கரோனா முதல் அலையிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு இந்தியா திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை, மேலும் சில மாதங்களுக்கு இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டது. அதன் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கிய நிலையில், திரைத்துறையும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. 'எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என்பதுபோல சில சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்களும் கோலிவுட்டில் நடந்தன. அதில் முக்கிய சினிமா மொமென்ட்ஸ்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
ஜெய் பீம் சர்ச்சை
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ரசிகர்கள், விமர்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைக் குவித்த இப்படம், தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. படத்தின் கதை பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட ரசிகர்களை எல்லாம் ரசிக்கவைத்திருந்தாலும், சீனுக்கு சீன் குறியீடு பார்க்கும் நம்ம ஊர்க்காரர்கள் இதிலும் சில குறியீடுகளைக் கண்டுபிடிக்க, அது சர்ச்சையாகிப்போனது. குறிப்பாக, படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி வன்னியர் அமைப்புகள் கண்டனங்களை எழுப்பினர். மேலும், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த அக்னி கலசக் காலண்டரை நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பின், அந்தக் காலண்டர் நீக்கப்பட்டு வேறு காலண்டர் பொருத்தப்பட்டது. புதிதாக பொருத்தப்பட்ட காலண்டரில் லட்சுமி படம் இருக்க... உண்மைக்கதையில் வரும் போலீஸ் அதிகாரி கிறிஸ்தவராக இருக்கும்போது அவரை இந்துவாக காட்டியது ஏன் எனக் கேள்வியெழுப்பி, எச்.ராஜா அண்ட் கோ கண்டனங்களை தெரிவித்தனர். பதிலுக்கு பதில் அறிக்கைகள், காரசார விவாதங்கள் என அனல்பறந்த இந்த விவகாரம் சில வாரங்களில் மெல்ல காணாமல்போனது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில், திரையிலும் தரையிலும் சூர்யா வைத்த பிரதிவாதங்களும், படத்திற்கு கிடைத்த வரவேற்பும் இவ்வாண்டில் மறக்க முடியாத முக்கியமான சினிமா மொமெண்ட்.
சிம்பு ரிட்டர்ன்ஸ்
சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு திரைப்படம் உருவாகவுள்ளதாகக் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் படம் 2019ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் படு தோல்வியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சிம்பு ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. பின், எதிர்பாராத விதமாக அந்தப் படத்தில் இருந்து சிம்பு விலக... மகாமாநாடு பட அறிவிப்பை டி.ஆர். வெளியிட... மீண்டும் சிம்பு படத்தில் இணைய... என நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது. கரோனா சூழல்களுக்கு இடையே மிக எச்சரிக்கையுடன் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, கரோனா சூழல், தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கல் என இரண்டு முறை ரிலீஸை ஒத்திவைத்ததது. வந்தான் சுட்டான் செத்தான் ரிபீட்டு என்ற மோடிலேயே ரீலிஸ் இழுத்துக் கொண்டிருக்க... ஒரு வழியாக நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகியது. வெளியானது மட்டுமா, ப்ளாக்பஸ்டர் ஹிட்டும் அடித்தது. சமீபமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த சிம்புவிற்கு இந்த மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடாகவே அமைந்தது.
அஷ்வின் பேச்சு
குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வினின் கோலிவுட் என்ட்ரியான 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் பேசிய அஷ்வின், இதுவரை 40 கதை கேட்டு நான் தூங்கிவிட்டேன் எனப் பேசிவிட... ஒரே நைட்டில் மீம் கிரியேட்டர்களின் பசிக்குத் தீனியாகி, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் உள்ளானார். அதே நேரத்தில் ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் விடுங்கப்பா... என அஷ்வினுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. அஷ்வின் மீதான தங்கள் பொறாமையை இப்படி தீர்த்துக்கொள்கிறார்கள் எனக் கூறி நகர்ந்தனர் இந்த மீம்ஸ்களால் விரக்தியடைந்த அஷ்வினின் பெண் ரசிகைகள். இப்படி, அஷ்வின் மீம்ஸ்களால் சோசியல் மீடியாக்கள் நிரம்பிகொண்டிருக்க, பிரச்சனையின் தீவிரத்தன்மை அறிந்து தன்னுடைய பேச்சிற்கு உடனே வருத்தம் தெரிவித்தார் அவர். எது எப்படியோ படத்திற்கு நல்ல விளம்பரம்தான்.
பட்டத்தை விட்ட அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவுள்ளது. வலிமை அப்டேட் கேட்டு சமூகவலைதளங்களில் பல வகையில் அட்ராசிட்டி செய்துவந்த அஜித் ரசிகர்கள், தல பட்டம் தொடர்பாக தோனி ரசிகர்களுடனும் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டுவந்தனர். இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் காரசாரமாக போய்க்கொண்டிருந்த சூழலில், தன்னுடைய தல பட்டத்தைத் துறப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் நடிகர் அஜித். அந்த அறிக்கையில் இனி தன்னை அஜித் என்றோ ஏ.கே. என்றோ அழைப்பதைத்தான் தான் விரும்புவதாகக் குறிப்பிட, வேறு வழியின்றி ரசிகர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். என்னதான் அஜித் தனது பட்டத்தை துறந்தாலும், வலிமை மீதான எதிர்பார்ப்பு டாப் கியரில் பறந்துகொண்டுதான் இருக்கிறது.
பூமியும் ஃபார்வர்ட் மெசேஜ்களும்
லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தி உருவான பூமி திரைப்படம், நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இப்படம் ஜெயம் ரவியின் 25ஆவது படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஃபேமிலி க்ரூப் ஃபார்வர்ட் மெசேஜ்கள், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை டைப் டயலாக்குகள் என்ற ஃபார்மட்டில் கதையை உருவாக்கி மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்ட் கொடுத்தார் இயக்குநர் லக்ஷ்மன். பூமி படத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் வந்த மீம்ஸ்களைக் கண்ட கோடம்பாக்க டோரண்டினோக்கள், "விவசாய கதைகளையும் கார்ப்பரேட் எதிர்ப்பு கதைகளையும் தூக்கி ஓரம் வைத்துவிடுவதுதான் நல்லது" என யோசிக்குமளவுக்கு படத்தை கலாய்த்து தள்ளிவிட்டனர் இணையவாசிகள். இப்படியான கலாய்ப்புகள் எக்கச்சக்கம் வந்தாலும், படம் பேசிய புரட்சி வசனங்களைத் தங்களது ஃபேமிலி க்ரூப்பிற்கு ஃபார்வேர்ட் செய்து "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" என்று சிலாகிக்கவும் செய்தனர் சில சினிமா ரசிகர்கள்.
ஆன்டி இண்டியன்
சர்ச்சைக்குரிய யூ-டியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ஆன்டி இண்டியன் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படங்களுக்கு தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் கொடுத்துவரும் ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படம் என்பதால் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களைவிட கோலிவுட் தயாரிப்பு வட்டாரம் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. குறைவான நாட்களில் மொத்த படத்தையும் எடுத்து ஆச்சர்யத்தை கொடுத்த ப்ளுசட்டை மாறனுக்கு தணிக்கை சான்று தரமுடியாது எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தது சென்சார் குழு. பின், பெங்களூரில் படம் பார்த்த ரிவைசிங் கமிட்டி, 38 கட் கொடுக்க அதற்கு தயாரிப்பு தரப்பு உடன்படவில்லை. அடுத்த முயற்சியாக ட்ரிபியூனல் கமிட்டியை அணுக முடிவெடுக்க, துரதிர்ஷ்டவசமாக ட்ரிபியூனல் அமைப்பு அந்த நேரத்தில் கலைக்கப்பட்டது. பின், நீதிமன்ற சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, படம் திரைக்கு வந்தது. மேக்கிங் வகையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மற்றபடி படம் ஓகே ரகம்தான். எனவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி காத்துக்கொண்டிருந்த கோடம்பாக்க தயாரிப்பு வட்டாரம் சைலன்ட் மோடில் இருக்க, நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற மோடில் அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார் ப்ளுசட்டை மாறன்.
ஆண்களுக்கு அமைப்பெல்லாம் இருக்கா..?
