Skip to main content

முதல்வர் இ.பி.எஸ்.க்கு யோகம்..! இப்போது எடப்பாடியார் நகர்..! அடுத்து எடப்பாடி பெயரில் பேரவை!!!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
Edappadi nagar - perundurai - Thoppu VENKATACHALAM mla aiadmk -

 

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சொல்லலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் உள்ள வரை வாய்பேசாத அமைச்சரவை கூட்டத்தில் இவரும் ஒருவர் அவ்வளவுதான். "ஜெ" இறப்புக்கு பிறகு அதிர்ஷ்டம் போல் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டார். அந்த நாற்காலிக்கு எந்த ஆபத்தும் வராமல் மூன்றாண்டுகளாக சாதித்தும் வருகிறார் எடப்பாடி.

 

ஆட்சியில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் தனது தனிப்பட்ட பவரை அதிகரித்து வருவதால்தான் அவரது கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தென் மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளை தனது விசுவாசிகளாகவும் மாற்றம் பெற வைத்து வருகிறார். ஆரம்பத்தில் போட்டியாளராக இருந்த ஓ.பி.எஸ். அணியையும் பெரும்பாலும் தனக்கு சாதகமாக்கி ஓ.பி.எஸ்.ஐ டம்மி லெவலுக்கு கொண்டு போய்விட்டார் இ.பி.எஸ். என ர.ர.க்கள் பேசுமளவுக்கு வந்து விட்டது. ர.ர.க்களும் புது புது பட்டங்களை எடப்பாடிக்கு வழங்கி வருகிறார்கள். 

 

அந்த வரிசையில் பெரியார் நகர், காமராஜர் நகர், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஜெயலலிதா பெயரில் "ஜெ. ஜெ" நகர் வைத்ததை பார்த்துள்ளோம். இப்போது இ.பி.எஸ். பெயரிலும் எடப்பாடியார் நகர் என்ற பெயரும் வைக்கப்பட்டு தலைவர்கள் வரிசையில் இணைக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ். ஆச்சரியம்தான் ஆனால் உண்மை. இப்படி பெயர் வைத்ததும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான்.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம், கட்சிக்குள் உள்ளடி வேலை செய்து இவரது அமைச்சர் பதவியை, பவானி K.C. கருப்பனன் பெற்றார் என்பது தனி கதை. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அ.தி.மு.க.வில் கட்சி விசுவாசியாக தொடர்ந்து செயல்படுகிறார் தோப்பு வெங்கடாஜலம்.

 

அப்படிப்பட்ட தோப்புவின் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை பேருராட்சியில் 10வது வாட்டில் பெருந்துறை ரயில் நிலைய சாலையில் புதிதாக அமைந்துள்ளது ஒரு குடியிருப்பு பகுதி. அதற்குத்தான் "எடப்பாடியார் நகர்" என்று பெயர் சூட்டி அந்த பெயர் பலகையையும் திறப்பு விழா செய்துள்ளார் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம். 

 

இது பற்றி தோப்பு நம்மிடம், "பெருந்துறை தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர். அதேபோல் சுகாதாரமான குடிநீர் வேண்டும் என்று கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மறைந்த முதல்வர் அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன், அவரும் செயல்படுத்துவதாக அறிவித்தார். அவர் இறப்புக்கு பிறகு இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல தடைகள் வந்தது, அவற்றை முறியடித்து குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார் முதல்வர். அந்த குடிநீர்தான் இந்த பகுதிக்கும் வருகிறது. தொகுதியில் உள்ள இரண்டு லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கொடுக்க காரணம் முதல்வர் இ.பி.எஸ் தானே, அதற்கு நன்றி பாராட்டும் விதமாகத்தான் இந்த பகுதியை எடப்பாடியார் நகர் என்று பெயரிட்டோம்" என்றார்.

 

இப்படியே போனால் எங்க கொங்கு மண்ணை சேர்ந்த எடப்பாடியார் பெயரில் விரைவில் பேரவை உருவானாலும் ஆச்சரியப்படாதீங்க... என உற்சாகமாக கூறுகிறார்கள் கொங்கு ர.ர.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.