1790ஆம் ஆண்டு இதே நாளில்தான் (மார்ச்6) பிரிட்டிஷார் நிர்வாக வசதிக்காக மதுரையை மாவட்டமாக அறிவித்தனர். அப்போது இருந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இன்றைய மாவட்டங்கள் அடங்கி இருந்தன. பழமையை விட்டுக்கொடுக்காமல், பழையதை மட்டும் விட்டொழித்துக்கொண்டிருக்கும் தூங்காநகரம்தான் மதுரை. அதன் சிறப்புகளை காண்போம்.
ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும், வெளியூருக்கு வந்துவிட்டால் "நானும் மதுரக்காரன்தான்டா" என்று மதுரைக்காரர்கள் துள்ளலோடு ஒன்று கூடிவிடுவர். அந்தளவிற்கு மதுரைக்காரனும் சரி, மதுரைத் தமிழும் சரி மற்றவர்களையும் கூட இழுக்கும் கவர்ச்சி மிக்கது. உலகின் பழமையான நகரமான மதுரைக்கு இலக்கிய காலம் முதல் இந்தக் காலம்வரை (தூங்காநகரம், மல்லிகை மாநகர், கூடல்மாநகர், நான்மாடக்கூடல், ஆளவாய், மருதை, மதிரை, மத்திரை, ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர், மாடமதுரை, உரைசால் மதுரை, தென்தமிழ்நாட்டு தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை) பல பெயர்கள் உண்டு. மதுரைக்கு மட்டும் இங்கு வரலாறு இல்லை, மதுரையில் இருக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இலக்கியம், ஆன்மிகம், புராணம், வரலாறு, புனைவு, வாழ்வியல், பாரம்பரியம் என அனைத்திற்கும் ஏதாவது ஒரு நினைவுச்சின்னம் மதுரையில் நிச்சயம் காணலாம்.
சிலப்பதிகாரம், நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, கி.மு. 300ல் மெகஸ்தனிஸ், கி.மு. 60ல் நிகோலஸ் தமாஸ்கஸ், கி.பி. 77ல் பிளினி, கி.பி. 140ல் தாலமி, கி.பி.1270ல் மார்க்கோபோலோ ஆகியோர் தங்கள் குறிப்புகளில் மதுரையை குறிப்பிட்டுள்ளனர். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கம் (கடைச்சங்கம்) வைத்து தமிழ்வளர்த்ததும் மதுரையில்தான், ஒரு மொழியை தாயாக எண்ணி சிலை திறக்கப்பட்ட இடமும் மதுரைதான். இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் நடந்த மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் என நாம் பெருமையாக கூறுகிறோம். அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டிற்கு உலக பிரசித்தி பெற்றது மதுரை. மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, பேரையூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதை காண வெளிநாட்டுப் பயணிகளும் வருவர்.
மதுரை ஒவ்வொரு முறை விரிவு படுத்தப்பட்ட போதும் அதன் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்படி கடைசியாக எஞ்சி இருப்பது மேலவாசல் கோட்டை கொத்தளம் மட்டும்தான். இங்கிருக்கும் திருமலை நாயக்கர் மஹால் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்று. 52 அடியில் 248 தூண்களைக் கொண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய அரண்மனையாகும். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மன்னனான மருதநாயகம் என்ற யூசுப்கான் 1764ம் ஆண்டு மதுரை சம்மட்டிபுரத்தில்தான் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார். அவரது உடல் மட்டும் அங்கு புதைக்கப்பட்டது. காந்தியை கோட்ஸே சுட்டுக்கொன்றபோது, காந்தி அணிந்திருந்த மேலாடை இரத்த கரையுடன் தமுக்கம் மைதானத்தில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ளது. இது தவிர காந்தி பயன்படுத்திய 14 பொருட்கள் அங்கு உள்ளன. காந்தி ஏழை மக்களைப் பார்த்து அரைநிர்வாணமாக மாறிய இடமும் மதுரைதான்.
மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று, உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்க ஒரு வலைத்தளத்தால் பரிந்துரைக்கப்பட்ட இடம், மதுரையின் மையம். இக்கோவிலில் இருக்கும் பொற்தாமரைக்குளம் சிறப்பு வாய்ந்ததாகும். மதுரையின் அமைப்பும் தாமரை மொட்டைப்போன்றுதான் இருக்கும். கோவிலைச்சுற்றியுள்ள வீதிகளும் மொட்டில் இருந்து பிரியும் இதழ்கள் போன்றுதான் இருக்கும். அழகர் கோவில் 108 வைணவ தளங்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை ஆறே மக்கள் கடலில் மூழ்கும். முருகனின் அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய இரு வீடுகள் மதுரையில்தான் உள்ளன. கீழக்குயில்குடி என்னும் இடத்தில் சமணப்படுகைகள், சிற்பங்கள் ஆகியனவும் உள்ளன. கோரிப்பாளையம் காஜிமார் பெரிய மசூதி ஒரே நேரத்தில் 2500 நபர்கள் தொழும் அளவிற்கு பெரிய மசூதி ஆகும். ரோமன் கத்தோலிக்க ஆலயமும் இங்கு புகழ்பெற்றதாகும்.
ஆயிரம் குளிர்பானங்கள் வந்தபோதும் பழமைமாறாத ஜிகர்தண்டா புகழ்பெற்று இருப்பதும் மதுரையில்தான். மாடுகட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்தவன் அந்தக்கால மதுரைக்காரன். ஆனால் இன்று, வைகை வற்றிய கிரிக்கெட் மைதானமாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் சாக்கடையாகப் பாய்கிறது. இவற்றைத் தாண்டி நல்ல தண்ணீர் பாய்ந்தாலும் அது குழந்தை தாண்டும் அளவிலேயே இருக்கிறது. நாம் இன்று "proud to be a maduraikaran" என்று வெளியே சொன்னாலும், மதுரை கொஞ்சம் கொஞ்சமாக தன்னியல்பை இழந்து வருகிறது. மதுரையை மீட்டெடுக்க மதுரைக்காரர்கள்தான் முயற்சி செய்யவேண்டும். நானும் மதுரைக்காரன்தான்டா...