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் பெரிய தொகையைக் கல்லாகட்டிவிட்டது. இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் வெகுவாக கவனம் ஈர்த்தன. குறிப்பாக சமந்தா நடனம் ஆடியிருந்த 'ஊ சொல்றியா... ஊஊ சொல்றியா...' குத்து பாடல் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது. அதுவும் தமிழில் ஆண்ட்ரியாவின் குரலில் வெளியான இப்பாடலை ரிப்பீட் மோடில் போட்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் நம்மூர் இளைஞர்கள். ஆனால், இப்பாடலில் ஆண்களை வக்கிரப் புத்தியுள்ளவராக சித்தரித்திருப்பதாகக் கூறி ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இவ்வளவு அளப்பறைகளுக்கு மத்தியிலும் ரசிகர்களிடமிருந்து எழுந்த முதல் கேள்வி, "ஆண்களுக்கு சங்கமெல்லாம் இருக்கா நம்மூர்ல..?" என்பதுதான்.
சமந்தா விவாகரத்து
பிரபல நடிகை சமந்தாவிற்கும் டோலிவுட் நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்தத் திருமணத்தை இந்திய திரையுலகமே திரும்பிப்பார்த்தது. க்யூட் லவ்விங் கப்புள்ஸ் என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் பதிவிட்டு வந்தார் சமந்தா. மூன்றாண்டுகள் கடந்து சுமூகமாகச் சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பிக்க... இருவருமே இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். பின்னர், நாங்கள் விவாகரத்து செய்கிறோம் என இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஃபேமிலி மேன் வெப் தொடர் சர்ச்சை, விவாகரத்து, புஷ்பா படத்தில் குத்து பாடல் எனப் பல சர்ச்சைகள் சமந்தாவைச் சுற்றி இருந்தாலும், ஹாலிவுட் அறிமுகம், சிறந்த நடிப்புக்கான விருதுகள் என 2021இல் ஸ்பாட்லைட்டை தன்னை நோக்கியே கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டார் சமந்தா.
கூழாங்கல்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். முதலில் வேறு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த இப்படம், பின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பல விருதுகளை வென்றுள்ள நிலையில், இந்தியா சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும், ஆஸ்கர் கமிட்டி தேர்வு செய்த சிறந்த வெளிநாட்டு படங்களின் இறுதி பட்டியலில் கூழாங்கல் இடம்பெறவில்லை. இந்திய சினிமாவின் ஆஸ்கர் தாகத்தை இந்தக் கூழாங்கல் தணிக்க தவறியிருந்தாலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் உள்ளது.
டாக்டர் வெற்றி
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரியான சிவகார்த்திகேயன், மிகக்குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டத்தை உருவாக்கிவிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததோடு, 100 கோடி கிளப்பிலும் அவருக்கு ஒரு சீட்டை போட்டுக்கொடுத்துவிட்டது. தனது ட்ரேட்மார்க் எனப்படும் எந்த விஷயங்களையுமே இப்படத்தில் செய்யாமல் அமைதியாகவே வந்து அப்ளாசை அள்ளிவிட்டார் சிவகார்த்திகேயன். நீண்ட நாட்களாகவே பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். ஒரு வழியாக பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார் ரஜினிமுருகன்.
கர்ணன் வருட சர்ச்சை
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குநராக காலடி எடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். அப்படத்தைப் பார்த்து வியந்த தனுஷ், அடுத்த பட வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளோடு இந்த வருடத்தின் மத்தியில் வெளியான கர்ணன், மாபெரும் ஹிட் அடித்தது. கொடியங்குளம் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், 1997ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலம் என்பதால், அதிமுக ஆட்சியில் நடந்த கலவரத்தை திமுக ஆட்சியில் நடந்ததுபோல சித்தரித்துள்ளார்கள் என திமுக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசுபொருளானதை அடுத்து, கதைக்களம் 90களின் பிற்பகுதியில் நடப்பதாக மாற்றப்பட்டது. இதில் திருப்தியடையாத உடன்பிறப்புகள், 90களின் பிற்பகுதி என்றாலும் அது திமுக ஆட்சிக்காலத்தைதான் குறிக்குமே என ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்க... தன்னுடைய அடுத்த பட வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். இப்படியாக படத்தின் வெற்றி, கதை ஏற்படுத்திய சர்ச்சைகள், அதனால் ஏற்பட்ட அரசியல் விவாதங்கள் என இவ்வாண்டின் தவிர்க்க முடியாத படமாகவும், அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாகவும் மாறியது கர்ணன்.