவமானப்படுத்தப்பட்டது. கவர்னர் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் பிரிவினையை உருவாக்க மற்றும் மாண்புகளையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகத் தனது வன்மத்தை சாதிய என்னத்தை காட்டுவதற்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழர்கள் கொள்கையில் உறுதியானவர்கள்.
ஏற்கனவே, ஆளுநர் உச்சநீதி மன்றத்தில், ரம்மி உள்ளிட்ட இரண்டு மசோதவிற்காக குட்டு வாங்கியவர். தற்போது தற்கொலைகள் அவ்வப்போது நடந்து வரும் சூழலில் அதற்கான ஆலோசனைகள் கவர்னர் வழங்கியிருக்க வேண்டும். இதனைக் கையாளும் முறையை அரசியல் லாவகம் என சொல்வார்கள். ஆனால் ஆளுநர் தமிழ்நாட்டின் தற்கொலைப் படைத் தலைவனாக உருமாறியுள்ளார் எனத் தோன்றுகிறது. ஐம்பது பேர் வரை ரம்மி என்கிற ஆன்லைன விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டே பிறகே ஆளுநர் மசோதாவில் கையெழுத்திடுகிறார். நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவனை தொடர்ந்து தந்தையும் மாய்ந்தார். அதற்கு முன்தினம் ஆளுநர் பேசுகையில், "நீட் தேர்வென்பது எளிதில் தேர்ச்சி பெறலாம், அரசுப் பள்ளி மாணவர்கள் கூட தேர்ச்சி அடையலாம். நீட் தேர்விற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்" என்றும் கூறியிருக்கிறார்.
நீட் குறித்தான பிரச்சனை ஆளுநர் மாளிகையில் நடந்த பாராட்டு விழாவில் இருந்து தொடங்குகிறது. ஆளுநர் நேர்மையானவராக இருந்திருந்தால், விழாவில் அமர்ந்திருந்தவர்களில் எத்தனை மாணவர்கள் பயிற்சி மையம் சென்றவர்கள். எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் எனத் தெரிவித்திருக்கலாமே.
இந்த நிகழ்ச்சியில் தான் சேலத்தில் இருந்து வந்த தேர்ச்சி பெற்ற மாணவனின் தந்தை கேள்வி எழுப்பினார். தனது மகன் தேர்வாகியுள்ளான் என்றாலும் கூட வரவிருக்கும் மாணவர்களுக்காக அவர் குரல் கொடுத்ததை, ஒரு உண்மையான தந்தையை கண்டேன். கவர்னரை சந்தித்ததை பெருமையாக சமூகவலைத்தளங்களில் பதிவிடும் பெற்றோர்கள் மத்தியில், அவர் ‘என் பிள்ளை வர முடிந்த மாதிரி பிற மாணவர்கள் வர முடியவில்லை’ என்ற ஏக்கத்தில் குரல் கொடுத்துள்ளார். அவரது கருத்துகள் கவர்னரை நிலைகுலைய வைத்துள்ளது. அதனை விட இந்த கேள்விகள் எதிர்வினைகளையும் ஆற்றியுள்ளது.
ஆளுநர் பதவியும், அந்த நாற்காலியும் அவ்வளவு மதிப்பும் கம்பீரமும் கொண்டது. ஆனால் ஆளுநர் ரவி, எம்.எல்.எம் முதலாளி போன்று, விற்பன்னராகவும், மோடி மஸ்தான் வித்தை காட்டுபவராகவும் நடந்து கொள்கிறார். அந்த விழாவில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான்தான் இறுதியாக கையெழுத்து இட வேண்டும் ஆனால் நான் செய்ய மாட்டேன்” எனக் கூறுவதே அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஆளுநர் அந்த நிகழ்ச்சிக்கு ‘எண்ணித் துணிக’ எனத் தலைப்பு வைத்துள்ளார். அதேபோல், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மருத்துவத்திற்காக மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டை மருத்துவத்தின் புனிதத் தளம் என்று அழைப்பர். ஆங்கிலேயப் பெண்மணி வேலூரில் கட்டிய சி.எம்.சி. மருத்துவமனை, கண் மருத்துவத்திற்கு புகழ்பெற்ற சங்கரநேத்ராலயா, அரவிந்த் கண் மருத்துவமனை, அகர்வால், அப்போலோ, எம்.ஜி.எம். போன்ற தரம் வாய்ந்த மருத்துவமனைகள் இருக்கிறது. உலக நாடுகளில் குறிப்பாக கீழ் திசை, ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். வட இந்தியாவில் சிறப்பு மருத்துவமனை என்பதே இருக்காது. தமிழ்நாட்டில் தான் மருத்துவர்கள் விகிதாச்சாரம் கூட அதிகமாக இருக்கும்.
நீட் தேர்வில் அதிகம் வட மாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், இவர்களுக்கு வியாதிகளின் எழுத்துகளை பிழையில்லாமல் எழுதுவது சிரமம். தாழ்த்தி கூறவில்லை உண்மையில் தரம் என்பது அங்கு இப்படியாக உள்ளது. அங்குள்ள நிறைய மருத்துவமனைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் தவறாகவே பதியப்பட்டிருக்கும். இந்தியில் நாங்கள் சரியாக எழுதுகிறோம் என்று சொல்கிறவர்கள் இங்கு நம்மிடம் ஆங்கிலத்தில் தானே உரையாடுகிறார்கள். ஆர்.என்.ரவி உட்பட ஏராளமானோர் கிருத்துவ நிலையங்களிலும், நிறுவனங்களிலும் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எந்த இடத்திலாவது ஆர்.என். ரவி ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசுகிறார்களா?
சமீபத்தில் தமிழில் பேசினாரே?
அதெல்லாம் வெறும் வணக்கம் போன்ற வார்த்தைகளை ஆரம்பத்தில் மட்டும் உபயோகிப்பார்.எண்ணித் துணிக என்று தலைப்பு வைத்துள்ளார் அதனை முழுவதுமாக வைத்திருக்கலாம். ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்பது திருக்குறள். இதில் கருமம் என்பதற்கு இரண்டு மூன்று பொருள்கள் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டு மக்களுக்கு கருமம் என்றால் என்னவென்பதைக் காட்டிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். மா.சுப்பிரமணியன், “ஆளுநர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதை விட வேறு வழியில்லை. அரசமைப்புச் சட்டம் இதனைத் தான் சொல்கிறது” என சரியாக தெரிவித்துள்ளார்.
அவரின் (ஆளுநர் ஆர்.என்.ரவி) ஆளுமை மற்றும் திறமையை பார்க்கும்போது, இவர் மணிப்பூர் மாநிலத்திற்கு ஆளுநராக போடலாம். காரணம், இவரைப் போன்று கடுமையான, எடுத்த முடிவில் பின் வாங்காமல் இருப்பவர், அரசு செலவில் அனைவருக்கும் டீ வாங்கிக் கொடுத்துக்கொண்டு, தெனாவட்டாக பேசிக்கொண்டு இருப்பவர் அங்குச் சென்றால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மோடி, அமித்ஷாவுடன் மூன்றாவது எஞ்சினாக செயல்படலாம்.
ஆளுநர் ரவி தனது அதிகார வரம்புகளுக்கு வெளியே செயல்பட்டு மாநிலத்தின் அமைதியைக் குலைப்பதற்காக இயங்குவது போல் உள்ளது. வட மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கி வருகிறார்கள். இங்கு அதிகளவு மாணவர்கள் வெளிநாடுகளில் சென்றும் மருத்துவராக உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் இதன் விகிதாச்சாரம் மிகவும் குறைவு.
முழு பேட்டி வீடியோ: