1948, ஜனவரி 30, மாலை பிரார்த்தனை முடிந்து பெரும் பரபரப்புகள் இன்றி பிர்லா இல்லத்திலிருந்து கலைந்து செல்கிறது மக்கள் கூட்டம். அப்பொழுது துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடிக்கும் சத்தம், அது அந்த பகுதியை மட்டுமின்றி இந்த நாட்டையே பரபரப்பாக்குகிறது. அப்படி அந்த 3 குண்டுகளால் துளைக்கப்பட்டு சரிந்தது காந்தியடிகள், சரித்தது 'மூக்குத்தி'ராம் கோட்ஸே.
அது என்ன 'மூக்குத்தி' ராம் என நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் அறிய நாம் 1910 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டும். அப்பொழுதுதான் புனேவில் அவர் பிறந்த காலம். கோட்ஸேவிற்கு முன் அவரது பெற்றோருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இறந்துவிட்டன, பிறகு பிறந்த கோட்ஸேவிற்கு, அவர் சாகாமல் இருக்க கடவுளுக்கு வேண்டிக்கொண்டு, மூக்குத்தி அணிவித்து பெண் குழந்தை போல வளர்த்தனர். மராத்தியில் மூக்குத்திக்கு 'நாது' என பெயர். அதுவே அடைமொழியாக மாறி, ராமச்சந்திர கோட்ஸே எனும் பெயர் நாதுராம் கோட்ஸேவாக மருவியது.
காந்தியை கொன்றதற்காக தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இவனுக்கு, அந்த தண்டனையை வழங்க கூடாது என்று மேல்முறையீடும் செய்யப்பட்டது. ஆனால் அப்படி செய்தது அவர் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அல்ல. இவரால் சுட்டு கொல்லப்பட்ட காந்தியின் மகன்கள். ஆம், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி, அவரால் சுட்டு கொல்லப்பட்ட காந்திஜியின் மகன்களால் ஓரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1948 ஜனவரி 30 கோட்ஸேவால் காந்தி கொல்லப்பட்டது தான் நமக்கு தெரியும். ஆனால் அதற்கு 10 நாட்கள் முன்னரே அவரை கொல்ல தீட்டப்பட்ட திட்டம் தோல்வியடைந்தது. ஜனவரி 20 ஆம் தேதி அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கு போது கோட்ஸேவும், அவரது நண்பர்கள் ஆறு பேரும் காந்தியை கொல்ல திட்டமிட்டனர். திட்டமிட்டபடி எல்லாரும் மேடைக்கருகில் செல்ல, வெடிகுண்டை வெடிக்க வைக்கவேண்டிய மதன் லால் மட்டும் காவலரிடம் மாட்டிக்கொண்டான்.
எனவே அவனை விட்டுவிட்டு மற்ற அனைவரும் தப்பிக்கின்றனர். விசாரணைக்கு பிறகு அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
பிறகு இது மாதிரியான திட்டங்கள் சரிவராது என நினைத்து, சரியாக பத்து நாட்கள் கழித்து ஜனவரி 30 ல் கோட்ஸே தனியாக சென்று காந்தியை சுட்டுக் கொல்கிறார். உடனே அங்கிருந்த காவலர்களால் பிடிக்கப்படுகிறார் கோட்ஸே. பின்னர், அன்றைய பஞ்சாப் மாநிலத்தின் சிம்லா நீதிமன்றத்தில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
இப்படியொரு தண்டனை அளிப்பதை, அகிம்சையை போதித்த காந்தியே விரும்பமாட்டார் என கூறி தண்டனையை குறைக்க காந்தியின் மகன்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 15, 1949 ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டான் கோட்ஸே.