முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "எங்க அப்பா இறந்த போது எனக்கு 29 வயது. அப்போது சினிமா துறையில் தீவிரமாக இருந்து வந்தேன். 30 வயதில் பாஜகவுக்கு வந்தேன். எங்க அப்பா ஜெயலலிதாவுடன், கலைஞருடன் பயணம் செய்திருக்கிறார்கள். என்னுடைய அப்பா பாஜகவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். என்னுடைய அம்மா பாஜக உறுப்பினராகவும், மகளிர் அணி பொறுப்பிலும் இருந்துள்ளார்கள். மோடியைப் பார்த்து தான் பாஜகவில் இணைந்தேன். அரசியலில் 30 வயது என்பது இளமையான வயது என்பேன். 35 வயதில் இருந்து பாஜகவுக்கு நிறைய பணிகள் செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் சினிமா துறையை மறக்க ஆரம்பித்தேன். சேவை செய்வது எனக்கு மன நிம்மதி தரும். யாரும் கஷ்டப்படக் கூடாது என்பது எங்க அப்பாவின் எண்ணம். அந்த எண்ணம் எனக்கும் உள்ளது. நான் சினிமா துறையிலும் நிறைய வெறுப்புகளைச் சம்பாதித்தேன்.
நாம் கட்சியில் பயணம் செய்யும் போது கட்சியும் நம்முடன் தான் பயணம் செய்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது அண்ணாமலை களை எடுக்கணும்னு பேசி வந்தார். அதில் மட்டும் தான் நம்பர் ஒன்னாக இருந்தார். இதைப் பற்றிய புரிதல் என்பது கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஏற்பட்டது. இதைத் தவிர கட்சிக்கு எத்தனை பேரை கொண்டுவரப் போகிறோம், கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்கிறோம் என்பதில் அண்ணாமலை கவனம் செலுத்துவதில்லை. அந்த வகையில் என் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் நான் என்ன எழுதினாலும் தவறாக கமெண்ட் செய்தார்கள். தெலங்கானாவில் நாய் ஒன்று நான்கு வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற சம்பவத்தை பற்றி எழுதிய போதும் இவ்வாறே கமெண்ட் செய்தார்கள். இந்த கமெண்டுகள் எல்லாம் என்னை எதிர்த்த கட்சிகளிடம் இருந்து வரவில்லை. நான் பயணித்த கட்சியிடம் இருந்தே வருகிறது. இது ஒரு வெறுப்பு அரசியல்.
கட்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு என்னை விமர்சித்து கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை தவறாக இருக்கிறது. பெண்களுக்கு அனைத்து கட்சிகளிலும் சில கசப்பான விஷயங்கள் இருக்கும் பாஜகவில் தலைவரே அப்படி செய்கிறார்கள் என்பதில் தான் வருத்தம். பெண்களை கட்சி பாதுகாக்கும். ஆனால், இப்போது உள்ள தலைவர் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். தலைவர் என்ன செய்தாலும் சரி என்று சொல்ல ஒரு குழுவினர் இருப்பார்கள். எனக்காக இரண்டு, மூன்று பேர் கேள்வி கேட்டதாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பெண்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அண்ணாமலை நினைக்கிறார்.
ஈரோடு தேர்தலில் அண்ணாமலையும் நிற்கட்டும், நானும் நிற்கிறேன் என்றேன். பாஜகவுக்கு தனித்து நிற்கும் வலிமை இருக்கிறது என்றால் அண்ணாமலையை தேர்தலில் நில்லுங்கள் என்று சொல்லுகிறேன். உண்மையில் பாஜகவுக்கு வலிமை இருக்கிறது என்று பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அதனை நிரூபியுங்கள் என்று தான் சொல்கிறேன். இன்னைக்கு ராணுவ வீரருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிற அண்ணாமலை, விமானத்தில் அவசரகால கதவை திறக்கும்போது பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை யோசிச்சாரா.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். மன்னிப்பு கேட்பது மனிதத் தன்மை. மன்னிப்பது என்பது தெய்வத் தன்மை. யாரெல்லாம் எனக்கு குரல் கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் தான் குரல் கொடுத்தார்கள். திருமாவளவன் மீது எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. திருமாவளவன் பற்றி முன்பு பேசியது தவறு என்பதை இந்த சந்திப்புக்கு முன்பே நான் உணர்ந்துவிட்டேன். உலகத்தில் உள்ள பெண் ஆளுமைகள் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். சாவித்திரி பாய் பூலே, ஜெயலலிதா போன்றவர்களை முன் உதாரணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். என்னுடைய முந்தைய பேச்சுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அந்த பெண்மணி மேல் எந்த கீறலும் ஏற்படக் கூடாது என்பதில் திருமாவளவன் கவனமாக இருந்தார்கள். இது தான் சரியான அரசியல். திருமாவளவன் மட்டும் ஆதரவு தரவில்லை. சீமானும் ஆதரவு தெரிவித்து ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்கள். கிருஷ்ணசாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்கள்" என தெரிவித்து உள்ளார்.