நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், தமிழ் வரலாறு பேசப்படவேண்டிய அவசியம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
தமிழ், தமிழர் வரலாறு பற்றி பேசினால் இதுவெல்லாம் தேவையா எனத் தமிழர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கான காரணம் கேட்டால், ஏற்கனவே தமிழர்கள் பழம்பெருமை பேசிப்பேசி வீழ்ந்துவிட்டார்கள்; இனியும் இது தேவையா என்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பழம்பெருமை பேசிப்பேசி தமிழன் வீணாகிப்போனான் என்ற கருத்தைப் பொதுமக்களின் மனங்களில் சிலர் தொடர்ந்து புகுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரென்று பார்த்தால், தமிழர்களைவிட தமிழை நன்றாகப் படித்து, தமிழர் வரலாற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, அதில் வியந்து பொறாமைப்பட்டு, தமிழ் மூலமே தமிழ் மக்கள் மத்தியில் தமிழுக்கு எதிரான வேலையைச் செய்யக்கூடிய ஆட்களாக இருக்கிறார்கள்.
பழம்பெருமை பேசி வீணாகிப்போன இனங்களைவிட தங்களுடைய வரலாற்றைப் பேசாமல் அழிந்துபோன இனங்கள்தான் அதிகம் உள்ளன. அன்று எப்படி வாழ்ந்தோம்; இன்று எப்படி வாழ்கிறோம் என்பதை அறிந்துகொள்வதற்காகப் பழம்பெருமை பேசுவதில் தவறில்லை. இன்றைக்கு வாழ்வதற்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தமிழ் வரலாற்றை நான் தெரிந்துகொண்டு என்னவாகப் போகிறது என சிலர் கேட்கின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான ஒன்றாகத் தெரியலாம். ஆனால், உண்மையில் அது நியாயமானதல்ல.
இந்திய நாட்டின் ஒரு பகுதியாக தமிழினம் இருந்துவருகிறது. ஆனால், இந்திய தேசியம் தமிழினத்தை, தமிழ் மொழியை, தமிழ் அடையாளங்களை ஏதோவொரு வகையில் மறைப்பது, புறக்கணிப்பது, இருட்டடிப்பு செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. இதில் கட்சி வேறுபாடு என்பதெல்லாம் கிடையாது. ஒரு கட்சி இதை வேகமாகச் செய்கிறது என்றால் மற்றொரு கட்சி மெதுவாகச் செய்கிறது. இந்தியத் தேசிய அரசியல் என்பது காலங்காலமாக இப்படித்தான் இருக்கிறது. இதற்கான காரணத்தை அறிய நம்முடைய வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வேண்டும்.
பிற படையெடுப்புகள் மற்றும் வெள்ளைக்காரர்கள் நம்முடைய நிலத்திற்கு வருவதற்கு முன்பு நமக்கும் வட இந்தியாவிற்கும் பெரிய அளவில் தொடர்பு இருந்ததில்லை. வடக்கே இருந்துவந்த பெரிய பேரரசுகளில் ஒன்றான மௌரியப் பேரரசுகூட தமிழர்களைப் பகைத்துக்கொள்ளவில்லை. மிகப்பெரிய பேரரசான அவுரங்கசிப் பேரரசின் எல்லை ஆந்திராவோடு முடிந்துவிடும். அவர்களும் தமிழ் நிலத்தில் இருந்த மன்னர்களோடு நட்பு பாராட்டியுள்ளனர். இன்றைய இந்திய நிலப்பரப்பில் கலாச்சார ரீதியாக, வளரீதியாக, தொழில்ரீதியாகச் செழித்து இருந்த இனங்களில் முதன்மையான இனமாகவும் மூத்த இனமாகவும் தமிழினம் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் வெள்ளைக்காரர்கள் கோழிக்கோடு, சென்னை, கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். வெள்ளைக்காரர்கள் கணக்குப்படி நிலம் எங்கு முடிகிறதோ அதுவரை ஒரு நாடு. தமிழகத்திலிருந்து பிரிந்து இலங்கை தனிநாடானது இப்படித்தான். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரிவரை மொத்த துணைக்கண்டமும் ஆங்கிலேயர் வசமானது. இந்தப் பகுதிக்குள் வசித்த அனைவருக்கும் வெள்ளைக்காரன் பொது எதிரியானதால் அனைவரும் சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தோம். வெள்ளைக்காரர்கள் ஆக்கிரமித்தபடி பார்த்தால் சென்னைதான் இந்தியாவின் தலைநகராக இருந்திருக்கவேண்டும். தமிழகத்திற்கு அருகில் கடல் இருப்பதால் புவியியல் ரீதியாகவே அது வெள்ளையர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. மேலும், அண்டை நாடான இலங்கையும் அவர்கள் வசமே இருந்தது. ஆனால், டெல்லிக்கு மேலே வெள்ளையர்களின் ஆளுகைக்கு உட்படாத பல நாடுகள் இருந்தன. ஆகையால், தலைநகரை டெல்லியில் அமைப்பதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று கருதி டெல்லியைத் தலைநகராக அறிவித்து ஆட்சி செய்தார்கள். சுதந்திரம் அடைந்த பிறகும் டெல்லியே தலைநகராகத் தொடர்கிறது.
அங்கிருந்து இன்று வரும் திட்டங்கள் அனைத்தும் வட இந்தியருக்கு எது நல்லதோ அதை நாமளும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வகையில் உள்ளன. இதனால்தான் சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு எதிரான சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இதைத்தான் வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது என அண்ணா குறிப்பிட்டார். அவர்களுக்கு எது நியாயமாகப்படுகிறதோ அதுவே பொது நியாயம் எனக் கட்டமைக்கப்படுகிறது. அவர்களுடைய வரலாற்றை உயர்த்துவதற்கும் மற்றவர்களின் வரலாற்றை மறைப்பதற்கும் இந்தியத்தேசியம் என்ற உணர்வை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்து அதையொட்டியே திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் வேலுநாச்சியாரை இருட்டடிப்பு செய்துவிட்டு மிகப்பெரிய வீராங்கனை ஜான்சி ராணி என அவர்களால் வசதியாகக் கூறமுடிகிறது. வேலூர் கலகத்தை மறைத்துவிட்டு முதல் இந்திய சுதந்திரப்போர் என மீரட் கலகத்தைக் கூறுவதும், பூலித்தேவன், தீரன் சின்னமலை, மருது சகோதர்களை மறைத்துவிட்டு வெள்ளைக்காரர்களை முதலில் எதிர்த்தவர்கள் என அவர்களுக்கு ஏற்ற ஒரு பட்டியலைக் காண்பிப்பதும் இந்த அடிப்படையில்தான்.