Skip to main content

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா! காவல்துறைக்குள் ஊடுருவிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்! EXCLUSIVE படங்களுடன்

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

friendofpolice

 

 

சாத்தான்குளம் போலீசாருடன் சேர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை தாக்கிய "ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்'’ அமைப்புக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது அதிகாரப்பூர்வமான அமைப்பா என மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பியுள்ளது. ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இருப்பவர்களில் பலர் இந்துத்துவா சக்தியின் துணை அமைப்பான சேவா பாரதியைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றம்சாட்டப்படுவதுடன், அது தொடர்பான சுவரொட்டிகளும் வெளியாயின. காவல்துறைக்கு உதவுவது போல, ஆட்சி நிர்வாகத்துக்குள் மறைமுகமாக ஊடுருவுகிறதா ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற கேள்வியுடன் கள விசாரணையில் இறங்கினோம்.

 

"திருவிழாக் கூட்டத்தைச் சரிசெய்வதில் தொடங்கி, வாகனத் தணிக்கையில் உதவுவது, 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்குத் துணையாகச் செல்வது என்பது வரை பலவற்றிலும் பங்கெடுக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை 1993-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.யாகப் பணியாற்றிய பிரதீப் பிலீப் தொடங்கி வைத்தார். அப்போதைய ஜெ., ஆட்சியில் இது பரவலாக்கப்பட்ட நிலையில், தற்போது காவல்துறைக்கான அடியாளாக அந்த அமைப்பு வளர்ந்து, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளின் கைப்பாவையாகி இருக்கிறது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

போலீசாரின் கையில் இருக்கும் நீண்ட கழிகளைக் கொண்டு பயணிகளைத் தடுத்து நிறுத்தி, மிரட்டும் தொனியில் நடந்துகொள்வதைக் கண்கூடாகவே பார்க்க முடியும். காவலர்களுக்கு வழங்கப்படும் வாக்கி-டாக்கியையும் தாங்களே வைத்துக் கொண்டு ரியல் போலீஸ் போல சீன் போடும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆட்களும் இருக்கிறார்கள்.

 

பொதுமக்களை, "யோவ்! போய்யா... வாய்யா; வாடா, போடா'' என ஒருமையில் வசை பாடியபடி, காவல்துறையின் கூலிப்படையாக இயங்கும் இவர்கள் குறித்து காவலர்களிடம் புகாரளித்தால், "உட்கார்ந்திருக்கும் இடத்திற்கே மாமூலை வசூலித்துக் கொடுப்பவர்களை எதற்காகக் கண்டிக்க வேண்டும்.?'' எனக் கண்டும் காணாமல் இருப்பார்கள். அதனை இனம் கண்டு, அட்வாண்டேஜாகக் கொண்டு தனது கருத்துகளை ஊடுருவச் செய்கிறது சேவாபாரதி எனும் இந்துத்துவா அமைப்பு.

 

"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சேவாபாரதி அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் காவல் துறையினரின் துணையோடு ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் பணியமர்த்தப்பட்டனர். போலீசுடன் சேர்ந்து இவர்களும் அதிகாரத்தைக் தங்கள் கையில் எடுத்துச் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்துத் தந்தை மகன் இருவரையும் கொடூரமாகத் தாக்கியதன் காரணமாக, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சேவா பாரதி அமைப்பின் இளைஞர்களைப் போல் தமிழகத்தின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், வெளியில் தெரியாத பாஜக+ஆர்.எஸ்.எஸ்ஸின் பதினெட்டிற்கும் மேற்பட்ட உள் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்கள் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் அரசியல் ரீதியாக வளர்ச்சி பெறுவதற்கு எடப்பாடி அரசின் காவல்துறையை மறைமுகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இதன் செயல்பாடு உள்ளது.

 

Sathankulam

 

முதல்கட்டமாக, பிற கட்சிகளின் அரசியல் தலைவர்கள், பிற மதங்களைச் சார்ந்த அமைப்புகள், ஊடகத்துறையினரின் விமர்சனங்கள், சினிமா உள்ளிட்ட கலைத்துறையில் வெளிப்படும் விமர்சனங்கள், இடதுசாரி-பெரியாரிய பார்வை கொண்டவர்கள், கடவுள் நம்பிக்கையுடன் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் எனப் பலரது நடவடிக்கைகளையும் உளவு பார்க்கும் விதமாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையில் ஊடுருவி இதனைச் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நிர்வாகத்தைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு எதிரானவர்களைச் சட்ட ரீதியாகவும்-சட்டத்திற்குப் புறம்பாகவும் வேட்டையாடும் நீண்டகாலத் திட்டமும் இதில் அடக்கம்.

