கஜா புயல் கரையை கடந்து 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதன் பாதிப்பிலிருந்து டெல்டா இன்னும் முழுமையாக விடுபட தத்தளித்துக் கொண்டுள்ளது. கஜா புயலின் மையம் மட்டுமே 20 கிலோமீட்டர் விட்டம் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது. வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இந்த கண் பகுதி கடக்கும் இடமே மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடிய பகுதி. அந்த பகுதிகளில் தான் காற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். அப்படி கஜாவின் கண் பகுதி கடந்த இடம்தான் வேதாரணியமும் அதன் சுற்று வட்டார கிராமங்களும்.
நாகைக்கு தெற்கே வேட்டைக்காரனிருப்பு, அவரிக்காடு, புஷ்பவனம் கிராமங்களில் ஆரம்பித்து கோடியக்கரை முனை வரையிலான கடற்கரை கிராமங்கள் மற்றும் செம்போடை, கத்தரிப்புலம், தென்னம்புலம், செட்டிப்புலம், வடமழை என அதிக மரங்கள் கொண்ட அதன் சுற்றுவட்டார கிராமங்கள் அதிக அளவில் பாதிப்பை பெற்றுள்ளன. இந்த பாதிப்பு மருதூர், தகட்டூர், பாமினி வரை நீள்கிறது. அதிக அளவிலான மா, சவுக்கு மற்றும் தென்னை மரங்களை கொண்டிருந்த இந்த பகுதிகளில் தற்பொழுது மிஞ்சி இருப்பது காற்றால் உடைத்து பாழாக்கப்பட்ட மரத்துண்டுகள் மட்டுமே. இருபது, முப்பது ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டு அன்றாட வாழ்வின் வருமானத்திற்கான ஆதாரமாக இருந்த இந்த மரங்கள் விறகுக்கு கூட பயன்படாதா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மீண்டும் இது போன்ற மரங்களை வளர்த்து கொண்டு வர இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும் என்பதே அங்கு நிலவும் உண்மையான கள சூழல்.
நிரந்தர வருமானத்திற்கான சூழலை இழந்து நிற்கும் இந்த விவசாயிகள் 12 நாட்களாக பல்வேறு விஷயங்களுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். மரங்கள் விழுந்து அழுகி நாற்றமடிக்கும் நீர்நிலைகள், சுகாதாரமற்ற குடிநீர், உணவின்மை, மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கும் வீடுகள், நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் குடியேறும் விஷ பூச்சிகள். இது போல அன்றாட வாழ்விற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் எந்த வித நிவாரணங்களும் இன்னும் இந்த பகுதிகளை சரியாக சென்றடையவில்லை என்பதே உண்மை.
பொதுவாகவே விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களை கொண்ட பகுதி தான் டெல்டா. அந்த மாதிரியான ஒரு பகுதியில் அவர்கள் வாழ்வில் மூலதனமாக கருதும் இயற்கை அழிக்கப்பட்டுள்ளது என்பது அவர்கள் வாழ்வே அழிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சற்றும் குறைவில்லாத கூற்றாகவே அமைகிறது. இப்படி அழிந்த மூலதனங்களை கொண்டே அதன் மீது அவர்களது எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டிய சூழல் அங்கு நிலவுகிறது. இவ்வாறான அவர்கள் எதிர்காலத்திற்கு அரசாங்கங்கள் கண்டிப்பாக மிக பெரிய உதவியாக இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் மட்டுமல்ல, அதுவே ஜனநாயகத்தின் நியதீயாகவும் பார்க்கப்படுகிறது.