 

இதற்குத் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் முழு ஒத்துழைப்பு இருந்துள்ளது என்கிறார்கள் காவல்துறையில் உள்ளவர்களே. குறிப்பாக, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவின் பணிகள், தேர்வுமுறைகள், கட்டுப்பாடுகள், ஊதியம், கல்வி தகுதிகள், உடற்தகுதி போன்ற பல்வேறு செயலாக்க விவரங்களைத் தமிழக அரசு முறையாக வரைமுறை செய்யாமல் இவ்வாறான சேவாபாரதி பின்னணியுடையவர்களைத் தேர்வு செய்தது சட்டவரை முறைக்கு எதிரானது.

 

friends of police

 

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படாமல் கலைக்கப்பட்ட இத்தகைய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கண்காணிப்புப் பிரிவைத் தற்போது தமிழக காவல்துறையில் பணியமர்த்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. பா.ஜ.க.வின் பின்னணியில்தான் தற்போது சேவாபாரதி அமைப்பினரை மையப்படுத்தி ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனை உடனடியாக கலைப்பதே தமிழக அரசிற்கும் மக்களுக்கும் ஏதுவான ஒன்றாக இருக்கும். தவறும் பட்சத்தில் சேவாபாரதி அமைப்பு போன்றவற்றின் மூலம் பிரிவினைவாத சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச் செயல்கள் என நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டுவிடும் என்பது மறுப்பதற்கில்லை'' என்கிறார் சமூகச் செயற்பாட்டாளரான அக்ரி பரமசிவன். இயற்கைப் பேரிடர்கள் நெருக்கும் காலத்தில் களத்தில் நின்று சேவையாற்ற அனைத்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் முன்வருவதைச் சென்னை வெள்ளம், கஜா புயல், தற்போது கரோனாவால் இறந்த உடல்களைப் புதைப்பது வரை பார்க்கிறோம். ஆனால், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் மாற்று மதத்தினரைச் சேர்ந்த இளைஞர்களை சேர்க்கக்கூடாது என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.

 

மாநகராட்சிக்கு சத்துணவுத் திட்டத்திற்காகத்தான், காவல்துறைக்கு உதவ சேவா பாரதி என எல்லா மட்டங்களிலும் ஒரு மதத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கி, மற்ற மதத்தினரைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை எடப்பாடி அரசு செய்து வருகிறது. இந்தக்கூற்றிற்கு வலுசேர்க்கும் விதமாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிற்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில், குறிப்பிட்ட மதத்தினரைத் தவிர்த்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மற்றும் சேவா பாரதியின் பெயர் பொறித்த அடையாள அட்டைகளே தென்மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைக் காவல்துறை உயரதிகாரி கையெழுத்திட்டு வழங்குவதுதான் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

 

முக்கியமாக நெல்லை மாவட்டத்தில் வெளிப்படையாக சேவா பாரதி- ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் கரோனா விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரமோ, "இங்கே ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போல, பா.ஜ.க ஆளும் உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் மித்ரா இருக்கின்றது. அதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அமைப்பான ஹிந்து யுவ வாகினி எனும் இந்துத்துவா அமைப்பு ஊடுருவி செயல்பட்டு வருகின்றது. போலீஸ் மித்ராவினைக் கொண்டே மதரீதியாகச் சிறுபான்மையினர்மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது உ.பி. அரசு. அதுபோல் இந்த சேவா பாரதி அமைப்பும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை மட்டுமின்றி, காவல்துறையையும் இயக்கி வருகிறதா என்கின்ற சந்தேகம் உண்டு.

 

http://onelink.to/nknapp

 

வெடிகுண்டு தயாரித்ததற்காகவும், சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் நடத்தியதாகவும் அறிக்கை பெறப்பட்டு இந்த சேவாபாரதி அமைப்பினை 2003ஆம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் தடை செய்ய திக்விஜய் சிங் அரசு பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், இந்துத்துவா அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் சேவா பாரதியை இணைத்து, அதற்கு நெல்லை துணைக் காவல் கண்காணிப்பாளர் கையெழுத்திட்டு வழங்கியுள்ள அடையாள அட்டை எப்படி வந்தது? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈடுபட்ட ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினரைக் கைது செய்வதோடு அவர்களின் ஊக்கியாக இருந்த சேவாபாரதி அமைப்பினரையும் கைது செய்ய வேண்டுமென்பதே என்னுடைய கோரிக்கை." என்கிறார் அவர்.

 

அது அத்தனை எளிதாக நடந்து விடுமா? சேவா பாரதி அமைப்பின் விழாவில் ஆளுநர் பங்கேற்றுச் சிறப்பித்துள்ள நிலையில், அதன் செல்வாக்கு எத்தகையது என்பதை போலீஸின் வாக்கிடாக்கியையும் நீண்ட கழியையும் கையில் வைத்திருக்கும் அந்த அமைப்பினர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.